ரேசன் பொருட்களில் கருணாநிதியின் படம் - கவனிக்குமா தேர்தல் ஆணையம்?

வெள்ளிக்கிழமை, 4 மார்ச் 2011      தமிழகம்
tmm ration

 

திருமங்கலம்,மார்ச்.4 - தமிழக சட்டமன்ற தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் விதிகள் அமுலுக்கு வந்து விட்ட நிலையில் ரேசன் கடைகளில் வழங்கப்பட்டு வரும் அத்தியாவசியப் பொருட்களின் பாக்கெட்டுகளில் கருணாநிதியின் படம் இடம் பெற்றுள்ளது. இதை தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்த வேண்டும் என்று பல தரப்பினரும் வலியுறுத்தி உள்ளனர். 

தமிழக ரேசன் கடைகளில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் அத்தியாவசியப் பொருட்களின் பாக்கெட்டுகளில் முதல்வர் கருணாநிதியின் படம் அச்சிடப்பட்டுள்ளது. சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்ற வாசகங்களுடன் கருணாநிதியின் படம் அச்சிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில் தமிழக சட்டசபைக்கு அடுத்த மாதம் 13 ம் தேதி தேர்தல் நடைபெறவிருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து தேர்தல் விதிகள் உடனடியாக அமுலுக்கு வந்து விட்டன. ஆனால் ஆளும் கட்சியினர் தேர்தல் விதிமுறைகளை மீறி நடந்து வருவது ஒன்றும் புதிதல்ல என்றாலும் கூட பொது விநியோக திட்டம், நலத்திட்ட உதவிகள் என மக்களை கவர்வதற்கான முயற்சிகள் தி.மு.க.வினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இதற்காக ரேசன் கடைகளில் விற்பனை செய்யப்படும் அத்தியாவசியப் பொருட்களின் பாக்கெட்டுகள் கருணாநிதியின் உருவம் பொறிக்கப்பட்டு தேவைக்கு அதிகமாகவே தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு தொடர்ந்து மக்களுக்கு ரேசன் கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருவது தேர்தல் விதிமுறை மீறல் என அனைத்து தரப்பினரும் குற்றம் சாட்டுகின்றனர். எனவே இந்த பிரச்சினையில் தேர்தல் ஆணையம் தலையிட்டு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் ஆணையம் கவனிக்குமா?

இதை ஷேர் செய்திடுங்கள்: