முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ.- சக்சேனா மீது புகார்

புதன்கிழமை, 7 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப்.7 - பல கோடி ரூபாய் பண மோசடி செய்து அதை திருப்பிக் கேட்ட தன்னை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ.வும், வடசென்னை தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளருமான வி.எஸ்.பாபு, சன்பிக்சர்ஸ் சக்சேனா, அய்யப்பன், வி.எஸ்.பாபு அண்ணன் மகன் தினகரன் ஆகியோர் மீது சினிமா இயக்குநர் சக்தி சிதம்பரம் சென்னை மாநகர காவல் கமிஷனரிடம் புகார் அளித்தார். நேற்று சென்னை எழும்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு இயக்குநர் சக்தி சிதம்பரம் வந்து கமிஷனர் திரிபாதியை சந்தித்து 2 புகார்களை அளித்தார். அதில் ஒரு புகாரில் முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ. மற்றும் முன்னாள் வடசென்னை மாவட்ட செயலாளருமான வி.எஸ்.பாபு மற்றும் அவரது அண்ணன் மகன் ஜெ.தினகரன் ஆகியோர் மீதும், மற்றொரு புகார் சன் பிக்சர்ஸ் நிர்வாகி ஹன்ஸ்ராஜ் சக்சேனா மற்றும் அவரது கூட்டாளி அய்யப்பன் மீதும் அளித்தார். 

முதல் புகாரில் சக்தி சிதம்பரம் தெரிவித்திருப்பதாவது:-

சன் பிக்சர்ஸ் எடுத்து இயக்குநர் சங்கர் இயக்கி ரஜனிகாந்த் நடித்த எந்திரன் படத்தின் செங்கல்பட்டு ஏரியாவில் 8 திரையரங்குகளில் திரையிடும் உரிமையை ரூ.4 கோடி கொடுத்து நான் பெற்றேன். இதை கேள்விபட்டு தன்னை அணுகிய வி.எஸ்.பாபு, தனது அண்ணன் மகன் ஜெ.தினகரன் சினிமா தொழில் செய்ய விருப்பம் உள்ளதால் அவரை எந்திரன் பட விநியோகத்தில் பார்ட்னராக சேர்த்துக் கொள்ளும்படி வற்புறுத்தி உள்ளார். செல்வாக்கு மிக்க பிரமுகர் என்பதால் சக்தி சிதம்பரம் எதுவும் சொல்லாமல் ஒத்துக் கொண்டுள்ளார். 

அதன்பின் படத்தின் வரவு- செலவு கணக்கையும் தினகரனே பார்த்துள்ளார். இதனிடையே சக்தி சிதம்பரத்தின் உறவினர் ஒருவருக்கு சொந்தமான 23 1ற2 சென்ட் நிலம் சுமார் ரூ.4 கோடி மதிப்புள்ளது. ஒரு வங்கியில் ரூ.85 லட்சத்திற்கு அடமானத்தில் இருந்துள்ளது. இந்த நிலத்தை மீட்டு உரிய விலைக்கு விற்க சக்தி சிதம்பரத்திற்கு அவரது உறவினர்கள் அதிகாரம் அளித்துள்ளனர். இந்த அடமான நிலம் பற்றி ஜெ.தினகரனிடம் சக்தி சிதம்பரம் கூறியுள்ளார். உடனே தினகரன் எங்கள் தொழிலே அதுதான், அடமான நிலத்தை மீட்டு விற்றுத் தருவதுதான் எங்கள் வேலை என்று கூறியுள்ளார். 

பின்பு சக்தி சிதம்பரத்திடம் வி.எஸ்.பாபு கோஷ்டியினர் ரூ.4 கோடிக்கு அந்த நிலத்தை விலை பேசி உள்ளனர். முதலில் ரூ.85 லட்சத்தை சக்தி சிதம்பரத்திடம் கொடுத்து நிலப்பத்திரத்தை மீட்டு வரும்படி கூறியுள்ளனர். பத்திரப்பதிவு நடைபெறும்போது மீதி தொகையை தருவதாக கூறியுள்ளனர். சொன்னபடி சக்தி சிதம்பரம் பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளார். ஆனால் பேசியபடி மீதி ரூ.3 கோடியே 15 லட்சத்தை தராமல் வி.எஸ்.பாபு, தினகரன் கோஷ்டியினர் ஏமாற்றி வந்துள்ளனர். 

இதுபற்றி சக்தி சிதம்பரம் நிலத்துக்கான பணம் ரூ.3 கோடியே 15 லட்சம் மற்றும் எந்திரன் விநியோகம் சம்பந்தமான வரவு பணத்தையும் சரிபார்த்து பணத்தை ஒப்படைக்கும்படி வி.எஸ்.பாபு மற்றும் தினகரனிடம் கேட்டுள்ளார். அதற்கு பணம் கிடையாது, பணத்தை கேட்டால் உங்கள் எல்லோரையும் தொலைத்துக் கட்டி விடுவேன். துணை முதல்வர் ஸ்டாலினுக்கும், எனக்கும் உள்ள உறவு உனக்கு தெரியாதா? சினிமா துறையில் இதுவே உனது கடைசி வியாபாரமாகி விடும் என்று மிரட்டி அனுப்பி விட்டனர். 

இதன்பின்பு இதைப்பற்றி யாரிடமும் கூறாமல் மவுனமாக இருந்தவர் அ.தி.மு.க. ஆட்சி வந்ததால் நிலமோசடி பேர்வழிகள் மீது நடவடிக்கை எடுப்போம் என்று முதல்வர் அறிவித்து அதற்கான தனி துறையையே ஏற்படுத்தியதையடுத்து,இதுகுறித்து புகார் அளிக்க எண்ணிய சக்தி சிதம்பரம் நேற்று முன்தினம் மீண்டும் ஒருமுறை வி.எஸ்.பாபுவிடம் பேசி பார்த்துள்ளார். பணத்தை தராவிட்டால் புகார் அளிக்கப் போவதாக கூறியுள்ளார். புகார் அளிக்க வேண்டாம், பணம் தருகிறோம் என்ற தினகரன் அலுவலகத்திற்கு வரவழைத்து கடுமையாக சக்தி சிதம்பரத்தை தாக்கி கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்து துரத்தியுள்ளனர். 

மேற்கண்ட சம்பவங்களை புகாராக எழுதி ரூ.5 கோடி சொத்தை ரூ.85 லட்சம் கொடுத்து அபகரித்த நிலத்தை திரும்ப தரவும், எந்திரன் படத்தின் முதலீடான அசல் தொகை ரூ.4 கோடியை திரும்ப தர வேண்டும் என்று கேட்டு கமிஷனரிடம் சக்தி சிதம்பரம் புகார் அளித்துள்ளார்.  

இதேபோல் இரண்டாவது புகாரில் எந்திரன் படத்தை 8 தியேட்டர்களில் வெளியிட உரிமம் அளித்து சன்பிக்சர்ஸ் சக்சேனா ரூ.4 கோடி வாங்கிக் கொண்டு 7 தியேட்டர்களுக்கு மட்டும் உரிமம் அளித்துள்ளார். ரூ.1.50 கோடி வசூலாகும் முக்கியமான தியேட்டரை ஒப்பந்தப்படி தராமல் ஏமாற்றியுள்ளார். இதனால் சக்தி சிதம்பரத்திற்கு ரூ.1 கோடியே 60 லட்சம் நஷ்டம் ஏற்பட்டதாம். இதுபற்றி நஷ்ட தொகையை சக்தி சிதம்பரம் கேட்டபோது சக்சேனா, அய்யப்பன் மற்றும் சுரேஷ் ஆகியோர் மிரட்டி தாக்கி அனுப்பியுள்ளனர். இதுபற்றி தனது இரண்டாவது புகாரில் சக்தி சிதம்பரம் கூறியுள்ளார். 

வி.எஸ்.பாபு மீதும், சக்சேனா மீதும் இயக்குநர் சக்தி சிதம்பரம் புகார் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதே புகாரை சட்டம்- ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. ஜார்ஜிடமும் சக்தி சிதம்பரம் புகார் அளித்துள்ளதாக தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்: