முக்கிய செய்திகள்

திருச்சியுடன் திருவெறும்ரை இணைத்த வழக்கில் அப்பீல்

சனிக்கிழமை, 24 செப்டம்பர் 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை, செப். 24 - திருச்சி மாநகராட்சியில் திருவெறும்ர் பேரூராட்சியை இணைத்த வழக்கில் அரசாணைகளை ரத்து செய்து நீதிபதி தீர்பாளித்தார்.  இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு ஐகோர்ட்டில் அப்பீல் செய்துள்ளது. இது குறித்த விபரம் வருமாறு:  திருச்சி மாநகராட்சியுடன் திருவெறும்ர் பேரூராட்சி மற்றும் பாப்பாக்குறிச்சி, எல்லக்குடி, கீழ்க்கண்டார் கோட்டை, ஆலத்தூர் ஆகிய ஊராட்சிகளை இணைத்து தமிழக அரசு கடந்த 2010 மற்றும் 2011​ம் ஆண்டுகளில் அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணையை எதிர்த்து திருவெறும்ர் பகுதியைச் சேர்ந்த பாலச்சந்திரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், திருச்சி மாநகராட்சியுடன் திருவெறும்ர் பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளை இணைத்து வெளியிட்ட அரசாணைகளை ரத்து செய்து தீர்ப்பளித்தார்.   இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் அப்பீல் மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் கூறி இருப்பதாவது:

நகராட்சி சட்டத்தின்படி அரசாணை குறித்து பொதுமக்கள் அறியும் வண்ணம் பத்திரிகைகளில் விளம்பரத்தப்படவில்லை என்று கூறி அரசாணையை தனி நீதிபதி ரத்து செய்துள்ளார். ஆனால் மாநகராட்சி சட்டம் பிரிவு 461 மற்றும் 463​ன்படி நகராட்சி விரிவாக்கம் குறித்து பத்திரிகைகளில் விளம்பரம் செய்ய அவசியம் இல்லை என்றும், அரசு கெஜட்டில் அறிவிப்பாணை வெளியிட்டால் போதுமானது என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த சட்டப் பிரிவுகளை கருத்தில் கொள்ள தனி நீதிபதி தவறி விட்டார். ஆகவே தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்யவேண்டும். திருச்சி மாநகராட்சியுடன் திருவெறும்ர் பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளை இணைத்தது தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணைகளை செல்லும் என உத்தரவிட வேண்டும். 

இவ்வாறு அப்பீல் மனுவில் கூறப்பட்டுள்ளது. 

 தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோரை கொண்ட முதல் டிவிசன் பெஞ்ச் முன்பு தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் ஆஜராகி இந்த அப்பீல் மனுவை அவசரம் கருதி உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். 

இதையடுத்து நீதிபதிகள் இந்த வழக்கை திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: