முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுஷ்மா விரதம் எதிரொலி: அத்வானி ரத யாத்திரை பாதையில் மாற்றம்

வியாழக்கிழமை, 13 அக்டோபர் 2011      இந்தியா
Image Unavailable

 

போபால், அக். - 13 - பா.ஜ.க தலைவர் சுஷ்மா சுவராஜ் விரதமிருக்க இருப்பதால் அக்கட்சியின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானியின் ரத யாத்திரையில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  திருமணமான பெண்கள் கணவனின் நீண்ட ஆயுள் வேண்டி காலை முதல் நிலவு வரும் வரை விரதம் இருப்பதே கர்வா சவுத் விரதமாகும். ஊழலுக்கு எதிராக எல்.கே. அத்வானி நடத்தி வரும் ரத யாத்திரை மத்திய பிரதேசத்தில் உள்ள விதிஷா பகுதிக்கு வரும் 15 ம் தேதி செல்லவிருந்தது. இது சுஷ்மா சுவராஜ் போட்டியிட்டு வென்ற நாடாளுமன்ற தொகுதியாகும். ஆனால் அன்றைய தினம் டெல்லியில் சுஷ்மா சுவராஜ் சவுத விரதம் இருக்கப் போவதாக கூறி விட்டதால் அவர் இல்லாத நிலையில் அவரது தொகுதிக்கு செல்வதை அத்வானி தவிர்த்து விட்டாராம்.  முன்னதாக நேற்று முன்தினம் அத்வானி ரத யாத்திரை தொடங்கிய பின்னர் சுஷ்மா சுவராஜூக்கு மிகுந்த சோர்வு ஏற்படவே அவர் உடனடியாக பாட்னா அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக வந்த செய்திகளை அவர் மறுத்தார். கடந்த சில நாட்களாக ரத யாத்திரை பணிகளை செய்து வந்த சுஷ்மா மிகுந்த களைப்பு காரணமாக சோர்வடைந்ததாகவும், இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குப்பின் உடனடியாக அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வந்தன. ஆனால் சுஷ்மா இதை மறுத்துள்ளார்.  இந்த நிலையில் நேற்று பீகார் தலைநகர் பாட்னா வந்தடைந்த அத்வானி அங்கு பொதுக்கூட்டத்தில் பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஊழல் மற்றும் கறுப்பு பண பிரச்சினையை நான் கிளப்பிய போது என்னை இகழ்ந்தார்கள். ஊழல் மற்றும் கிரிமினல் நடவடிக்கைகளுக்கு முக்கிய காரணமாக இருப்பதே இந்த கறுப்பு பணம்தான். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கறுப்பு பணம் வைத்துள்ளவர்களின் பெயர் பட்டியலை குளிர்கால கூட்டத் தொடரில் நாடாளுமன்றத்தில் வெளியிட வேண்டும். இந்த ரத யாத்திரையை துவக்கி வைத்த நிதீஷ்குமாருக்கு நான் மனதார நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். யாத்திரையின் முதல் நாளே இவ்வளவு ஆதரவு வேறு எந்த யாத்திரைக்கும் கிடைத்து நான் பார்த்ததில்லை. லோக் அயுக்தா அறிக்கையை வைத்து ஒரு முதல்வர் மீது பா.ஜ.க உடனடியாக நடவடிக்கை எடுத்தது. இது கட்சியின் நேர்மையை காட்டுகிறது. அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என்பதில் சந்தேகமில்லை. குளிர்கால கூட்டத் தொடரில் லோக்பால் மசோதா நாடாளுமன்றத்திற்கு வரும் உறுதியான லோக்பால் மசோதா நிறைவேற்றப்படும் என்று நம்புகிறேன் என்றார். நேற்று பாட்னாவில் இருந்து புறப்பட்டு அவர் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள வாரனாசிக்கு சென்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!