முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை முன்மாதிரி மாநகராட்சி யாக்கப்படும்: வேட்பாளர்

செவ்வாய்க்கிழமை, 18 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

 

திருப்பரங்குன்றம், அக்.18 - தமிழகத்தின் முன்மாதிரியான மாநகராட்சியாக மதுரை மாநகராட்சி மாற்றப்படும் என்று அ.தி.மு.க. மேயர் வேட்பாளர் ராஜன்செல்லப்பா வாக்களித்த பின்பு தெரிவித்தார். மதுரை மாநகராட்சி அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிடுபவர் வி.வி.ராஜன்செல்லப்பா. மதுரை மாநகராட்சிக்கு நேற்று வாக்குப்பதிவு நடந்தது. மதுரை பசுமலை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்றுகாலை 7 மணிக்கு ராஜன் செல்லப்பா அவரது மனைவி மகேஸ்வரி, மகன் சத்யன், மருமகள் வனிதா ஆகியோர் ஓட்டுப்போட வந்தனர். காலை 7.08 மணிக்கு ராஜன் செல்லப்பா தமது வாக்குகளை பதிவு செய்தார். அதன்பின்னர் அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் வாக்களித்தனர். 

வாக்களித்தபின் ராஜன்செல்லப்பா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:-

தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடைபெறும் ஆட்சியில் மக்கள் அனைத்து வகையிலும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சட்டசபை தேர்தலைப் போல் இந்த உள்ளாட்சி தேர்தலிலும் மக்கள் எழுச்சியுடன் காணப்படுகின்றனர். அ.தி.மு.க. அரசிடம் மக்களின் எதிர்பார்ப்பு அதிகமாகிவிட்டது. இதனால் அனைவரும் அ.தி.மு.க.விற்கு வாக்களிக்க தயாராகிவிட்டனர். 

சட்டசபை தேர்தலின்போது அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கொடுத்த வாக்குறுதிகளை முதல்வரான நூறு நாட்களில் நிறைவேற்றினார். அவர் நிறைவேற்றியது போன்ற மக்கள் நலத் திட்டங்களை இதுவரை யாரும் செய்ததில்லை. அதைப்போலவே தற்போதைய உள்ளாட்சி தேர்தலில் மதுரைக்கு நாங்கள் அறிவித்துள்ள திட்டங்களையும் விரைவில் நிறைவேற்றுவோம். மதுரை மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் உடனுக்குடன் செய்துதரப்படும். மதுரை நகரை தூய்மையாக உருவாக்கிக் காட்டுவோம். தமிழகத்திலேயே மிகச்சிறந்த மாநகராட்சியாக, முன்மாதிரி மாநகராட்சியாக மதுரையை உயர்த்தப் பாடுபடுவேன். மக்களின் அனைத்து ப் பிரச்சனைகளுக்கும் உடனுக்குடன் தீர்வு காணப்படும். கடந்த 40 ஆண்டுகால அரசியல் அனுபவத்தைக் கொண்டு மக்களுக்கு ஏராளமான நலத்திட்டங்களை நிறைவேற்றுவேன். அ.தி.மு.க.வின் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது. இந்த வெற்றியை முதல்வரிடம் சமர்ப்பிப்பேன். 

இவ்வாறு ராஜன்செல்லப்பா தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!