ஸ்பெக்ட்ரம் ஊழல் - கனிமொழியிடம் விரைவில் விசாரணை...!

திங்கட்கிழமை, 7 மார்ச் 2011      ஊழல்
kani-radia

 

புது டெல்லி,மார்ச். 8 - 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் தொடர்பாக தி.மு.க. எம்.பி. கனிமொழியிடம் விரைவில் விசாரணை நடத்த சி.பி.ஐ. திட்டமிட்டுள்ளது. மேலும் நீரா ராடியாவுக்கு சம்மன் அனுப்பவும் சி.பி.ஐ. முடிவு செய்துள்ளது. 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ரூ 1.76 லட்சம் கோடி அளவுக்கு அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என மத்திய தலைமை கணக்கு தணிக்கை துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதையடுத்து இந்த வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டின் நேரடி கண்காணிப்பில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக அரசியல் தரகர் நீரா ராடியாவிடமும், தி.மு.க. எம்.பி. கனிமொழியிடமும் விசாரணை நடத்தப்படும் என சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்தன. 

2 ஜி அலைக்கற்றை உரிமம் பெற்ற ஸ்வான் நிறுவனத்தின் ஊக்குவிப்பு நிறுவனமான டிபி ரியாலிட்டி நிறுவனம், கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்துக்உக உத்தரவாதமில்லாத கடனாக ரூ 214 கோடி கொடுத்தது சி.பி.ஐ. விசாரணையில் தெரிய வந்துள்ளது. கலைஞர் தொலைக்காட்சியில் முதல்வர் கருணாநிதியின் குடும்பத்தாருக்கு பங்கு இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கனிமொழியிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தும் என்று தெரிகிறது. 

மேலும் ரியல் எஸ்டேட் நிறுவனமான யுனிடெக் நிறுவனம் கடந்த 2007 ல் 2 ஜி அலைக்கற்றை உரிமம் பெற விண்ணப்பித்த போது நில பேரம் தொடர்பாக அந்நிறுவனத்துக்கு டாடா குழுமத்தின் ரியல் எஸ்டேட் நிறுவனமான டாடா ரியாலிடி அன்டு இன்பிராஸ்டிரக்சர் ரூ 1,600 கோடி கொடுத்தது தொடர்பாகவும் சி.பி.ஐ. ஆய்வு செய்ய தொடங்கியுள்ளது. 

இந்த பேரத்தில் வகித்த பங்கு தொடர்பாக விசாரிக்கவே நீரா ராடியாவுக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பும் எனத் தெரிகிறது. அலைக்கற்றை உரிமம் பெற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அன்னிய செலாவணி மேலாண்மை சட்டத்தை மீறியுள்ளனவா என்பதை அறிந்து கொள்வதற்காக அமலாக்க இயக்குனகரத்தில் உதவியையும் சி.பி.ஐ. நாடியுள்ளது. உரிமம் பெற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்களின் நிதி ஆதாரம் குறித்து அறிவதற்காக சைப்ரஸ், நார்வே உள்ளிட்ட 8 நாடுகளுக்கு சி.பி.ஐ. கடிதம் அனுப்பி உள்ளது. 

யுனிடெக் நிறுவனத்துடன் அதனஅ 8 வெவ்வேறு நிறுவனங்கள் இணைந்தது குறித்தும் சி.பி.ஐ. ஆய்வு செய்து வருகிறது. தாங்கள் பெற்ற அலைக்கற்றை உரிமத்தின் பங்குகளை 3 ஆண்டுகளுக்கு வேறு நிறுவனத்துக்கு விற்க கூடாது என்ற நிபந்தனையை மீறாமல் இருக்கவும் அதே சமயம் அதீத லாபம் பெறவுமே இந்த நிறுவனங்கள் இணைந்தனவா என்பதே இந்த ஆய்வு.

இதை ஷேர் செய்திடுங்கள்: