முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாடு தேர்வாணைய குழு உறுப்பினர்களிடம் சோதனை

புதன்கிழமை, 19 அக்டோபர் 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை, அக்.19 - லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கடந்த வெள்ளி அன்று சோதனை நடத்தப்பட்டதில் ஏராளமான ஆவணங்கள் சிக்கியது. அதில் ஏற்கனவே சோதனை நடத்தியது போக மேலும் ஒரு உறுப்பினர் வங்கி லாக்கரை லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையிட்டனர். இதுபற்றிய விபரம் வருமாறு:- தமிழ்நாட்டில் குரூப் -2, குரூப்- 3 பதவிக்கான உறுப்பினர்களை தேர்வு செய்ய தேர்வாணைய குழு உள்ளது. தன்னாட்சி பெற்ற அமைப்பான இதில் அலுவலர்களை நியமிப்பதில் இடைத்தரகர்கள் மூலம் லட்சக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு நியமனம் செய்ததாக புகார் எழுந்தது. பல் டாக்டர் நியமனத்திலும் முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்ததை அடுத்து முன்னாள் பணியாளர் தேர்வாணைய குழு தலைவர் செல்லமுத்து வீடு உட்பட 13 தேர்வாணைய குழு உறுப்பினர்களின் வீடுகளில் கடந்த அக்டோபர் 14 அன்று 150-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் லஞ்ச ஒழிப்பு எஸ்.பி.க்கள் தலைமையில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் திருச்சியில் உள்ள ஒரு தேர்வாணைய குழு உறுப்பினர் இல்லம் உட்பட 15 இடங்களில் அதிரடி சோதனை நடைபெற்றது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி ரெய்டு நடத்தினர். தமிழ்நாடு கள பணியாளர் தேர்வாணையம் தன்னாட்சி பெற்ற அமைப்பு. வரலாற்றிலேயே முதல் முறையாக இங்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையிட்டனர். 

இந்த சோதனையை பொதுமக்கள் அனைவரும் வரவேற்றனர். தேர்வாணைய குழு உறுப்பினர்களில் சிலர் கடந்த தி.மு.க. ஆட்சியில் மந்திரிகளாக இருந்தவர்களுக்கு நெருக்கமாக இருந்தவர்கள் இந்த சோதனையின்போது ஏராளமான ஆவணங்கள் சிக்கியது. மேலும் வங்கி லாக்கர்கள் பற்றிய விபரங்களும் லாக்கர் சாவிகளும் கிடைத்தது. 

கடந்த வாரம் சங்கரலிங்கம் என்ற தேர்வாணைய உறுப்பினரின் வங்கி லாக்கரை சோதனையிட்டபோது 100 பவுன் தங்க நகைகள் சிக்கியது. மேலும் சில ஆவணங்களும் சிக்கியது. இதேபோல் ராயப்பேட்டை ஜெகதாம்பாள் நகரில் வசிக்கும் மற்றொரு தேர்வாணைய குழு உறுப்பினரான டாக்டர் ரவி என்பவர் வீட்டிலும் வங்கி லாக்கர் பற்றிய விபரங்களும் சாவிகளும் கிடைத்தது. இந்த லாக்கர் ரவியின் மனைவியின் பெயரில் உள்ளது. இது ராயப்பேட்டை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள தனியார் பைனான்ஸ் கம்பெனி லாக்கர் சாவியாகும். நேற்று இதுபற்றி விசாரிக்கவும், வங்கி லாக்கரை சோதனையிடவும் லஞ்ச ஒழிப்பு கண்காணிப்பாளர் சுதாகர் தலைமையில் போலீசார் சம்பந்தப்பட்ட தனியார் பைனான்ஸ் நிறுவனத்திற்கு சென்றனர். 

டாக்டர் ரவியையும் விசாரணைக்கு அழைத்து இருந்தனர். அதன்படி டாக்டர் ரவி வந்ததும் லாக்கர் திறக்கப்பட்டு சோதனையிடப்பட்டது. இந்த லாக்கரிலும் ஏராளமான தங்க நகைகளும், ஆவணங்களும் இருந்துள்ளது. இதுபற்றி டாக்டர் ரவியிடம் லஞ்ச ஒழிப்பு கண்காணிப்பாளர் சுதாகர் விசாரணை நடத்தியபோது, அவர் தன் உழைப்பில் வாங்கியதாக ரவி தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் பல ஆவணங்களும் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கியுள்ளது. லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் தேர்வாணைய குழுவில் புரோக்கர்களாக செயல்படும் சிலருடைய லிஸ்டுகளும் சிக்கி உள்ளது. அதை வைத்து எவ்வளவு பணப்பரிமாற்றம் நடைபெற்றதுள்ளது என்றும் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். 

தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் தன்னாட்சி பெற்ற அமைப்பாகும். இவர்கள் மீது நேரடியாக போலீசார் நடவடிக்கை எடுக்க முடியாது. கிடைத்த ஆதாரங்களை வைத்து கவர்னர் மூலம் ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் போலீசார் ரெய்டு நடத்திய செல்லமுத்து உட்பட 14 தேர்வாணைய உறுப்பினர்களையும் விசாரணைக்கு அழைக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் கூடிய விரைவில் சம்மன் அனுப்ப உள்ளதாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்