முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உடல்நலக் குறைவால் அமைச்சர் கருப்பசாமி மரணம்

ஞாயிற்றுக்கிழமை, 23 அக்டோபர் 2011      அரசியல்
Image Unavailable

சென்னை, அக்.23 - சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அமைச்சர் கருப்பசாமி நேற்று மதியம் பிற்பகல் 2.20 மணியளவில் சிகிச்சை பலனின்றி மரணடைந்தார்.  அவரது உடல் சங்கரன்கோவிலில் இன்று அரசு முழு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுகிறது. இதுகுறித்த விபரம் வருமாறு:-

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்தவர் அமைச்சர் கருப்பசாமி (57). இவருக்கு முத்துமாரி என்ற மனைவியும்,  சீதாலட்சுமி என்ற மகளும்,  மாரிசாமி என்ற மகனும் உள்ளனர். அமைச்சர் கருப்புசாமி சங்கரன் கோவில் தொகுதியில் இருந்து 4 முறை அ.தி.மு.க. சார்பில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இரண்டு முறை அமைச்சராக இருந்துள்ளார். 

புற்று நோயால் பாதிக்கப்பட்ட அமைச்சர் கருப்பசாமி கடந்த சில மாதங்களாக சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று மதியம் 2.30 மணியளவில் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் உயிர் பிரிந்தது. 

அமைச்சர் கருப்புசாமி மறைவு குறித்து தகவல் அறிந்த, தமிழக முதல்வர் ஜெயலலிதா உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்து சென்று அவரது உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

கருப்புசாமி மறைவால் வாடும் அவரது மனைவி, மகள், மகன், மற்றும் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி, ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டதுடன் அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதிபெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தணை செய்து கொண்டார்.

மறைந்த அமைச்சரின் உடலுக்கு மருத்துவமனையில் தமிழக அமைச்சர்கள் சட்ட மன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் நேரில் சென்று அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் மருத்துவமனைக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அமைச்சர் கருப்புசாமி மறைவு குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

 கருப்பு சாமி பழகுவதற்கு மிகவும் எளிமையானவர், நகைச்சுவையாக பேசுபவர். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், அ.தி.மு.க.தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இறங்கலை தெரிவித்து, கருப்புசாமி ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்பதாக கூறியுள்ளார். 

மறைந்த அமைச்சர் கருப்புசாமியின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் அவரது சொந்த ஊரான சங்கரன் கோவில் எடுத்துச் செல்லப்பட்டது. இன்று அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுகிறது. 

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-

அமைச்சர் கருப்புசாமியின் மறைவையொட்டி தமிழக அரசு சார்பில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி இன்று தேசியக்கொடிகள் அரை கம்பத்தில் பறக்க விடப்படும். அவரது உடல் தமிழக அரசின் சார்பில் முழு மரியாதையுடன் இன்று அடக்கம் செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

அமைச்சர் கருப்புசாமியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள அமைச்சர்கள், கட்சியின் நிர்வாகிகள் சங்கரன்கோவில் விரைந்துள்ளனர். அமைச்சரின் மறைவிற்கு அ.தி.மு.க. பிரமுகர்கள், அனைத்துக் கட்சி  தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!