திருப்பரங்குன்றத்தில் கந்தசஷ்டி விழா நாளை காப்புக்கட்டுடன் தொடங்குகிறது

செவ்வாய்க்கிழமை, 25 அக்டோபர் 2011      ஆன்மிகம்
Image Unavailable

 

திருப்பரங்குன்றம், அக். - 25 - திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நாளை 26 ம் தேதி காப்புக்கட்டுதலுடன் கந்தசஷ்டி விழா தொடங்குகிறது.  இக்கோயிலின் முக்கிய திருவிழாக்களில் கந்தசஷ்டி விழாவும் ஒன்றாகும். ஏழு நாட்கள் நடைபெறும் இத்திருவிழா நாளை காலை 7.30 மணிக்கு அனுக்ஞை பூஜையுடன் தொடங்குகிறது. பின்னர் அருள்மிகு சுப்பிரமணியர், சண்முகர் மற்றும் உற்சவ அடியார்களுக்கு காப்பு கட்டப்படும். அதன் பின் காலை 9 மணிக்கு சேவர்த்திகளுக்கு காப்பு கட்டப்படும். இவ்விழாவின் நிறைவு நிகழ்ச்சி வரும் 1 ம் தேதி நடைபெறுகிறது. விழா நாட்களில் தினசரி இரவில் சுவாமி, தெய்வானை அம்மனுடன் தந்தத்தொட்டி விடையாத்தி சப்பரத்தில் எழுந்தருளி திருக்கோயில் திருவாச்சி மண்டபத்தை ஆறுமுறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வரும் 30 ம் தேதி வேல் வாங்குதல் உற்சவம், 31 ம் தேதி மாலை சூரசம்ஹார நிகழ்ச்சியும், 1 ம் தேதி காலையில் சுப்பிரமணியர், தெய்வானையுடன் மயில் வாகனத்தில் எழுந்தருளி ரத வீதியில் வலம் வரும் உற்சவமும் நடைபெறும். அன்று மாலை 3 மணிக்கு சுப்பிரமணியர் தங்க கவசத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்: