முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.10 ஆயிரம் லஞ்சம்: இளநிலை பொறியாளர் கைது

வெள்ளிக்கிழமை, 11 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, நவ.11 - கம்பெனிக்கு மின் இணைப்பு தர ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கும்போது மின்வாரிய இளநிலை பொறியாளரை மதுரை லாட்ஜில் வைத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக கைது செய்தனர். திருப்பூரைச் சேர்ந்த முருகசாமி என்பவர், சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தாலுகா டி.கரிசல்குளம் கிராமத்தில் ``ஸ்பிளண்டர் பிராஸஸ்'' என்ற பெயரில் பிளீச்சிங் கம்பெனி அமைக்க அனுமதி பெற்று, அதற்கு மின் இணைப்பை பெற கடந்த ஆகஸ்டு மாதம், மானாமதுரை தாலுகா, கீழடி கிராமத்தில் உள்ள இளநிலை பொறியாளர் மீனாட்சிசுந்தரதை சந்தித்து மனுச் செய்து உள்ளார். 

மீனாட்சிசுந்தரம், மின் இணைப்பு கொடுக்க காலதாமதம் செய்யவே கடந்த நவ.8-ம் தேதி இளநிலை பொறியாளர் மீனாட்சிசுந்தரத்தை சந்தித்து இணைப்பு பற்றி கேட்டுள்ளார் அதற்கு அவர் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக கேட்டு உள்ளார். இதுசம்மந்தமாக முருகசாமி கடந்த நவ. 9-ம் தேதி சிவகங்கை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு ஆய்வாளர் ராஜாவிடம் புகார் கொடுத்தார். அதன் பின்னர் போலீசார் போட்டு கொடுத்த திட்டப்படி முருகசாமி மீனாட்சிசுந்தரத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பணம் எப்பொழுது கொண்டு வர என கேட்டுள்ளார். அதற்கு அவர் முருகசாமியை அலுவலகம் வரவேண்டாம், நீங்கள் எங்கு இருக்கின்றீர்கள் என்று சொன்னால் தானே இன்று மாலை அங்கு வந்து சந்தித்து பணத்தை பெற்றுக் கொள்வதாய் சொல்லி உள்ளார். 

முருகசாமி தான் மதுரை, திருப்பரங்குன்றம் ரோட்டில் உள்ள விஜய் லாட்ஜில் தங்கி உள்ளதாய் சொல்லியுள்ளார். நவம்பர் 9-ம் தேதி இரவு 9.00 மணிக்கு மீனாட்சி சுந்தரம் மதுரை லாட்ஜில் முருகசாமியிடம் பணம் பெறுகையில் சிவகங்கை மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு துணைக் கண்காணிப்பாளர் அருள், ஆனந்தன், ஆய்வாளர் ராஜா தலைமையிலான தனிப்படையினர் அவரை கைது செய்து பணத்தை கைப்பற்றினர். 

அதன்பின்னர் செல்லூரில் உள்ள அவரது வீடு, கீழடியில் மின் அலுவலகம் ஆகியவற்றை சோதனை செய்து சம்பந்தப்பட்ட ஆவணங்களை கைப்பற்றினார்கள். பின் நேற்று முன்தினம் காலை தலைமை குற்றவியல் நடுவர் /  சிறப்பு நீதிமன்றம் நீதிபதி சதிக்குமார் முன்பு ஆஜர் செய்யப்பட்டார். மாஜிஸ்ட்ரேட் கைது செய்யப்பட்ட இளநிலை பொறியாளரை 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிடவே அவரை சிவகங்கை கிளை சிறைச் சாலையில் அடைக்கப்பட்டார். வழக்கு புலன் விசாரணையில் உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!