உத்தர பிரதேச கவர்னரிடம் பா.ஜ.க. தலைவர்கள் மகஜர்

புதன்கிழமை, 9 மார்ச் 2011      அரசியல்
bjp 3

உத்தர பிரதேச கவர்னரிடம் பா.ஜ.க. தலைவர்கள் மகஜர்

லக்னோ, மார்ச் - 9 - சர்ச்சைக்குரிய மசோதா ஒன்றுக்கு ஒப்புதல் அளிக்க கூடாது என்று கோரி உத்தர பிரதேச கவர்னரிடம் பா.ஜ.க. தலைவர்கள் மகஜர் ஒன்றை கொடுத்தனர். நகர்ப்புற சுய உள்ளாட்சி  மசோதா ஒன்றை உத்தர பிரதேச அரசு கொண்டுவந்துள்ளது. இந்த மசோதாவுக்கு பா.ஜ.க. கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.  இந்த மசோதாவுக்கு கவர்னர் தனது ஒப்புதலை வழங்கக்கூடாது என்று கோரி அம்மாநில கவர்னர் பி.எல். ஜோஷியிடம் பா.ஜ.க. தலைவர்கள் மகஜர் ஒன்றை கொடுத்துள்ளனர்.

மேயர்கள் மற்றும்  நகராட்சி தலைவர்களை மறைமுகமாக தேர்ந்தெடுக்க இந்த மசோதா வகை செய்யும் என்பதால் இந்த மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் தரக்கூடாது என்று  தாங்கள் கவர்னரை வலியுறுத்தியுள்ளதாக பா.ஜ.க. தலைவர்கள் கூறினர். 

மேலும் இந்த மசோதாவால் குதிரை பேரங்களுக்கு அதிக வாய்ப்புக்கள் உள்ளன என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

மாநில பா.ஜ.க.தலைவர் சூரியபிரதாப் சஹி, பா.ஜ.க. எம்.பி. லால்ஜி தண்டன் ஆகியோர் தலைமையில் பா.ஜ.க. தலைவர்கள் மாநில கவர்னரை  சந்தித்தனர்.

கடந்த ஆண்டு  உள்ளாட்சி தேர்தலின் போது குதிரை பேர முறையை பின்பற்றி ஆளும் பகுஜன் சமாஜ் கட்சியினர் தங்களுக்கு தேவையான உள்ளாட்சி பதவிகளை பிடித்துக்கொண்டனர் என்றும் அதே நிலைதான் இந்த மசோதாவால் நகர்ப்புறங்களிலும் கொண்டு வரப்படும் என்றும் அதை அனுமதிக்க முடியாது என்றும் அவர்கள் கூறினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: