முக்கிய செய்திகள்

கனிமொழியிடம் எந்த நேரத்திலும் விசாரணை நடத்த சி.பி.ஐ. திட்டம்

வெள்ளிக்கிழமை, 11 மார்ச் 2011      ஊழல்
kanimozhi

 

புதுடெல்லி, மார்ச் 11 - ஸ்பெக்ட்ரம் ஊழல் பணத்தில் கலைஞர் டி.வி.க்கு ரூ. 214 கோடி கைமாறிய விவகாரம் குறித்து கலைஞர் டி.வி.யில் பங்குதாரராக உள்ள கனிமொழியிடம் எந்த நேரத்திலும் சி.பி.ஐ. விசாரணை நடத்தலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. 

கடந்த 2008 ஆம் ஆண்டு 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் செல்போன் கம்பெனிகளுக்கு உரிமம் வழங்கியதில் ரூ. 1.76 லட்சம் கோடிக்கு மத்திய அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய கணக்கு தணிக்கை குழு தனது அறிக்கையில் கூறியிருந்தது. இதற்கு அப்போதைய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசாவே முழுப் பொறுப்பு என்றும் அந்த குழு கூறியிருந்தது. இந்த ஒதுக்கீட்டில் புரண்ட ஊழல் பணம் பல்வேறு வெளிநாட்டு கம்பெனிகளுக்கும் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் டி.பி.ரியாலிட்டீஸ் என்ற நிறுவனம் கலைஞர் டி.வி.க்கு ரூ. 214 கோடியை வழங்கியதாக செய்திகள் வெளிவந்தன. ஆனால் இந்த பணத்தை திரும்பச் செலுத்திவிட்டதாக கலைஞர் டி.வி.நிர்வாகம் கூறியிருந்தது. இந்த கலைஞர் டி.வி.யில் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளுக்கு 60 சதவீத பங்குகளும்,  மகள் கனிமொழிக்கு 20 சதவீத பங்குகளும் கலைஞர் டி.வி.யின் நிர்வாகி சரத்குமாருக்கு 20 சதவீதமும் பங்குகள் இருப்பதாக கூறப்படுகிறது. கலைஞர் டி.வி.க்கு ரூ. 214 கோடி பணம் எதற்காக கொடுக்கப்பட்டது என்பது குறித்து பல்வேறு கோணங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக கருணாநிதி மகள் கனிமொழி மீதும் சி.பி.ஐ. எந்த நேரத்திலும் விசாரணை நடத்தலாம் என்று செய்திகள் வெளியாகி உள்ளன. 2 ஜி.ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆ.ராசாவுடன் இதே ஊழல் வழக்கில் டி.பி.ரியாலிட்டீஸ் நிறுவன தலைவர் பால்வா என்பவரும் சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். இதனிடையே டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆ.ராசாவின் மனைவியிடமும் விசாரணை நடத்த சி.பி.ஐ. அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், அவரும் எந்த நேரத்திலும் சி.பி.ஐ. விசாரணைக்கு உட்படுத்தப்படலாம் என்றும் தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்: