கர்நாடக முதல்வர் எடியூரப்பா மீது குமாரசாமி புதிய குற்றச்சாட்டு

வெள்ளிக்கிழமை, 11 மார்ச் 2011      ஊழல்
Kumar yedi

 

பெங்களூர்,மார்ச்.11 - கர்நாடக பாரதிய ஜனதா முதல்வர் எடியூரப்பா மீது முன்னாள் முதல்வர் குமாரசாமி புதிய லஞ்ச ஊழல் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். இதனால் கர்நாடகாவில் மீண்டும் பரபரப்பான சூழ்நிலை உருவாகி உள்ளது. கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா மீது அடிக்கடி ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறது. இதனால் அவரது பதவிக்கு பல முறை ஆபத்து வந்தது. அதிலிருந்து அவர் அதிர்ஷ்டவசமாக தப்பினார்.

பெங்களூரில் நிலமோசடியில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத்தொடர்ந்து எடியூரப்பா மீது வழக்கு தொடர கவர்னர் பரத்வாஜ் அனுமதி அளித்தார். இது பெரும் சர்ச்சையை எழுப்பியது. அதற்கு முன்னர் எடியூரப்பா தலைமையிலான பாரதிய ஜனதா அரசுக்கு கொடுத்து வந்த ஆதரவை பல சுயேட்சை எம்.எல்.ஏ.க்களும் பா.ஜ.வை சேர்ந்த பல எம்.எல்.ஏ.க்களும் வாபஸ் பெற்றனர். இதனால் எடியூரப்பா மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. 

இந்தநிலையில் எடியூரப்பா மீது ஊழல் குற்றச்சாட்டை மதசார்பற்ற ஜனதாதளம் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் முதல்வருமான குமாரசாமி சுமத்தியுள்ளார். கர்நாடக மாநிலத்தில் செயல்பட்டு வரும் இரும்பு தாது சுரங்க அதிபர் ஒருவர் ரூ.20 கோடியை எடியூரப்பாவின் மகன் நடத்தும் அறக்கட்டளை ஒன்றுக்கு கொடுத்ததாக கூறியுள்ளார். கர்நாடகத்தில் பாரதிய ஜனதா அரசில் நடக்கும் முறைகேடுகள் அந்த கட்சியின் மேல் மட்டத்திற்கு நன்றாகவே தெரியும். அப்படி இருந்தும் எடியூரப்பா மீது எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை என்று குமாரசாமி கூறினார். மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகளை பாரதிய ஜனதா தலைவர்கள் சுட்டிக்காட்டி வருகிறார்கள். ஆனல் கர்நாடக மாநிலத்தில் எடியூரப்பா அரசு பல சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறது. அதை கட்சி மேலிடும் கண்டுகொள்வதில்லை என்று நேற்று குமாரசாமி டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார். பேட்டியின் போது இடது கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் உடன் இருந்தனர்.  இதற்கிடையில் டெல்லி சென்றுள்ள எடியூரப்பா தனது மீது கூறப்பட்டுளள குற்றச்சாட்டை மறுத்தார். சுயநல அடிப்படையில் என் மீது குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறது என்றார். என் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு கட்சி மேலிட தலைவர்களிடம் விளக்கம் அளிப்பதற்காகவே  வந்ததாக கூறப்படுவதையும் எடியூரப்பா திட்டவட்டமாக மறுத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: