முக்கிய செய்திகள்

ஜெயலலிதாவுக்கு ஆதரவளிக்க பிரகாஷ் காரத் வேண்டுகோள்

வெள்ளிக்கிழமை, 11 மார்ச் 2011      தமிழகம்
DGLCPM2

 

திண்டுக்கல், மார்ச்.11 - தமிழகத்தில் அரசியல் மாற்றம் மற்றும் தமிழக மக்களின் நலனைக் காப்பதற்காக ஜெயலலிதா தலைமையிலான அரசு அமைவதற்கு தமிழக மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என மா.கம்யூனிஸ்ட் கட்சி அகில இந்திய பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் வேண்டுகோள் விடுத்து பேசினார்.

திண்டுக்கல்லில் தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத் துவக்க விழா மற்றும் தேர்தல் நிதியளிப்பு பொதுக்கூட்டம் மா.கம்யூனிஸ்ட் கட்சி நகரக்குழு செயலாளர் கல்யாணசுந்தரம் தலைமையில் மணிக்கூண்டில் நடைபெற்றது. மாவட்டக்குழு உறுப்பினர் சின்னத்தம்பி வரவேற்புரையாற்றினார். நிகழ்ச்சியில் அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர் இரா.விசுவநாதன், மாவட்ட அவைத்தலைவர் சி.சீனிவாசன், நகரச் செயலாளர் ராமுத்தேவர், சி.பி.எம். மத்தியக் கமிட்டி உறுப்பினர் என்.வரதராஜன், எம்.எல்.ஏ. பாலபாரதி, சி.பி.எம். மாவட்டச் செயலாளர் பாண்டி, சி.பி.ஐ. மாவட்டச் செயலாளர் பேட்ரிக் சகாயநாத், ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர் என்.செல்வராகவன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு பேசினர்.

நிகழ்ச்சியில் சி.பி.எம். அகில இந்திய பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகையில், நம்முடைய தேசத்தில் மக்கள் இரண்டு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். ஒன்று மிகப்பெரிய ஊழல், மற்றொன்று தொடர்ச்சியான அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு. இதனை ஏற்படுத்தியது மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசும், தமிழகத்தில் ஆளும் தி.மு.க. அரசும் தான். ஸ்பெக்ட்ரம் ஊழல் மூலம் தேசத்தின் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது. இது நாட்டு மக்களின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலாகும். நாட்டில் சுகாதாரம், கல்வி, வளர்ச்சிக்காக செலவிட வேண்டிய பணத்தை திட்டமிட்டு மறுவழியில் ஊழல் மூலம் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது. ஊழல் குறித்து விசாரிக்க பாராளுமன்றத்தில் குரல் எழுப்பிய போது காங்கிரஸ் அதனை மறுத்தது. கூட்டுக்குழுவை அமைக்க தயாராக இல்லை. ஏனெனில் விசாரணை நடத்தினால் பல உண்மைகள் அம்பலப்பட்டு விடும் என்பதற்காகத் தான். சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்ட பின்பு தான் சி.பி.ஐ. முழுமையாக விசாரணை நடத்தி வருகிறது. பிரதமரும், தமிழக முதல்வர் கருணாநிதியும் ஒன்றுமே நடக்கவில்லையெய தொடர்ந்து கூறி வந்தனர். 192 நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாக லைசன்ஸ் வழங்கியதை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. கம்யூனிஸ்ட் கட்சி இதனை தடுக்க பிரதமரிடம் வலியுறுத்திய போதும் பிரதமர் ராசாவிற்கு கடிதம் மட்டுமே எழுதினார். அதன்பின்னர் தான் போலி நிறுவனங்களுக்கும், கள்ள நிறுவனங்களுக்கும் ராசா 2008 ஜனவரியில் அனுமதி வழங்கினார். இதனைத் தடுக்காத பிரதமர் பரிசுத்தமானவரா?

ராசாவின் அறிவாற்றல் காரணமாகவும், திறமையின் காரணமாகவும் தான் இன்று கிராம மக்கள் முதற்கொண்டு செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள் என்றும், அதுவும் குறைந்த விலையில் கிடைக்கிறது என்றும் கூறி வருகின்றனர். இது உண்மையல்ல. நாட்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாகத் தான் இவ்வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றையை வாங்குவதற்கு தனியார் கம்பெனிகள் தயாராக இருந்தன. ஆனால் அவைகளுக்கு எல்லாம் வழங்காமல் மிகக்குறைந்த விலையில் சில நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளனர். அதன்மூலம் அவர்கள் ஆதாயம் அடைந்தார்கள் என்பது தான் உண்மை. இத்தொகை தேசத்திற்கு ஒரு ஆண்டிற்கு சுகாதாரத்துறைக்கு ஒதுக்கப்படும் தொகையைக் காட்டிலும் 8 மடங்கு அதிகம். கல்வித்தேவைக்கு ஒதுக்கப்படும் தொகையைக் காட்டிலும் 3 மடங்கு அதிகம். சுகாதாரம், கல்வி, நாட்டின் வளர்ச்சிக்காக கொண்டு செல்லப்படவேண்டிய பணத்தைக் கொள்ளையடித்துள்ளனர். ராசா கைது செய்து சிறையில் அடைத்தால் மட்டும் போதாது.

முறைகேடாக வழங்கப்பட்ட லைசன்ஸை ரத்து செய்து மறு ஏலம் விடப்பட்டு எந்த நிறுவனம் அதிகமாக வாங்க முன்வருகிறதோ அவர்களுக்கு வழங்க வேண்டும். அதன்மூலம் தான் நாட்டிற்கு ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட முடியும். ஆனால் காங்கிரஸும், பங்காளியான தி.மு.க. அரசும் இதனை செய்ய முன்வராது. ஏனெனில் அலைக்கற்றை பெற்ற பல ஆயிரம் கோடி ஊழல் பணம் அம்பலமாகி விடும் என்பதற்காகத் தான்.

மத்திய அமைச்சரவையில் உள்ள ஆறு தி.மு.க. அமைச்சர்கள் மட்டும் இவ்வளவு பெரிய தொகையைக் கொள்ளையடித்தார்கள் என்றால், 5 ஆண்டு காலத்தில் தமிழகத்தை ஆண்டு வரும் தி.மு.க. ஆட்சியில் தி.மு.க. அமைச்சர்கள் எவ்வளவு கொள்ளையடித்திருப்பார்கள்? தி.மு.க. ஊழலில் மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது. 5 ஆண்டு கால மிகப்பெரிய ஊழல் ஆட்சியில் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். நாட்டை தனது குடும்ப சொத்தாக மாற்றியுள்ளனர். ஒரே குடும்பமே அத்தனை துறையிலும் ஆதிக்கம் வைத்திருப்பதை எத்தனை காலம் தான் பொறுக்க முடியும் என்பதை முடிவு கட்டும் காலம் வந்து விட்டது. லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை கிடைக்காததாலும், தகுதிக்கேற்ற பணி கிடைக்காததாலும் அல்லல்பட்டு வருகின்றனர். விவசாயிகள் தங்கள் உற்பத்திக்கேற்ற விலை கிடைப்பதில்லை. நெசவாளர்கள், கைவினைஞர்கள் என பலதரப்பட்ட  மக்கள் தங்களுக்கு நல்ல வாழ்க்கை அமைய நல்ல அரசை எதிர்பார்த்திருக்கின்றனர். தி.மு.க. அரசால்  அதை நிறைவேற்ற முடியாது. இந்த அரசு தங்களை மட்டும் வளர்த்துக் கொள்ளவே ஆட்சி செய்கிறது. எனவே ஆட்சி மாற்றம் கட்டாயம் வேண்டும். 

எனவே வருகிற சட்டமன்ற தேர்தலில் மா.கம்யூனிஸ்ட் அங்கம் வகிக்கும் ஜெயலலிதா தலைமையிலான அரசு அமைந்திட தமிழக மக்கள் நல் ஆதரவு வழங்க வேண்டும் என்று பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: