தனுஷ் ஏவுகணை சோதனை வெற்றி

சனிக்கிழமை, 12 மார்ச் 2011      இந்தியா
Thanush

 

புவனேஷ்வர், மார்ச்12 - அணு ஆயுதங்களை தாங்கிச்செல்லும் இந்தியாவின் தனுஷ் ஏவுகணை சோதனை நேற்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது. ஏவுகணை தொழில்நுட்பத்தில் இந்திய விஞ்ஞானிகள் மாபெரும் வெற்றிகளை குவித்து வருகின்றனர். அக்னி, திரிசூல் உள்ளிட்ட பல்வேறு நவீன ஏவுகணைகளை உருவாக்கி, சோதனை செய்து வெற்றி கண்ட இந்திய விஞ்ஞானிகள் பிரித்வி ஏவுகணை சோதனையையும் வெற்றிகரமாக ஏற்கனவே நடத்தியுள்ளனர்.

இந்த பிரித்வி ஏவுகணையின்  கடற்படை  வகை ஏவுகணைக்கு தனுஷ் என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த  தனுஷ் ஏவுகணை 750 கிலோ அணு ஆயுதங்களை சுமந்து கொண்டு 350 கி.மீ.தூரம் பறந்து சென்று எதிரிகளின் இலக்கை துல்லியமாக தாக்கும் வல்லமை கொண்டது.

அதாவது கடல் பகுதியில் இருந்து கடலோரமாக உள்ள நிலப்பகுதியில் எதிரிகளின் இலக்கை தாக்கும். இந்த தனுஷ் ஏவுகணை நேற்று காலை 10 மணிக்கு வங்காள விரிகுடா கடலில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. 

ஒரு கப்பலில் இருந்து விடப்பட்ட  இந்த ஏவுகணை குறிப்பிட்ட இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தது.

இதனால் இந்திய விஞ்ஞானிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த ஏவுகணை 8.53 மீட்டர் நீளமும் 0.9 மீட்டர் விட்டமும் கொண்டது. இதன் மொத்த எடை 4.4 டன்.

இந்த ஏவுகணையில் 500 கி.மீ.தூரம் சென்று தாக்கும் அளவுக்கு புதிய தொழில்நுட்பங்கள் சேர்க்கப்பட இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

தனுஷ் ஏவுகணை சோதனைக்காக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி  கழகம் விரிவான ஏற்பாடுகளை செய்திருந்தது.

இந்த ஏவுகணை சோதனையின்போது 350 கி.மீ. சுற்றளவில் யாரும் இல்லாத வகையில் முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டு கடல் பகுதி போக்குவரத்திற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்: