முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முல்லைப் பெரியாறு பிரச்சினையில் நிரந்தர தீர்வு

ஞாயிற்றுக்கிழமை, 4 டிசம்பர் 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை, டிச.4 - முல்லைப்பெரியாறு பிரச்சினையில் முதல்வர் ஜெயலலிதா நிரந்தர தீர்வு காண்பார் என்று சரத்குமார் கூறியுள்ளார். இதுகுறித்து ச.ம.க. தலைவர் ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கை வருமாறு:- முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழகம்- கேரளா ஆகிய இரு மாநிலங்களுக்கிடையே நீண்ட நாட்களாக கருத்து வேறுபாடுகள் இருந்து வருகின்றன. அணை உருவான காலகட்டத்தில் 1886 ஆம் ஆண்டு இரு மாநிலங்களுக்கிடையே உருவான ஒப்பந்தமும், இடையில் 1970 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட கூடுதல் ஒப்பந்தங்களையும் இரு மாநில அரசுகளும் பின்பற்றி வந்தன. இப்போது அணையின் நீர்மட்டத்தை, அதாவது தேக்கிவைக்கும் நீரின் அளவினை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்த உச்சநீதிமன்றம் அனுமதியளித்தது. மேலும், இது குறித்த வழக்குகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்த விவகாரத்தில் தமிழக மக்களின் உரிமை பாதுகாக்கப்பட்டே தீர வேண்டும். 

ஏறத்தாழ மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களை சேர்ந்த பல லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் முல்லை பெரியாறின் நீரை நம்பியை இருக்கிறது. இந்த நிலையில் புதிய அணை கட்ட வேண்டும் என்ற கேரள அரசின் நிலை தமிழக மக்களுக்கு அதிர்ச்சியளிக்கிறது. தமிழக மக்களின் உரிமை மற்றும் முல்லைபெரியாறு நீரை மட்டுமே நம்பியிருக்கிற விவசாயிகளுக்கும் எந்த ஒரு பாதிப்பும் இல்லாத நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டும். 

இரு மாநில மக்களின் உணர்வுகளை தூண்டிவிடும் எந்த ஒரு செயலிலும் யார் ஈடுபட்டாலும் அது நமது நாட்டின் வளர்ச்சிக்கு தடையாகி விடும். எனவே, முல்லைப்பெரியாறு பிரச்சினையில் 2 மாநில அரசுகளும் நல்லதொரு முடிவினை எட்டிட வேண்டும் என்பதை வலியுறுத்தி 2009 ஆம் ஆண்டு டிசம்பர் 19 மற்றும் 20 தேதிகளில் தேனியிலிருந்து லோய கேம்ப் வரை எங்கள் கட்சியின் சார்பில் சுமார் 54 கி.மீ. தூரம் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் நடைப்பயணம் மேற்கொண்டார்கள். தமிழக மக்களின் நலன் காப்பதில் உறுதியான தன்மையும், உண்மையான எண்ணமும் கொண்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா முல்லைப்பெரியாறு விவகாரத்தில் விரைவில் நிரந்தர தீர்வு காண்பார் என்பது உறுதி. 

இவ்வாறு சரத்குமார் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்