முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீனாட்சிமிஷன் மருத்துவமனையில் நகைச்சுவை மன்றத்தின் 21-ம் ஆண்டு தொடக்கவிழா

திங்கட்கிழமை, 12 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

மதுரை,டிச.- 12 - நகைச்சுவை மன்றத்தின் 21-ம் ஆண்டுத்தொடக்கவிழா நேற்று மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் நடைபெற்றது. நடிகை சச்சு பங்கேற்று சிறப்புரையாற்றினார். இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் சினிமா நடிகையும், இயல் இசை நாடக மன்றத்தின் செயலாளருமான கலைமாமணி குமாரி சச்சு கூறுகையில், பழைய படங்களில் உள்ள நடிகர்கள் மற்றும் நாயக, நாயகிகள் நாடகத்தின் மூலமாகவும், அதிகமான வசன உச்சரிப்பின் மூலமாகவும் வந்ததால் தமிழ் உச்சரிப்பு நன்றாக இருந்தது. சமீப காலமாக சினிமாவில் அறிமுகமாகும் ஹீரோயின்களுக்கு மொழி தெரியவில்லை. டப்பிங் குரல் மூலமாக நடிக்கின்றனர். ஆனால் காமெடிக்கும் டப்பிங் கிடையாது. நவீன தொழில்நுட்பம் காரணமாக சினிமாத்துறையில் பல மாற்றங்கள் வந்துள்ளன. ஆனால் கதாசிரியர்களும், இயக்குனர்களும் தமிழ் பாரம்பரியத்தின் பெயரினை காப்பாற்ற வேண்டும். என் அனுபவத்தை  வைத்து தமிழக இயல் இசை, நாடகமன்றத்தின் மிகப்பெரிய பொறுப்பை தமிழக அரசு கொடுத்துள்ளது. மேலும் நாட்டுபுறக்கலைஞர்கள், மேடைக்கலைஞர்கள் மற்றும் நலிந்த கலைஞர்களுக்கான ஓய்வூதியத்தை அதிகரிக்கவும், மறைந்த கலைகளை மீண்டும் புதுப்பிக்கவும் தமிழக அரசிடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. நாடகத்திநை மேம்படுத்த ஒவ்வொரு மாவட்டத்தலைநகரங்களில் நாடகம் நடத்த திட்டமிட்டுள்ளோம் இவ்வாறு கூறினார். இவ்விழாவில் கலந்துரையாடல் நிகழ்ச்சியும், கலைநிகழ்ச்சியும் நடைபெற்றது. விழாவில் சாதனையாளர்கள் விருது, வளரும் கலைஞர்களுக்கான விருது, மூத்த நாடகக் கலைஞர்களுக்கான விருது வழங்கப்பட்டது. தொழிலதிபர்கள் ஜெகதீசன், அண்ணாமலை சம்பத் ஆகியோர் வாழ்த்துரை  வழங்கினார்கள். திருச்சி மணியனின் திருக்குறள் கொன்னக்கோல் நிகழ்ச்சி நடைபெற்றது.  முடிவில் மின்னல் பிரியன் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்குத்தேவையான ஏற்பாடுகளை மீனாட்சிமிஷன் மருத்துவமனையின் மார்க்கெட்டிங் முதுநிலை மேலாளர் பாண்டியராஜன் குழுவினர் செய்திருந்தனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்