முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக சட்டசபை சிறப்பு கூட்டம் இன்று கூடுகிறது

வியாழக்கிழமை, 15 டிசம்பர் 2011      அரசியல்
Image Unavailable

சென்னை, டிச.15 - முல்லைப்பெரியாறு அணை பிரச்சனை தொடர்பாக சட்ட சபையின் சிறப்புக்கூட்டம் இன்று கூடுகிறது. முதல்வர் ஜெயலலிதா இதற்கான அறிவிப்பை ஏற்கனவே வெளியிட்டுள்ளார். தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட சிறப்புத் தீர்மானம் அப்போது கொண்டுவரப்படும் என்றும் அறிவித்திருந்தார். முல்லைப்பெரியாறு பிரச்சனையில் தமிழக அரசியல் கட்டிகள் அனைத்தும் ஒரே நிலைபாட்டில் இருப்பதால் இந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்படவுள்ளது.

உச்சநீதிமன்ற உத்தரவின்படி முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த வேண்டும் என்பது தமிழகத்தின் நிலையாகும். ஆனால் இதை மறுக்கும் கேரள மாநில அரசு அங்கு புதிய அணையைக் கட்ட முயற்சிக்கிறது. இதற்கு அம்மாநில சட்டசபையில் தீரமானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

மேலும் முல்லைப்பெரியாறு அணை மிகவும் பலவீனமாக இருப்பதாகவும், அணையின் நீர்மட்டத்தை 120 அடியாகக் குறைக்க வேண்டும் என்றும் அது கூறிவருகிறது.

இதற்கு தமிழகம் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகிறது. இந்த பிரச்சனை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து கேரளாவில் பல இடங்களில் தமிழர்கள் மீது தாக்குதல்கள் நடந்தன. அதற்குப் பதிலடியாக தமிழகத்திலும் இங்கொன்றும், அங்கொன்றுமாக கேரள மாநிலத்தலைவர்களின் வணிக நிறுவனங்கள் மீது தாக்குதல் நடந்ததும், தமிழக போலீசார் தலையிட்டு அதை அடக்கினர்.

கேரள மாநில அரசு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியதை அடுத்து தமிழகம் கேரள மாநிலங்களுக்கு இடையே எல்லைப்பகுதிகளில் வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. கேரள எல்லையான குமுளி பகுதியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கடந்த சில நாட்களாக முற்றுகைப் போராட்டம் நடத்தினர். குமிளி, கூடலூர், லோயர் கேம்ப் நோக்கியும், கேரள எல்லைச் சோதனைச் சாவடி நோக்கியும் செல்ல முயன்ற பொதுமக்களை போலீசார் கலைத்தனர். இதனால் பொதுவாக தேனி மாவட்டம் முழுவதும் பதட்டம் ஏற்பட்டது.

இதையொட்டி முதல்வர் ஜெயலலிதா பொதுமக்களை அமைதி காக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.

இப்பிரச்சினையை விஞ்ஞான பூர்வமாகவும், தர்க்கபூர்வமான முறையிலும் கையாள மாநில அரசை அனுமதிக்க வேண்டும் என்றும் முதல்வர் கேட்டுக் கொண்டதுடன் கேரள மக்களுக்கும் அவர் வேண்டுகோள் விடுத்தார். கேரள அரசு வீணான வதந்திகளைப் பரப்பி வருவதாகவும், இதனால் அணைப் பகுதியில் பதட்டம் ஏற்படுவதாகவும், இருமாநில உறவுகளில் எத்தகைய பிரிவினை சக்திகளுக்கும் இடம்தரக்கூடாது என்றும் முதல்வர் கூறியிருந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் உச்சநீதிமன்றத்தில் ஐந்து நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்த கேரள அரசின் மனு மீது நீதிபதிகள் கடும் கண்டனத்தையும் தெரிவித்தனர்.

நீர்மட்டத்தை 120 அடியாகக் குறைக்க வேண்டும் என்று கேரள அரசு கோரியிருந்தது. இந்த மனுவை நிராகரித்த உச்சநீதிமன்றம் அணையின் நீர்மட்டத்தை 136 அடிக்கு கீழே குறைக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தியது. இது கேரள அரசுக்கு பலத்த அடியாகும். இதே நேரத்தில்  அணைப்பகுதிக்கு  மத்திய பாதுகாப்புப் படையை அனுப்ப வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கைக்கு மத்திய அரசு தனது நிலையை அறிவிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இருமாநில அரசுகளும் அமைதிகாக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கோரியுள்ளனர். உச்சநீதிமன்றத்தின் அறிவிப்பால் கேரள எல்லைப்பகுதியில் சிறிது பதற்றம் குறைந்துள்ளது.

இச்சூழலில் ஏற்கனவே முதல்வர் ஜெயலலிதா அறிவித்தப்படி இன்று சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டம் காலை 11.00 மணிக்கு கூடுகிறது. தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டும் சிறப்புத் தீர்மானத்தை அரசு கொண்டுவரவுள்ளது. இந்த தீர்மானத்தின் மீது அனைத்துக் கட்சிகளும் தங்களது கருத்துக்களை எடுத்துக்கூற உள்ளன.

சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தையொட்டி தி.மு.க. இன்று (வியாழன்) நடத்த உள்ள மனித சங்கிலிப் போராட்டத்தை முன்கூட்டியே நடத்துகிறது.

முல்லைப்பெரியாறு பிரச்சனையில் தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும் ஒரே நிலையில் உள்ளன.

 ஆகவே அரசின் இந்த சிறப்புத் தீர்மானம் ஏகமனதாக நிறைவேறவுள்ளது. இதன் மூலம் தமிழகம் ஒரே குரலில், ஒரே நிலையில் உள்ளது என்பதை அனைவருக்கும் உணர்த்தும், சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது உச்சநீதிமன்றத்தில் தமிழக்ததின் நிலையை மேலும் வலுப்படுத்தும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony