முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுவையில் கேரள நிதி நிறுவனங்கள் உட்பட கடைகள் சூறை

வெள்ளிக்கிழமை, 16 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

புதுச்சேரி, டிச.16 - முல்லை பெரியாறு அணை பிரச்சனை தமிழகம் மற்றும் கேரளா இடையே பூதகரமாகி வருகிறது. இந்த பிரச்சனையால் சென்னை உள்பட பல்வேறு இடங்களில் கேரள மாநிலத்தவர் நடத்தி வரும் நகைக்கடைகள் உள்பட பல்வேறு கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. புதுவையில் சில நாட்களுக்கு முன்பு கேரள மாநிலத்தவர்கள் நடத்தி வரும் கடைகளை அடைக்கச் சொல்லி தமிழர்கள் இயக்கத்தினர் போராட்டம் நடத்தினர். 

இதற்கிடையே கேரளாவில் தமிழர்கள் தாக்கப்பட்டு வருவதாக நேற்று காலை தகவல் பரவியது. இதை கண்டித்து புதுவையில் நாம் தமிழர் அமைப்பினர் போராட்டத்தில் குதித்தனர். அவர்கள் ஒரு ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிளில் சென்று முத்தியால்பேட்டையில் கேரள மாநிலத்தவர் நடத்தி வரும் நகை கடன் வழங்கும் நிதி நிறுவனத்தை அடித்து நொறுக்கினர். 

அந்த நிறுவனம் அருகே இருந்த கேரள மாநிலத்தவரின் பேக்கரியும் அடித்து நொறுக்கப்பட்டது. 

இதில் கண்ணாடிகள், அலங்கார பொருட்கள் சேதம் அடைந்தன. இதைத்தொடர்ந்து அவர்கள் காமராஜர் சாலையில் 45 அடி ரோடு அருகே கேரள மாநிலத்தவர்கள் நடத்தி வரும் நகை கடன் நிதி நிறுவனத்தையும் அடித்து நொறுக்கினர். இதை தடுக்க முயன்ற அந்த நிறுவன ஊழியர் ஒருவர் தாக்கப்பட்டார். தொடர்ந்து அங்கு கேரள மாநிலத்தவர்கள் நடத்தி வரும் ஜஸ்கிரீம் பார்லர், ஓட்டல் ஆகியவையும் சூறையாடப்பட்டது. 

இதையடுத்து அவர்கள் பாக்கமுடையான் பட்டு சென்று அங்கு கேரள மாநிலத்தவர் நடத்தி வரும் பேக்கரி கடையையும் அடித்து நொறுக்கினர். பின்னர் 100 அடி ரோட்டில் கேரள மாநிலத்தவர் நடத்தி வரும் நிதி நிறுவனத்தையும் அவரக்ள் சூறையாடி விட்டு தப்பி ஓடி விட்டனர். இந்த சம்பவத்தில் மொத்தம் 3 நிதி நிறுவனங்கள் உட்பட 8 கடைகள் சூறையாடப்பட்டது. 

இந்த தகவல் புதுவை முழுவதும் பரவியதை தொடர்ந்து கேரள மாநிலத்தவர்கள் நடத்தி வரும் அனைத்து கடைகளும் மூடப்பட்டன. அந்த கடைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

மேலும் இதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க போலீஸ் சூப்பிரண்டு சிவதாசன் தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டுள்ளனர். 

மேலும் புதுவையில் நகை கடைகள் மற்றும் நிதி நிறுவனங்கள் அடித்து நொறுக்கப்பட்டது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony