ஜப்பானில் 2 அணு உலையில் கோளாறு எந்த நேரமும் வெடித்து சிதறும் அபாயம்

ஞாயிற்றுக்கிழமை, 13 மார்ச் 2011      உலகம்
japan7--2- 084746

டோக்கியோ,மார்ச்.- 14 - ஜப்பானில் பயங்கர பூகம்பம் மற்றும் சுனாமி தாக்குதலால் 2-வது அணு உலையில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த அணுஉலை எந்த நேரமும் வெடித்து சிதறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 11-ம் தேதி ஜப்பானின் கிழக்கு மற்றும் வடக்கு பகுதியில் பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. அதனையடுத்து சுனாமி பல தடவை தாக்கியதில் 2000 பேர் பலியாகிவிட்டனர். மேலும் புகுஷிமா நகரில் மிகப்பெரிய அணுநிலையம் உள்ளது. இந்த அணுநிலையத்தில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த அணுநிலையத்தில்  பல அணு உலைகள் உள்ளன. இந்த அணுநிலையம் சுனாமி தாக்குதலில் வெடித்து சிதறியது. இதில் அணு உலை இருக்கும் இடத்தை சுற்றி உள்ள சுவர் இடிந்துவிழுந்தது. இதனால் ஏற்பட்ட கதிர்வீச்சால் 11 பேர் காயம் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் அந்த அணுநிலையம் இருக்கும் இடத்தை சுற்றிலும் சுமார் 20 கிலோ மீட்டர் சுற்றளவில் வசித்த ஒரு லட்சத்து 70 ஆயிரம் பேர் வேறு இடத்திற்கு பத்திரமாக அனுப்பப்பட்டனர் என்று ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவில் உள்ள சர்வதேச அணு எரிசக்தி ஏஜன்சி தெரிவித்துள்ளது. அதேசமயத்தில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை சிக்கலாக்கியுள்ளது என்று அந்த ஏஜன்சி தெரிவித்துள்ளது. இரண்டாவது அணு உலையில் கோளாறு ஏற்பட்டிருப்பதால் அதுவும் வெடித்து சிதறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இரண்டாவது அணுஉலையில் குளிரூட்டும் கருவி பழுதடைந்துவிட்டது. அதனால் இரண்டாவது உணுஉலை வெடித்து சிதறும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று அந்த அணு உலையை இயக்கும் ஆபரேட்டர்களில் ஒருவர் தெரிவித்தார். அணுஉலைக்கு செல்லும் இணைப்பு குழாயில் அடைப்பு ஏற்பட்டது. அதனால் அணுஉலைக்கு தண்ணீர் செல்லவில்லை. மேலும் அணுஉலைக்கு அழுத்தம் அதிகரித்து வருகிறது என்றும் அந்த ஆபரேட்டர் கூறினார். இந்த அணு உலையின் நிலை குறித்து அறிக்கை ஒன்றையும் அரசுக்கு அவர் அனுப்பியுள்ளார்.  அதனை சுற்றி வசித்த மக்கள் சுமார் 30 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டனர். இவர்களை சேர்த்து மொத்தம் 3 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் பூகம்பம் மற்றும் சுனாமி தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய செஞ்சிலுவை சங்கத்தினர்கள் அடங்கிய 62 குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 400 டாக்டர்கள்,நர்சுகள், மற்றும் இதர நிவாரண பணி குழுக்கள் நிவாரண பணியில் ஈடுபட்டுள்ளனர். நடமாடும் மருத்துவமனைகளை அமைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வருகின்றனர் என்று சர்வதேச பெடரேஷன் செஞ்சிலுவை அமைப்பு சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்லது. பூகம்பம் மற்றும் சுனாமி தாக்குதலால் சுமார் 3 லட்சம் பேர் இடம் பெயர்ந்துள்ளனர். இவர்கள் பள்ளிகட்டிடங்கள் மற்றும் பொது இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தற்போது ஜப்பானில் குளிர் அதிகமாக இருப்பதால் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஸ்வட்டர்கள், போர்வைகள், சால்வைகள் செஞ்சிலுவை சங்கத்தினர்களால் உடனடியாக வழங்கப்பட்டது. விபத்துக்குள்ளாகியுள்ள புகுஷிமா அணுஉலையால் பெரும் கவலை ஏற்பட்டுள்ளது. அதனால் அந்த பகுதியில் உள்ள அனைத்து மக்களும் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் என்றும் அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.  

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: