முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நெசவாளர்கள் - மருத்துவர்களின் ஓய்வூதியம் உயர்வு

புதன்கிழமை, 28 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.28 - தொழிலாளர்கள் நலவாரியங்களில் பதிவு செய்துள்ள தொழிலாளர்கள், கைத்தறி நெசவாளர்கள், பாரம்பரிய மருத்துவர்கள் போன்றவர்களின் தற்போது பெற்றுவரும் ரூ.500 ஓய்வூதியத்தை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதாரமாக அமைபவர்கள் தொழிலாளர் பெருமக்கள் ஆவர்.  தொழிலாளர்களின் முன்னேற்றம் நாட்டின் உண்மையான வளர்ச்சிக்கு வழி வகை செய்யும் என்பதை உணர்ந்துள்ள தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் தலைமையிலான அரசு, தொழிலாளர்களின் அடிப்படை தேவைகளை nullர்த்தி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பதவியேற்றவுடனேயே பல்வேறு சமூக பாதுகாப்பு திட்டங்களின் கீழ் வழங்கப்பட்டு வரும் மாதாந்திர ஓய்வூதியத்தினை 1,000 ரூபாயாக உயர்த்தி உத்தரவிட்டார்.

அந்த வகையில், பல்வேறு சமூக பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் வழங்கப்பட்டு வரும் மாதாந்திர ஓய்வூதியத்தினை 500 ரூபாயிலிருந்து 1,000 ரூபாயாக உயர்த்தியது போல்,   தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு செய்துள்ள 60 வயது நிறைவு செய்த தொழிலாளர்களுக்கு ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வரும் 500 ரூபாயையும் 1,000 ரூபாயாக உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம், கட்டுமான நல வாரியம், தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர் நல வாரியம், தமிழ்நாடு ஆட்டோ ரிக்ஷா மற்றும் வாடகை ஊர்தி ஓட்டுநர் நல வாரியம், தமிழ்நாடு சலவைத் தொழிலாளர் நல வாரியம், தமிழ்நாடு முடித்திருத்துவோர் நல வாரியம், தமிழ்நாடு தையல் தொழிலாளர் நல வாரியம், தமிழ்நாடு கைவினைத் தொழிலாளர் நல வாரியம், தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர் நல வாரியம், தமிழ்நாடு கைத்தறி மற்றும் கைத்தறி பட்டு நூல் நெய்யும் தொழிலாளர் நல வாரியம், தமிழ்நாடு காலணி, தோல் பொருட்கள் உற்பத்தி மற்றும் தோல் பதனிடுதல் தொழிலாளர் நல வாரியம், தமிழ்நாடு ஓவியர் நல வாரியம், தமிழ்நாடு பொற்கொல்லர் நல வாரியம், தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளர் நல வாரியம், தமிழ்நாடு வீட்டுப் பணியாளர் நல வாரியம், தமிழ்நாடு விசைத்தறி நெய்யும் தொழிலாளர்கள் நல வாரியம் மற்றும் தமிழ்நாடு பாதையோர வியாபாரிகள் மற்றும் கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர் நல வாரியம், ஆகிய நலவாரியங்களில் பதிவு செய்து,  60 வயது நிரம்பிய தொழிலாளர்கள் 11,062 பேர் பயன் பெறுவார்கள்.    

இதே அடிப்படையில்,  தமிழ்நாடு கூட்டுறவு கைத்தறி நெசவாளர் அமைப்பின் கீழ் உள்ள கைத்தறி நெசவாளர்களுக்கான முதியோர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் 60 வயதினை கடந்த நெசவாளர்களுக்கு,  மாதந்தோறும் ஓய்வூதியமாக  வழங்கப்பட்டு வரும் 400 ரூபாயினை 1,000 ரூபாயாக உயர்த்தி வழங்கவும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.  இதனால், 19,404 நெசவாளர்கள் பயன்பெறுவர்.  தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் முந்தைய ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு கூட்டுறவு கைத்தறி நெசவாளர் குடும்ப ஓய்வூதியத் திட்டம் 1.1.92 முதல் துவக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகின்றது.  

இத்திட்டத்தின்படி, நெசவாளர் 60 வயதுக்கு முன் இறக்க நேரிட்டால், அவரது வாரிசுதாரருக்கு குடும்ப ஓய்வூதியமாக 550 ரூபாய் அவர் இறந்த நாளிலிருந்து 10 ஆண்டு அல்லது இறந்தவர் உயிருடன் இருந்திருந்தால் 60 வயது எய்தக் கூடிய காலம் வரையில்,  இதில் எது நெசவாளர்களின் குடும்பத்திற்கு  அதிக பயனளிக்குமோ, அவ்வகையில் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகின்றது.

தற்போது, இவர்களது மாதாந்திர குடும்ப ஓய்வூதியத் தொகையினையும் 550 ரூபாயிலிருந்து 1,000 ரூபாயாக உயர்த்தி வழங்கவும் தமிழக முதலமைச்சர்  ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.  இதனால், 1,649 பயனாளிகள் பயன்பெறுவர்.

இதேபோன்று, பரம்பரை இந்திய மருத்துவ வைத்தியர்களின் வறுமை நிலையினை களையும் பொருட்டு, சம்பந்தப்பட்ட மருத்துவக் கழகத்தில் பதிவு செய்து வைத்தியம் செய்துவரும், 60 வயதுக்கு மேற்பட்ட பரம்பரை சித்தா, ஆயூர்வேதா, யுனானி மற்றும் ஓமியோபதி மருத்துவர்களுக்கு தற்பொழுது வழங்கப்பட்டு வரும் மாத ஓய்வூதியத்தை 500 ரூபாயிலிருந்து 1,000 ரூபாயாக உயர்த்தி வழங்கவும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதனால் 9,563 மருத்துவர்கள் பயனடைவார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony