ஜப்பானில் 4-வது அணுஉலையும் வெடித்தது

செவ்வாய்க்கிழமை, 15 மார்ச் 2011      உலகம்
No 4(Correct)

சென்டாய், மார்ச்16 -  பூகம்பம் மற்றும் சுனாமியால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள ஜப்பான் நாட்டில் உள்ள அணு மின் நிலையம் ஒன்றில் ஏற்கனவே 3 அணு உலைகள் வெடித்து கதிர்வீச்சு ஏற்பட்ட நிலையில் நேற்று 4வது அணு உலையும் வெடித்து சிதறியது. இதனால் கதிர்வீச்சு அதிக அளவில் பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

ஜப்பானில் கடந்த வெள்ளிக்கிழமை மிகப்பெரிய பூகம்பம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மிகப்பெரிய சுனாமியும் ஏற்பட்டது. இதனால் ஜப்பானில் பல ஆயிரம் கோடிக்கு சேதங்கள் ஏற்பட்டன. இதுவரை சுமார் 20,000 பேர் பலியாகியுள்ளனர்.

இது வரை ஜப்பானில் ஏற்பட்டுள்ள சேதங்களின் மதிப்பு ரூ.8 லட்சம் கோடி இருக்கும் என்று பொருளாதார வல்லுனர்கள் மதிப்பீடு செய்துள்ளனர்.

கட்டிடங்கள்,  வீடுகள் பெரும்பாலானவை தரை மட்டமாகிவிட்டன. இதே போல ஹுக்குசிமா என்ற இடத்தில் உள்ள அணு மின்சார நிலையத்தில் இதுவரை 3 அணு உலைகள் வெடித்து சிதறியுள்ளன. இதனால் கதிர்வீச்சு அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த அணு மின் நிலையத்தில் நேற்று மேலும் 2 வெடி விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் அந்த அணு மின் நிலையத்திலிருந்து வெளியேறும் கதிர்வீச்சின் அளவு அதிகரித்துள்ளது என்று பிரதமர் நவோடோகான் தெரிவித்துள்ளார்.

இந்த அணு கதிர்வீச்சினால் மனிதர்களின் உடல் நலத்திற்கு பெரும் ஆபத்து ஏற்படலாம் என்று பிரதமரின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

தலைநகர் டோக்கியோவில் சாதாரண அளவை விட கதிர்வீச்சு அதிகமாக உள்ளது என்றும், இது மனிதர்களுக்கு ஆபத்தானது என்றும் அந்த செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

இந்த அணு சக்தி நிலையத்தை சுற்றி சுமார் 30 கி.மீ.சுற்றளவுக்கு பாதுகாப்பு மண்டலம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு மேல் உள்ள மக்களும் கூட தங்களுடைய வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

இந்த அணு மின் நிலையத்தின் 4-வது அணு உலையில் நேற்று திடீர் என்று தீப்பிடித்துக்கொண்டது. இந்த தீ உடனடியாக அணைக்கப்பட்டுவிட்டது என்றாலும் அணுக் கதிர் வீச்சு வெளியேற்றத்தை தடுக்க முடியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த அணு மின் நிலையத்தில் உள்ள 6 அணு உலைகளில் 4 உலைகள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. 

ஜப்பானில் இரண்டாம் உலகப்போரின் போது ஹிரோஷிமா, நாகசாகி என்ற இரு நகரங்கள் மீது அமெரிக்க போர் விமானங்கள் அணு குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின. இதில் லட்சக்கணக்கான மக்கள் பலியானார்கள். மேலும் பல லட்சக்கணக்கான மக்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு நீண்ட நெடுங்காலமாக அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இப்போது அணு மின் நிலையத்தில் ஏற்பட்டுள்ள அணு கதிர் வீச்சினால் அப்படி ஒரு பாதிப்பு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தின் பிடியில் ஜப்பான் மக்கள் சிக்கி தவிக்கிறார்கள்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: