பழனி தைப்பூச திருவிழா தேரோட்டத்துடன் நிறைவு

ஞாயிற்றுக்கிழமை, 12 பெப்ரவரி 2012      ஆன்மிகம்
Image Unavailable

 

பழனி, பிப்.12 - பழனியில் தெப்பத் தேர் உலாவுடன் தைப்பூச திருவிழா நிறைவு பெற்றது. தமிழகத்தின் புகழ் பெற்ற கோயிலான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தைப்பூச திருவிழா பிப்ரவரி 1 ம் தேதி அருள்மிகு பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது. 10 நாள் விழாவை முன்னிட்டு தினமும் வள்ளி, தேவசேனா சமேதர் முத்துக்குமார சுவாமி வெள்ளி ஆடு, வெள்ளி காமதேனு, வெள்ளி யானை, தந்த சப்பரம், புதுச்சேரி சப்பரம், தங்க குதிரை, தங்க மயில் போன்ற வாகனங்களில் வீதியுலா எழுந்தருளினர். 

கடந்த 6 ம் தேதி திருக்கல்யாணம், வெள்ளி தேரோட்டமும், 7 ம் தேதி தைப்பூச திருத்தேரோட்டமும் நடைபெற்றது. நிறைவு நாள் நிகழ்ச்சியாக வெள்ளிக் கிழமை அருள்மிகு பெரியநாயகி அம்மன் கோயில் அருகில் உள்ள தெப்பத்தில் தெப்ப தேரோட்டம் விமர்சையாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு தெப்பம் நிரப்பப்பட்டு நடுவில் உள்ள கல் மண்டபத்தில் வள்ளி, தேவசேனா சமேதர் முத்துக்குமார சாமிக்கு பால், பன்னீர், விபூதி, பஞ்சாமிர்தம் போன்ற பொருட்களால் அபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து உபசாரம் செய்யப்பட்டது. நகைகள், பட்டாடைகள் சாத்தப்பட்டு மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரமும் தொடர்ந்து மகா தீபாராதனையும் நடைபெற்றது. 

இதை தொடர்ந்து வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த தெப்பத் தேரில் சுவாமி ஏற்றம் செய்யப்பட்டு தெப்பத் தேர் உலா நடைபெற்றது. தேர் நான்கு திசைகளுக்கும் வந்த போது சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை அமிர்தலிங்க குருக்கள், சுந்தரமூர்த்தி சிவம் குருக்கள் ஆகியோர் செய்தனர். ஒவ்வொரு முறையும் தெப்பத் தேர் தெப்பத்தை சுற்றி வந்த போதும் வாணவேடிக்கை நிகழ்த்தப்பட்டது. இரவு 11.30 மணியளவில் கொடியிறக்கப்பட்டு விழா நிறைவு பெற்றது. தெப்பத் தேரோட்டத்தில் பழனி கோயில் துணை ஆணையர் மங்கையர்கரசி, டி.எஸ்.பி. குப்புராஜ், பேஸ்கார் வீரமணி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: