மலாலாவுக்கு நோபல்: பாகிஸ்தானுக்கு பெருமை: நவாஸ்

வெள்ளிக்கிழமை, 10 அக்டோபர் 2014      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத், அக்.11 - சிறுமிகளின் கல்வி உரிமை போராளியான மலாலா யூசுப்சாய்க்கு அமைதி நோபல் கிடைத்திருப்பது தங்களது நாட்டுக்குப் பெருமை என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

குழந்தைத் தொழிலாளர்களை மீட்டு, அவர்களுக்கு மறுவாழ்வு அமைத்து தந்து கொண்டிருக்கும் இந்திய சமூக ஆர்வலர் கைலாஷ் சத்யார்த்தியுடன், இந்த வருடத்துக்கான நோபல் பரிசை பாகிஸ்தான் போராளிச் சிறுமி மலாலா யூசுப்சாய் வென்றுள்ளார்.

மலாலாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீப் கூறும்போது, "மலாலா, பாகிஸ்தான் நாட்டுக்குக் கிடைத்த பெருமை. அவருக்கு கிடைத்த பெருமை, நாட்டு மக்கள் அனைவருக்கும் கிடைத்த பெருமை. உலகம் முழுவதிலும் உள்ள சிறுவர் - சிறுமியர் மலாலாவின் வழியை பின்பற்ற வேண்டும். உறுதியான போராட்ட குணத்தை பெற வேண்டும்.

பெண்களின் குரல் கூட உயர்த்தப்படாத சமுதாயத்தில் கல்வி போராட்டத்தை ஏற்படுத்தியவர்தான் மலாலா. இது மலாலா ஒருவருக்கு கிடைத்த பரிசு அல்ல, பாகிஸ்தானின் பெண்களுக்குக் கிடைத்த பரிசு. அவர்தான் நமது கண்களின் ஒளியாகவும் இதயத்தின் குரலாகவும் திகழ்கிறார்" என்றார்.

பாகிஸ்தானின் பழங்குடிகள் அதிகம் வசிக்கும் ஆப்கான் எல்லையில் உள்ள ஸ்வாட் மாகாணத்தின் மிங்கோரா நகரைச் சேர்ந்தவர் மலாலா யூசுப்சாய். பாகிஸ்தான் சிறுமிகளின் கல்வி உரிமைக்காக போராடிய மலாலாவை இரண்டு வருடங்களுக்கு முன்னர் தாலிபான் பயங்கரவாதிகள் சுட்டதில் அவர் படுகாயமடைந்தார்.

உயிருக்கு போராடிய மலாலாவுக்கு லண்டனில் உள்ள ராணி எலிசெபெத் மருத்துவமனையில் சிக்கலான அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டதில் அவர் உயிர் பிழைத்தார். அதன் பின்னர் தாலிபான்களின் கடுமையான மிரட்டல்களையும் தாண்டி அவர் அங்கு சிறுமிகளுக்கு கல்வி மறுக்கப்படுவதை எதிர்த்து போராடினார். சிறுமிகள் பள்ளிகளுக்கு சென்றால், அந்த இடம் தகர்க்கப்படும் என்று தாலிபான்கள் எச்சரித்த பின்னரும் மலாலாவின் போராட்டம் தொடர்ந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்: