முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

நிலாவை போன்று...

சீனாவில், யூகோங்-1 என்று பெயரிடப்பட்ட ஆய்வகத்திற்குள் நிலாவில் உள்ள தட்பவெப்பநிலை, காற்றழுத்தம் ஆகியவை இருக்கும். இதன் மூலம் நிலாவில் மனிதன் தங்கி அங்குள்ள சூழலை கையாள்வதற்கான ஆய்வாக இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. “விண்வெளி ஆய்வில் சீனா, உலகின் மிகப்பெரிய சக்தியாக வளர்ந்து வருகிறது. 2018-ம் ஆண்டு நிலாவின் மறைவிடங்களை ஆராயும் பணிக்கு முன்னோட்டமாக இம்முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. மாணவர்களில் 4 பேர் கொண்ட முதல் குழு, 60 நாட்களும், 4 பேர் கொண்ட இரண்டாவது குழு 200 நாட்களும் தங்குவார்கள். இந்த ஆய்வகத்தில் ஒரு தங்குமிடம், 2 தாவரங்களுக்கான பசுமைக்கூடம் இருக்கும். சீனா, ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்துடன் இணைந்து நிலா கிராமத்தை உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது.

மனிதர்களுக்கு நீல நிறக்கண்கள் எப்போது தோன்றின?

உலக அழகி பட்டம் பெற்ற ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல்வேறு நபர்களுக்கும் நீல நிற கண்கள் இருப்பதை நாம் பார்த்திருப்போம். உள்ளூர் வழக்கில் இதை நாம் பூனைக் கண் என்று குறிப்பிடுவோம். சுமார் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரை உலகம் முழுவதும் மனிதர்களுக்கு பொதுவாக அடர் பழுப்பு நிற கண்களே காணப்பட்டன. கருங்கடல் பகுதியில் உள்ள மனிதர்களிடம் மரபணுவில் ஏற்பட்ட ஒரு சிறிய மாற்றம் காரணமாக அடர் பழுப்பு நிறத்திலிருந்து நீல நிறக் கண்கள் உருவாகின. இது பின்னர் படிப்படியாக பல்வேறு பிரதேசங்களுக்கும் பரவின. தற்போது உலக மக்கள் தொகையில் சுமார் 8 சதவீதம் பேர் பூனை கண் எனப்படும் நீல நிற கண்களுடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

176 ஏக்கரில் அலுவலகம்

ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்சின் கனவு திட்டமான ஸ்பேஸ்ஷிப் கேம்பஸ் 2, கலிஃபோர்னியாவில் சுமார் 2.8 மில்லியன் சதுர அடி பரப்பளவில் அமையவுள்ளது. இதன் ஒட்டு மொத்த கட்டுமான செலவு 5 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இங்கு 176 ஏக்கர் பரப்பளவில் கண்ணாடிகளால் ஆன பெரிய சுவர்கள் கட்டமைக்கப் பட்டுள்ளன. பெரிய அலுவலகங்களில் ஒன்றாகவும் கருதப்படும் இந்த வளாகத்தில் 14,200 ஊழியர்கள் பணிபுரிய முடியும். இதன் தூரம் மட்டும் ஒரு மைலுக்கும் அதிகமாம். இந்த வளாகத்தின் முதன்மை கட்டிடத்தின் உள்கட்டமைப்புகளுக்கு மட்டும் 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவு செய்யப்பட்டுள்ளது. 300,000 சதுர அடியில் இரு பெரிய கட்டிடங்கள் இந்த வளாகத்தினுள் ஆய்வு மற்றும் தயாரிப்பு பணிகளுக்காக கட்டமைக்கப்படுகிறது. 

43 நாடுகளில் மன்னராட்சி

ஜனநாயகம், சோஷலிசம், கம்யூனிசம் என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கும் இன்றைய நவீன யுகத்தில் உலகில் சில நாடுகள் இன்னும் மன்னராட்சியின் கீழ் தான் உள்ளன. அவ்வாறு உலகில் மொத்தம் 43 நாடுகள் இன்றைக்கும் மன்னராட்சியின் கீழ் உள்ளன. அவற்றில் ஜப்பான், ஸ்பெயின், சுவிஸ், பூடான், தாய்லாந்து, மொனாகோ, சுவீடன், நெதர்லாந்து உள்ளிட்ட 43 நாடுகளை உலகில் உள்ள 28 அரச குடும்பங்கள்தான் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன என்றால் ஆச்சரியம் தானே..

எதிரியா நண்பனா என கண்டு பிடிக்கும் நீர்யானைகள்

காட்டில் வளரும் நீர் யானைகள் அதிகம் ஒலி எழுப்பக் கூடியவை. அதன் சத்தம் ஏரிகள் மற்றும் ஆறுகளில் நீண்ட தூரத்துக்கு எதிரொலிக்கும். 'வீஸ் ஹாங்க்ஸ்' என்று அழைக்கப்படும் ஒரு வித ஒலியை, நீர்யானைகள் எதற்கு எழுப்புகின்றன என்று இதுவரை தெரியாமல் இருந்தது. ஆப்ரிக்காவில் நீர்யானைகள் குறித்து ஆராய்ந்து கொண்டிருக்கும் விஞ்ஞானிகள், அந்த தனித்துவமான ஒலி, தன் நண்பர்கள் முதல் எதிரிகள் வரை பிரித்துக் கூற பயன்படுவதாகக் கூறுகின்றனர். மேலும் நீர்யானைகள் தங்கள் கூட்டத்தில் உள்ள மற்ற நீர்யானைகளின் குரலைக் கொண்டு, தனித்துவமாக அடையாளம் கண்டு கொள்ளும் எனவும் கூறியுள்ளனர். நீர் யானைகளால் தன் நண்பர்கள், உறவினர்கள், அறிமுகமில்லாத நீர்யானைகளை அதன் குரலோசையைக் கொண்டு அடையாளம் கண்டு கொள்கின்றன.

சடலத்துடன் நடனமாடும் சடங்கு

உலகம் முழுவதும் உள்ள பல்வேறு இனக்குழுக்களிடமும் விதவிதமான சடங்கு சம்பிரதாயங்கள் காணப்படுகின்றன. அதில் மடகாஸ்கரில் உள்ள மலகாசி பழங்குடியினர் ஃபமதிஹானா என்ற ஒரு வித்தியாசமான இறுதிச்சடங்கு பழக்கவழக்கத்தை வைத்திருக்கிறார்கள். இவர்கள் அடக்கம் செய்யப்பட்ட தங்களுடைய மூதாதையர்களை 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை கல்லறையிலிருந்து வெளியே எடுப்பார்கள். அவர்கள் உடலில் இருக்கக்கூடிய பழைய துணிகளை அகற்றிவிட்டு மீண்டும் புதிய துணியை போர்த்தி தலைக்கு மேலே வைத்து கல்லறையை சுற்றி நடனம் ஆடுகிறார்கள். இறந்தவர்களை போர்த்திய புதிய துணியில் அவர்களுடைய பெயரை எழுதுகிறார்கள். இதற்கு காரணம் அந்த பெயர் எப்பொழுதும் அவர்களுடைய நினைவில் இருக்க வேண்டும் என்பதற்காகவாம். இறந்தவர்களுடைய ஆவியானது மூதாதையர்களின் உலகில் இணைகிறது என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இந்த வழக்கத்தை அவர்கள் வைத்துள்ளார்கள். இது ஒவ்வொரு ஐந்து முதல் ஏழு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறுகிறதாம். கேட்கவே வித்தியாசமாக இருக்கிறது அல்லவா..

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 5 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 2 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 1 week ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago