முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

பைலட் இல்லாமல் பறக்கும் ஹெலிகாப்டர் அமெரிக்கா முதன்முறையாக சாதனை

ஆள் இல்லாத விமானங்களையும், பைலட் இல்லாத விமானங்களையும் தற்போது நாம் கேள்வி பட்டு வருகிறோம். தற்போது காரிலும் ஆட்டோ பைலட் எனப்படும் தானியங்கி கார்கள் வந்து விட்டன. ஆனால் மிகவும் சிக்கலான செயல்பாடுகளை கொண்ட ஹெலிகாப்டர்களை பைலட் இல்லாமல் ஓட்ட முடியுமா என்ற கேள்வி எழுவது இயல்புதான். ஆனால் தற்போது முடியும் என அமெரிக்கா நிரூபித்துள்ளது. பிளாக் ஹாக் ரக ஹெலிகாப்டர்களை முழுக்க முழுக்க பைலட்டே இல்லாமல் ஆட்டானமஸ் முறையில் இயங்கும் வரையில் வடிவமைத்துள்ளது அமெரிக்க ராணுவம். இதற்கான முதல் சோதனை ஓட்டம் கடந்த 5 ஆம் தேதியும் பின்னர் கடந்த 7 தேதியும் நிகழ்த்தி பார்க்கப்பட்டன. இதில் இந்த பைலட் இல்லா ஹெலிகாப்டர் மிகச் சரியாக மேலெழுந்து சென்று பறந்து. மிகச் சரியாக தரையில் வந்து லேண்ட் ஆனது.  இனி வருங்காலத்தில் ஆட்டோ பைலட் கார்களை போல ஆட்டோ பைலட் ஹெலிகாப்டர்களும் வானில் வலம் வருவதை பார்க்கும் காலம் வெகு தொலைவில் இல்லை.

100 வயதுக்கு மேற்பட்டவர்கள் அதிகம் பேர் வசிக்கும் அதிசய சிற்றூர்

இத்தாலியில் உள்ள சுமார் 1765 பேர் வசிக்கும் சிற்றூர் ஒன்றில் 10 க்கும் மேற்பட்டோர் தங்களது 100 ஆவது பிறந்த நாளை கொண்டாட உள்ளனர். இத்தாலியில் உள்ள சர்தினியா என்ற தீவில் அமைந்துள்ள பெர்தாஸ்தேபோகு (Perdasdefogu) என்ற சிற்றூர்தான் அந்த பெருமைக்குரிய இடமாகும்.உலகில் 100 வயதுக்கு மேற்பட்டோர் அதிகம் பேர் வசிக்கும் 5 இடங்களில் சர்தினியாவும் ஒன்றாகும். ஒவ்வொரு 1 லட்சம் குடியிருப்பு வாசிகளில் சுமார் 33.6 சதவீதம் பேர் 100 வயதுக்கும் மேற்பட்டவர்களாக இருக்கின்றனர். கடந்த 2012 ஆம் ஆண்டு இந்த ஊர் கின்னஸில் இடம் பெற்றது. மெலிஸ் என்பவரின் குடும்பம் கடந்த 9 தலைமுறையாக இதே ஊரில் வசித்து வருகின்றனர் என்ற சாதனையுடன் அது கின்னஸ் சாதனை படைக்கப் பெற்றது.  கன்சோலடா மெலிஸ் என்பவரின் வம்சாவளியினர்தான் இந்த ஊரின் மிகவும் மூத்த குடும்ப வம்சாவளியினர் ஆவர். அவர் தனது 105 ஆவது வயதில் கடந்த 2015 இல் காலமானார். இந்த ஊரை ஆய்வு செய்த விஞ்ஞானிகள், சுத்தமான காற்று, மாசில்லாத சுற்றுச்சூழல், ஆரோக்கியமான உணவு உள்ளிட்டவைதான் இங்கு வாழ்பவர்கள் அதிக ஆண்டுகள் உயிருடன் இருப்பதற்கு காரணம் என்பதை கண்டறிந்தனர். தற்போது 10க்கும் மேற்போட்டோர் இவ்வூரில் சென்சுரி அடித்துள்ளனர். கேட்கவே பொறாமையாக இருக்கு அல்லவா..

பேஸ்புக் எண்ணிக்கை

உலகின் பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக் சேவையை மாதந்தோரும் 200 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். இது கடந்த ஆண்டை விட 17 சதவிகிதம் அதிகம் ஆகும். ட்விட்டர் சேவையை ஏப்ரல் மாத வாக்கில் சுமார் 32.8 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். இதேபோல் ஸ்நாப்சாட் சேவையை மார்ச் 31-ந்தேதி வரை 16.6 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர்.

புகைக்கு பதிலாக நீரை வெளியேற்றும் கார்

பொதுவாக கார் உள்ளிட்ட மோட்டார் வாகனங்கள் என்றாலே புகையை கக்கிக் கொண்டு செல்லும் என்பது நாம் அனைவருக்கும் தெரியும். ஆனால் நீரை வெளிவிடும் கார் வந்துள்ளது தெரியுமா.. இந்தியாவில் ஹைட்ரஜனை எரிபொருளாகப் பயன்படுத்தும் முதல் காரை டொயோட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இது டொயோட்டாவின் இந்த மிராய் வகைக் கார்கள் ஒரு முறை சார்ஜ் செய்தால் 646 கிலோமீட்டர் வரை செல்லும் திறன்கொண்டவை. பெட்ரோல், டீசல் கார்களுக்குச் சிறந்த மாற்றாக விளங்கும் இந்தக் காரில் அதிக அழுத்தத்தைத் தாங்கும் ஹைட்ரஜன் எரிபொருள் டேங்கும், மின்மோட்டாரும் உள்ளன. ஹைட்ரஜனை நீராகவும் ஆக்சிஜனாகவும் மாற்றுவதன் மூலம் கார் ஓடுவதற்கான ஆற்றல் கிடைக்கிறது. இந்தக் காரில் உள்ள எஞ்சின் புகையை வெளியிடுவதற்குப் பதில் நீரை வெளியிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

இரும்பு மழை பெய்யும் கோள்

வாஸ்ப் – 76பி என்ற ஒரு புத்தம் புதிய கோள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதில்  இரும்பு மழை பெய்கிறது என்பதை விண்வெளி அறிஞர்கள் கண்டு வியந்திருக்கிறார்கள்.வாஸ்ப் 76பி என்று அறியப்படும் இந்த கோள், அதனுடைய நட்சத்திரத்தை சுற்றி வரும்போது, அதன் பகல் பகுதி வெப்பநிலை 2,400 டிகிரி செல்ஷியஸ் ஆக இருக்கிறது. இந்த வெப்பநிலை உலோகங்களை ஆவியாக்கும் ன்மை கொண்டது. இரவு நேரப் பகுதியில் இந்தக் கோளின் வெப்பநிலை 1400 டிகிரியாக குறைந்துவிடுகிறது. இந்த வெப்பநிலையில், பகல் நேரத்தில் ஆவியான உலோகங்கள் இறுகி மழையாகப் பெய்கின்றன.ஜெனீவாவை சேர்ந்த ஆய்வாளர் டாக்டர் டேவிட் ஹெரேயின்ச்  கூறுகையில்,  தண்ணீர் துளிகளுக்கு பதிலாக இரும்பு துளிகளின் சாரல் அடித்தால் எப்படி இருக்கும் என நினைத்து பாருங்கள் என்றார்.நேச்சர் என்ற சஞ்சிகையில் இந்த கோள் குறித்த கண்டுபிடிப்புகளை சுவிஸ் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

புதிய கண்டுபிடிப்பு

கார்பன் டை ஆக்சைடை மீத்தேனாக மாற்றும் முறையை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ரோடியம் என்ற நுண்துகள் மூலம் நிகழ்த்தப்படும் வேதிவினையால் உலக அளவில் ஏற்படும் மாசுபாட்டுக்கு முக்கிய காரணியாக விளங்கும் கார்பன் டை ஆக்சைடினை மீத்தேனாக மாற்ற முடியும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்