முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

ரயிலை தூக்கிச்செல்லும் விமானம் எதிர்காலத்தில் எதுவும் சாத்தியம்

பயண நேரம் மிச்சமாகும் ரயிலைத் தூக்கிச் செல்லும் விமானம். கேட்பதற்கு ஆச்சர்யமாகத் தோன்றும் இந்த யோசனை வருங்காலத்தில் உண்மையாகப் போகிறது. ஈ பி எஃப் எல் (EPFL) என்ற ஸ்விட்சர்லாந்து பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள் இதற்கான மாதிரியை உருவாக்கியுள்ளனர். இதன் பெயர் க்ளிப் ஏர் (CLIP AIR), இதன்படி, ரயில்பாதையில் சென்று கொண்டிருக்கும் ரயில் பெட்டிகளை பறந்து செல்லும் விமானம், தூக்கிச் சென்று சேர்க்க வேண்டிய இடத்துக்குக் கொண்டு செல்லும்.  ஒரு நேரத்தில் 3 பெட்டிகளை இந்த விமானத்தால் கொண்டு செல்ல முடியும். பயணிகள், சரக்குகள், கச்சா எண்ணெய் போன்றவற்றை இந்த விமானங்கள் எடுத்துச் செல்லும். இந்த விமான மாதிரியின் மூலம் ரயில், தரை மற்றும் வான்வழிப் போக்குவரத்தை ஒருங்கிணைக்கும் முறை சாத்தியமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோன்ற விமானங்களுக்காக இப்போது ஏர்போர்ட் (Airport) இருப்பதைப் போன்று வருங்காலத்தில் ஸ்கை ஸ்டேஷன்ஸ் (Skystations) என்பவை அமைக்கப்படும்.

எப்போதும் போனும் கையுமாக..

உலகம் முழுவதும் ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், காலை தூங்கி எழுந்தவுடன் முதல் ஐந்து நிமிடங்களில் ஸ்மார்ட் போனை தேடி எடுத்து விடுவதாக 61 சதவீதத்தினரும், முதல் அரை மணி நேரத்தில் ஸ்மார்ட்போனை எடுத்துவிடுவதாக 88 சதவீதத்தினரும், 96 சதவீதத்துக்கும் அதிகமானோர் முதல் ஒரு மணி நேரத்துக்குள் மொபைலை எடுத்துவிடுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.இதேபோல், 74 சதவீதம் பேர், இரவு தூங்கச் செல்வதற்கு 15 நிமிடங்கள் முன்பு வரை ஸ்மார்ட்போனைப் பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது. 53,000 பேரிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் மேற்கண்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.

சூப்பர் ஃபாஸ்ட்

பூம் நிறுவனம் உருவாக்கியுள்ள சூப்பர்சோனிக் எக்ஸ்பி1 விமானம் ஒலியையே மிஞ்சும் விமானமாம். மாதிரியாக உருவாக்கப்பட்டுள்ள இதில் விமானி அறை தவிர்த்து, 44 பேர் பயணிக்கலாம். உதாரணத்திற்கு, நியூயார்க்கிலிருந்து லண்டனுக்கு பயணிக்க 7 மணி நேரம் எனில், இவ்விமானத்தில் 3.5 மணிநேரம் பயணித்து விடலாம். லாஸ் ஏஞ்சல்சிலிருந்து சிட்னிக்கு செல்ல 15 மணி நேரமாகிறது என்றால் சூப்பர் சோனிக் எக்ஸ் பி1 மூலம் 6.45 மணி நேரத்தில் சென்று விடலாம். சூப்பர் சோனிக் விமானத்திற்கு முன்பு அந்த இடத்தில் கம்பீரமாக வீற்றிருந்தது கான்கார்டு விமானம்தான்.

கிணறுகள் வட்ட வடிவில் இருப்பது ஏன் தெரியுமா?

கிணறு என்பது மழைநீரை சேகரிப்பதற்கும், நிலத்தடி நீரை நாம் எடுத்து பயன்படுத்துவதற்கும் வசதியாக நிலத்தில் தோண்டப்படும் ஒருவகை குழி ஆகும். கிணறுகள் எங்கு இருந்தாலும் அதிகபட்சமாக வட்ட வடிவிலே அமைக்கப்பட்டிருக்கும். அதற்கு காரணங்கள் இருக்கின்றன. வட்டமாக கிணறு அமைப்பதற்கான காரணம், வட்டம் என்பது இரண்டு அரை வட்ட வளைவுகள் ஒன்று சேர்வதால் உருவாகின்றது. பொதுவாக ஆர்ச் எனப்படும் அரை வட்ட வடிவம் கொண்ட வளைவுக்கு அதிகளவில் எடை தாங்கும் திறன் உண்டு. அதனால் தான் அந்த காலத்தில் கட்டிடங்கள், மண்டபங்கள், பாலங்கள் போன்றவைகள் அனைத்து இடங்களிலும் அரை வட்ட வடிவ வளைவுகளுடன் அமைக்கப்பட்டிருக்கும். கிணறுகள் தோண்டியவுடன், அவற்றின் நான்கு பக்கங்களிலும் கிணற்றின் வடிவம் சிதையாமல் இருக்க செய்வது அதை சுற்றிலும் வட்டவடிவில் உள்ள மண் மற்றும் கல்லின் எடைகள் தான் காரணமாகின்றன. இதனால் அவை மண், கல் சரிவு ஏற்படாமலும், கிணறு உறுதியாகவும் இருப்பதற்கு உதவுகின்றன. கிணற்றை வட்டவடிவில் அமைக்கும்போது மட்டுமே அதன் எடை தாங்கும் திறன் அதிகரிக்கிறது, எனவே தான் கிணறு வட்டமாக அமைக்கப்படுகிறது.

வறட்டு இருமலுக்கு…

மாதுளம் பழச்சாறுடன் ஒரு தேக்கரண்டி தேன், ஒரு தேக்கரண்டி இஞ்சி சாறு கலந்து பருகினால் வறட்டு இருமல் சரியாகும். நாட்டு மருந்து கடைகளில் திப்பிலி கிடைக்கும். இதை வறுத்து பொடி செய்து தேன் கலந்து கொடுத்தால் குழந்தைகளுக்கும் வறட்டு இருமல் குணமாகும். மேலும், இளஞ் சூடான நீரில் ஒரு ஸ்பூன் தேன், சிறிது எலுமிச்சை சாறு கலந்து அருத்தினால் வறட்டு இருமல் குணமாகும்.

கதவுகளே இல்லாத கிராமம்

கிராமம் என்றால் வீடுகள் இருக்கும். வீடுகள் என்றால் வாசல் கதவுகள் இருக்கும்தானே.. ஆனால் ஒரு வித்தியாசமான கிராமத்தில் வீடுகளுக்கு வாசல் கதவுகளே கிடையாது. அந்த கிராமம் எங்குள்ளது தெரியுமா...இந்தியாவில்தான். மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஷானி ஷிங்னாப்பூர்தான்  அது. இது சனீஸ்வர பகவானின் திருத்தலமாகவும் வணங்கப்படுகிறது. சுமார் 300 ஆண்டுகள் பழமையான இந்த கோயிலை கொண்டுள்ள இந்த கிராமத்துக்கு ஒவ்வொரு நாளும் சுமார் 40 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கதவு இல்லாத போதும் இந்த கிராம மக்கள் இரவில் நன்றாகவே உறங்குகின்றனர். ஏன் தெரியுமா... சனி பகவான் காவல் காப்பதாக ஒரு ஐதீகம். என்னா ஒரு ஆச்சரியம் பாருங்கள்..

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்