முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

செயற்கை சிறுநீரகம்

இதய பாதிப்புக்கு ‘பேஸ் மேக்கர்’ கருவி பொருத்தப்படுவது போல் சிறுநீரகம் செயலிழந்தால் பொருத்துவதற்கு செயற்கை சிறுநீரகத்தை 15 ஆண்டுகளுக்கும் மேலாக கொலம்பியா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் வில்லியம் பி‌ஷல், சுவோராய் ஆகியோர் கண்டுபிடித்துள்ளனர். கையடக்க வடிவிலான இந்த கருவி, காபி கப் அளவில் நானோ தொழில் நுட்ப முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தப்படும் மைக்ரோசிப்பை பயன்படுத்தி அதில் சிறுநீரக முடிச்சுகளில் இருந்து திசு செல்களை எடுத்து சல்லடையில் தேனடை உருவாக்குவது போல் செல்களை வளர வைக்கிறார்கள். பின்னர் அந்த எந்திரத்தை அடிவயிற்றுக்குள் வைத்து சிறுநீரக ரத்த நாளங்களுடன் இணைத்து பொருத்தி வைத்து விடுவார்கள். இந்த செயற்கை கருவி ரத்த சுத்திகரிப்பு மட்டுமின்றி இயற்கையாக சிறுநீரகம் செய்யும் வேலைகளை செய்யும்.

2000 ஆண்டுகள் பழமையான கல்லறையில் எழுதப்பட்டிருந்தது பூஜ்யமா?

கர்நாடக மாநிலம் தஷிண கன்னட மாவட்டத்தில் உள்ள கடப்பா தாலுகாவில் ராமகுஞ்சா கிராமத்தில் பாண்டவர் குகை எனப்படும் தொல்லியல் எச்சங்கள் காணப்படுகின்றன. இப்பகுதியில் உள்ள முந்திரி தோப்பில் கல்லால் ஆன கல்லறை ஒன்று இருப்பதாக உள்ளூர் வாசிகள் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் எம்எஸ்ஆர்எஸ் கல்லூரியின் தொல்லியல் துறை தலைவர் பேரா. முருகேஷி மற்றும் ஆய்வு மாணவர்கள் சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர். அதில் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த கல்லால் ஆன கல்லறையை கண்டறிந்தனர். அது மட்டுமின்றி அதன் மேற்புறத்தில் உள்ள கல்லில் வட்ட வடிவில் அல்லது பூஜ்ய வடிவில் எழுதப்பட்டிருந்ததை கண்டு ஆச்சரியம் அடைந்தனர். இது குறித்து முருகேஷி கூறுகையில், அதன் மேற்புறத்தில் காணப்படுவது வட்டமா அல்லது அப்போதே இங்கு வாழ்ந்த மக்கள் பூஜ்யத்தின் பயன்பாடுகளை அறிந்துள்ளனரா என்பது வியப்பாக உள்ளது. இது குறித்து மேலும் ஆய்வு செய்தால் பல்வேறு வரலாற்று உண்மைகள் தெரியவரும் என்றார். கற்கால தொல்லியல் எச்சத்தின் மீது எழுதப்பட்டுள்ளது பூஜ்யமா என்ற கேள்வி விஞ்ஞானிகள் மட்டுமின்றி பொது மக்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதயத்திற்கு நல்லது

முந்திரியில், மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் உள்ளதால், கெட்ட கொழுப்பைக் குறைத்து நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கச் செய்வதால் இதயத்திற்கு நல்லது. ரத்தக் குழாய்களில் கொழுப்பு படிந்து மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் இது தடுக்கிறது. இதில் மாங்கனீஸ், பொட்டாசியம், தாமிரம், இரும்பு, மக்னீசியம், துத்தநாகம் உள்ளிட்ட தாது உப்புக்கள் நிறைவாக உள்ளன.

தொடக்க கால வேக்குவம் கிளீனரை குதிரைகள் இழுத்து சென்றது தெரியுமா?

இன்றைக்கு அனைத்து வீடுகளிலும் அன்றாட வீட்டு உபயோக பொருள்களில் ஒன்றாக வேக்குவம் கிளீனரும் மாறி நீண்ட காலமாகி விட்டது. ஆனால் தொடக்க காலத்தில் அவற்றை குதிரையில் பூட்டி இழுத்து சென்றனர் என்றால் நம்ப முடிகிறதா..நம்மூர் கழிவுநீர் லாரிகளை போல மிகப் பெரிய குழாய்கள் பொருத்தப்பட்ட டேங்கரை குதிரைகள் தெருக்களில் இழுத்து செல்லும்.  அந்த குழாய்களை ஜன்னல் வழியாக வீடுகளுக்குள் கொண்டு சென்று பெட்ரோல் மூலம் இயக்கப்படும் மோட்டார்கள் மூலம்  தூசுகளும், குப்பைகளும் உறிஞ்சப்பட்டு டேங்கர்களில் சேமிக்கப்படும். அதுதான் இன்றைக்கு கையடக்க வேக்குவம் கிளீனரின் மூதாதை என்றால் ஆச்சரியம் தானே.

ஒட்டகம் தன் உடலுக்குள் நீரை சேமிப்பது உண்மையா

ஒட்டகங்களை பற்றிய கட்டுக்கதைகளில் ஒன்று, அது கிடைக்கும் போது நீரை பருகிவிட்டு, உடலின் ஒரு பகுதியில் சேமித்து வைத்துக் கொள்கிறது என்பதுதான் அது. ஆனால் அறிவியல் பூர்வமான உண்மை அதுவல்ல. அது நீண்ட காலம் நீரை குடிக்காமல் கொளுத்தும் பாலைவனத்தில் சமாளிப்பதற்கு காரணம் அதன் ரத்ததில் உள்ள ஓவல் வடிவ ரத்த அணுக்கள் தான். மேலும் இவை 240 சதவீதம் வரை விரிவடையும் தன்மை கொண்டவையும் கூட. மற்ற உயிரினங்களுக்கு 150 சதவீதம் வரை மட்டுமே விரிவடையும். மேலும் இவை உடலில் நீரிழப்பு ஏற்பட்டு ரத்தம் அடர்த்தியானாலும் அதில் நீந்தி சென்று ஆக்ஸிசனை ரத்த நாளங்களுக்கு கொண்டு செல்லும் திறன் பெற்றுள்ளன. எனவே ஒட்டகம் தனது எடையில் 40 சதவீதம் வரை நீரிழப்பை சமாளிக்கிறது. இது தான் ஒட்டகம் நீண்ட நாள்களுக்கு நீர் குடிக்காமல் சமாளிப்பதன் ரகசியம்.

முகத்தை செல்போனால் ஸ்கேன் செய்தால் கொரோனா இருப்பது தெரிந்து விடும்

உலகதத்திலேயே முதன் முறையாக செல்போனால் முகத்தை ஸ்கேன் செய்தால் கொரோனா இருப்பதை கண்டறியும் தொழில் நுட்பம் அபுதாபியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கோவிட் பெருந்தொற்று பாதிப்புகள் உள்ள கண்டறியப்படும் நிலையில் திரையரங்குகள், ஷாப்பிங் மால்கள், பேருந்து, ரயில், விமான நிலையங்கள் என மக்கள் அதிகம் நடமாடும் பொது இடங்கள் அனைத்திலும் கொரோனா சோதனை மேற்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அபுதாபியில் கொரோனா சோதனை செய்ய புதிய தொழில் நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அபுதாபியின் இடிஇ ஆராய்ச்சி நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த தொழில்நுட்பம் வாயிலாக செல்போன் கேமராவை கொண்டே முகத்தை ஸ்கேன் செய்து கொரோனா இருக்கிறதா இல்லையா என்பதை கண்டறிய முடியும். ஸ்கேன் செய்யும்போது பச்சை வண்ணம் காண்பித்தால் நெகட்டிவ் என்றும், சிவப்பு வண்ணம் காட்டினால் பாசிட்டிவ் உள்ளதாகவும் கொள்ளப்படுகிறது. அபுதாபியில் உள்ள ஷாப்பிங் மால்கள், கடைகள் மற்றும் பொது வெளிகளில் இந்த தொழில்நுட்பத்தின் மூலம் முகத்தை ஸ்கேன் செய்யும் முறை அமலுக்கு வந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்