முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கட்டுமான தொழிலுக்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர்

வெள்ளிக்கிழமை, 19 செப்டம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப். 20 – முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி கட்டுமான தொழிலுக்கு இரண்டாம் நிலை சுத்திகரிக்கப்பட்ட நீர் வழங்க நடவடிக்கைகைள சென்னைக் குடிநீர் வாரியம் எடுத்துள்ளது.

இதற்காக பெருங்குடியில் 56 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.

நாள் ஒன்றுக்கு 6 லட்சம் லிட்டர் தண்ணீர் கிடைக்கும். சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் நீர் நிரப்பும் இடத்தில் 1000 லிட்டருக்கு 20 ரூபாய் என செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் என்று சென்னைக் குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.இந்த தண்ணீர் தரமானது; கட்டுமான தொழிலுக்கு மிகவும் சிறந்தது.

இது குறித்து சென்னைக் குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:–

தமிழ்நாடு அரசு உபயோகப்படுத்தப்பட்ட நீரை மறு சுழற்சி செய்து குடிநீர் அல்லாத பிற உபயோகங்களுக்கு பயன் படுத்துவதில் முன்னுரிமை அளிக்கிறது. சென்னைக் குடிநீர் வாரியத்தால் ஏற்கனவே தொழிற்சாலைகளுக்கும், சாலையோர பூங்காக்களுக்கும், மரங்கள் வளர்ப்பதற்கும் இரண்டாம் நிலை சுத்திகரிக்கப்பட்ட நீரை வழங்கி வருகிறது. மேலும் ஒரு முயற்சியாக கட்டுமான தொழிலுக்கு தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தண்ணீர் அதிகமாக பயன்படுத்துகிற ஒரு தொழிலாக கட்டுமான தொழில் விளங்குகிறது. அதிக அளவில் நீர், கான்கிரிட் கலப்பதற்கும், சுத்தம் செய்வதற்கும் பயன்படுத்தப்படுகிறது. சென்னைக் குடிநீர் வாரியம் கட்டுமான நிறுவனங்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுபவர்கள் ஆகியோரிடம் கலந்து ஆலோசித்ததில், நாளொன்றுக்கு 20 லட்சம் லிட்டர் தண்ணீர் கட்டுமானத் தொழிலுக்கு தேவைபடுவதாக கண்டறிந்தது. இதில் 6லட்சம் லிட்டர் தண்ணீர் தகவல் தொழில் நுட்ப சாலையில் கட்டப்பட்டு வரும் கல்வி நிறுவனங்கள், தகவல் தொழில் நுட்ப பூங்காக்கள், குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்களுக்கு தேவைப்படுகின்றது. இந்நிறுவனங்கள், தண்ணீர் தேவைக்காக தொலை தூரத்திலிருந்து எடுக்கப்பட்டு வரும் தனியார் தண்ணீர் வழங்கும் நிறுவனங்களை சார்ந்தே உள்ளன. மேலும், இந்தத் தண்ணீருக்காக மிக அதிகமான தொகையை கட்டணமாக செலுத்துகின்றன. இந்த தண்ணீர் இந்திய தரக் கட்டுப்பாட்டு நிறுவனத்தால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச தரம் கூட இருப்பதில்லை.

அதிக அளவு நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு இந்நிறுவனங்களின் குடிநீர் அல்லாத நீர் தேவை மற்றும் கட்டுமான பணிக்கான நீர் தேவையும் பூர்த்தி செய்யப்படுவதால், பொது மக்களிடையே அதிருப்தி நிலவுகிறது. இதற்கான ஒரு மாற்று ஏற்பாடாக இந்திய தரக் கட்டுப்பாட்டு நிறுவனத்தால் நிர்ணயிக்கப்பட்ட தரத்துடன் கட்டுமான தொழில் மற்றும் குடிநீரல்லாத பிற உபயோகங்களுக்குப் பயன்படுத்த மாற்று நீராதாரம் காண்பது மிகவும் அவசியமாகிறது. எனவே, சென்னைக் குடிநீர் வாரியம் இரண்டாம் நிலை சுத்திகரிப்பு செய்யப்பட்ட நீரை, கட்டுமான தொழிலில் கான்கிரிட் தயாரிப்பு, கான்கிரிட் நிலைப்படுத்துதல், சுத்தப்படுத்துதல் மற்றும் இதர நிறுவனங்களில் குடிநீர் அல்லாத பயன்பாட்டிற்கான நீராகவும் பயன்படுத்த உத்தேசிக்கப்பட்டது.

முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின்படி, சென்னைக் குடிநீர் வாரியம், இரண்டாம் நிலை சுத்திகரிக்கப்பட்ட நீரை, கூடுதல் சுத்திகரிப்பு செய்து, நாளொன்றுக்கு 6 லட்சம் லிட்டர் சிறந்த தரம் வாய்ந்த தண்ணீராக மாற்றும் சுத்திகரிப்பு நிலையத்தை நிறுவி வருகின்றது. சென்னைக் குடிநீர் வாரியம், கட்டுமான நிறுவனங்கள், கட்டுமான தொழில் முதலீட்டாளர்களை கலந்தாலோசித்ததில், சுத்திகரிக்கப்பட்ட தண்ணீருக்கு அதிக வரவேற்புள்ளது. மேலும், சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை பெற ஆவலாக உள்ளனர்.

தற்போது, பெருங்குடி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் இரண்டாம் நிலை சுத்திகரிக்கப்பட்ட நீராதராரம் உள்ளது. சென்னை மாநகராட்சி, தமிழ்நாடு சாலை மேம்பாட்டுக் கழகம் ஆகியவற்றிற்கு தேவையான இரண்டாம் நிலை சுத்திகரிக்கப்பட்ட நீரை வழங்கி வருகிறது. இரண்டாம் நிலை சுத்திகரிக்கப்பட்ட நீர் இந்திய தரக் கட்டுப்பாட்டு நிறுவன எண். 456ன்படி கட்டுமான தொழிலுக்கு ஏற்றதாக இருப்பினும், மனிதர்களால் கையாளப்படப் போவதால் கூடுதல் சுத்திகரிப்பு செய்து வழங்க உத்தேசித்துள்ளது.

பெருங்குடியில் நிறுவப்படவுள்ள கூடுதல் சுத்திகரிப்பு நிலையம், ஒரு மணி நேரத்திற்கு 50 கன மீட்டர் என்ற அளவில் இரண்டாம் நிலை சுத்திகரிக்கப்பட்ட நீரை பெற்று கட்டுமான தொழில் உபயோகத்திற்கு நாளொன்றுக்கு 6 லட்சம் லிட்டர் சுத்திகரிப்பு செய்யும் திறன் கொண்டது. இரண்டாம் நிலை சுத்திகரிக்கப்பட்ட நீரை கட்டுமான தொழில்களுக்காக மறுசுழற்சி செய்வதற்கு முன்பாக கீழ்கண்ட முறையிலான மேம்படுத்தப்பட்ட செயல்முறை அமைப்புகள் நிறுவப்பட உள்ளது.

பெருங்குடி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில், இரண்டாம் நிலை சுத்திகரிக்கப்பட்ட நீர், சேமிப்பு தொட்டியில் இருந்து நீர் அழுத்த மணல் வடிகட்டிக்கு இரண்டு உந்து யந்திரம் மூலம் செலுத்தப்படுகிறது.இரண்டாம் நிலை சுத்திகரிக்கப்பட்ட நீரில் மீதமுள்ள கரையும் நிலையில் உள்ள மற்றும் கரையாத நிலையில் மிதக்கும் நிலையில் உள்ள நுண்துகள்கள் மற்றும் கன உலோக கழிவுகள் நீர் துரித மணல் வடிகட்டியில் நீக்கப்படுகிறது.நிலை நிறுத்தப்பட்ட கரித்தூள் வடிகட்டி ஒன்று நிறுவப்பட்டு நீரில் உள்ள வண்ணம் மற்றும் துர்நாற்றம் நீக்கப்படுகிறது. கரித்தூள் அளவு 1.30 மீட்டர் உயரம் ஆகும்.சுத்திகரிக்கப்பட்ட நீரில் உள்ள நுண்ணுயிர் கிருமிகளை அகற்ற தேவையான திரவ நிலை குளோரின் கலவையை செலுத்தி மேலும் சுத்திகரிக்கப்படுகிறது.

1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட சுத்திகரிக்கப்பட்ட நீர் சேமிப்பு தொட்டி அமைக்கப்பட்டு, கட்டுமான தொழிலுக்கு தண்ணீர் லாரிகளில் வழங்கப்படும். தண்ணீர் தேவைப்படுபவர்கள் சென்னைக் குடிநீர் வாரிய பெருங்குடி கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் உரிய கட்டணத்தை செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.…

ரூ.56.6 லட்சம் மதிப்பீட்டில் நாளொன்றுக்கு 6 லட்சம் லிட்டர் திறன் கொண்ட மேம்படுத்தப்பட்ட சுத்திகரிப்பு நிலையம் பெருங்குடியில் அமைக்கப்பட்டு வருகின்றது. இத்திட்டப்பணி வரும் நவம்பர் மாதத்தில் முடிவுறும் என்று எதிர்பார்க்ப்படுகிறது. சாதாரண ஆழ்துளை கிணற்று நீரை பயன்படுத்தி உருவாகும் கான்கிரிட் உறுதியை விட கூடுதல் சுத்திகரிக்கப்பட்ட நீரினால் உருவாகும் கான்கிரிட்டின் உறுதி அதிகளவாகும். கட்டுமான பணிக்காக தங்கு தடையின்றி கூடுதல் சுத்திகரிக்கப்பட்ட நீர் கிடைப்பது உறுதி செய்யப்படும். தற்சமயம் கட்டுமான தொழிலகங்கள் மழைநீர் சேகரிக்கும் நீர் நிலைகள் மற்றும், ஆழ்துளை கிணறுகளில் இருந்து பெற்று உபயோகிக்கும் நீர் சேமிக்கப்பட்டு அதே அளவு நீரினை நீராதாரமாக பெற இயலும்.

சுத்திகரிக்கப்பட்ட நீரின் மூலம் வருவாய் ஈட்டப்பட்டு இந்த வருவாய் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய பராமரிப்பு செலவினை ஈடுகட்ட பயன்படுத்தப்படும். குடியிருப்புகளுக்கான குடிநீர் ஆதாரம் பெருகும்.

சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர், நீர் நிரப்பும் இடத்தில் ஒவ்வொரு 1000 லிட்டருக்கு ரூ.20 என வழங்க சென்னைக் குடிநீர் வாரியம் உத்தேசித்துள்ளது. நீர் கொண்டு செல்லும் தண்ணீர் லாரி, மற்றும் அதற்கான போக்குவரத்து செலவு பயனாளிகளின் பொறுப்பாகும். இந்த தண்ணீரைப் பெறுவதற்கு கட்டுமான நிறுவனங்களின் ஒப்பந்ததாரர்கள் தங்களது முன்னுரிமையை தற்போது சென்னைக் குடிநீர் வாரியத்தில் பதிவு செய்துக் கொள்ளலாம்.

இவ்வாறு சென்னைக் குடிநீர் வாரிய செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்