முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் தொழில் தொடங்க ஜனாதிபதி அழைப்பு

புதன்கிழமை, 15 அக்டோபர் 2014      இந்தியா
Image Unavailable

 

ஆஸ்லோ, அக்.16 - இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தில் இந்தியாவில் தொழில் தொடங்க முன்வருமாறு நார்வே நிறுவனங்களுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அழைப்பு விடுத்துள்ளார்.

நார்வே, பின்லாந்து நாடுகளில் பிரணாப் ஐந்து நாள்கள் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். முதல் கட்டமாக நார்வேக்கு சென்றுள்ள அவர் அங்கு அந்த நாட்டு தலைவர்களைச் சந்தித்துப் பேசினார். நேற்றுமுன்தினம் இரவு அவர் நார்வே மன்னர் ஐந்தாம் ஹெரால்ட், ராணி சோன்ஜா அளித்த விருந்தில் பங்கேற்றார். இதில் நார்வே தொழிலதிபர்களும் கலந்து கொண்டனர். இந்த விருந்து நிகழ்ச்சியில் ஜனாதிபதி பிரணாப் பேசியதாவது:

இந்தியாவும் நார்வேயும் பூகோளரீதியாக வெகுதொலைவில் உள்ளன. ஆனால் இரு நாடுகளின் கொள்கை, கோட்பாடுகள் ஒன்றுபோல் உள்ளன. உலகில் அமைதியை ஏற்படுத்த இருநாடுகளும் உறுதிபூண்டு செயல்படுகின்றன. அந்த வகையில் இந்தியாவும் நார்வேயும் மிகவும் நெருங்கி வந்துள்ளன. இந்தியாவில் பதவியேற்றுள்ள புதிய அரசு வெளிநாட்டு முதலீடுகளை அதிக அளவில் ஈர்த்து வருகிறது.

குறிப்பாக வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தங்கள் உற்பத்தியைத் தொடங்கும் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இத்திட்டத்தில் இந்தியாவில் தொழில் தொடங்க நார்வே நிறுவனங்கள் முன்வர வேண்டும்.

எண்ணெய் துரப்பண பணிகள், ஆராய்ச்சி, சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத எரிசக்தி, மீன்வளம், புவியியல் ஆய்வு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியாவும் நார்வேயும் இணைந்து பணியாற்ற முடியும். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் அளிக்க நார்வே ஆதரவு அளித்திருப்பதை வரவேற்கிறோம் என்று அவர் தெரிவித்தார்.

நார்வே மன்னர் ஐந்தாம் ஹெரால்ட் 30 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா வந்துள்ளார். அவர் மீண்டும் டெல்லிக்கு வருகை தர வேண்டும் என்று பிரணாப் முகர்ஜி அழைப்பு விடுத்தார். இதை நார்வே மன்னர் ஏற்றுக் கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்