முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2வது அரையிறுதி: இந்தியா - ஆஸ்திரேலியா இன்று பலப்பரிட்சை

புதன்கிழமை, 25 மார்ச் 2015      விளையாட்டு
Image Unavailable

சிட்னி - உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 2வது அரை இறுதி ஆட்டம் சிட்னியில் இன்று நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியனான இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
 
தோனி தலைமையிலான இந்திய அணி இந்த உலகக் கோப்பை போட்டி தொடரில் மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறது. தொடர்ந்து 7 வெற்றியை பெற்று அரை இறுதிக்கு 6வது முறையாக முன்னேறி இருந்தது. அபாரமாக ஆடி வரும் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 4வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுமா? என்று கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். ஆனால் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது என்பது சவாலானது.

உலகக் கோப்பைக்கு முன்பு  இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும், 3 நாடுகள் போட்டியிலும் மோசமாக தோல்வியை தழுவியது. அதில் இருந்து மீண்டுதான் உலகக் கோப்பையில் லீக் ஆட்டங்களில் பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து, ஜிம்பாப்வே அணிகளையும், கால் இறுதியில் வங்காளதேசத்தையும் வீழ்த்தியது.

இந்திய அணியின் பேட்டிங் வரிசை சிறப்பாக உள்ளது. முதல் 6 வரிசையில் உள்ளவர்கள் நல்ல நிலையில் உள்ளனர். தவான் 2 ச தத்துடன் 367 ரன்களும், விராட் கோலி ஒரு செஞ்சுரியுடன் 304 ரன்களும், ரோகித்சர்மா ஒரு சதத்துடன் 296 ரன்களும், ரெய்னா ஒரு செஞ்சுரியுடன் 277  ர ன்களும், தோனி 172 ரன்களும், ரகானே 164 ரன்களும் எடுத்துள்ளனர்.

அதே நேரத்தில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சை சமாளிப்பது இந்திய பேட்ஸ்மேன்களும் சவாலாக இருக்கும். பேட்டிங்கை போலவே பந்துவீச்சும் நல்ல நிலையில் காணப்படுகிறது. 7 ஆட்டத்திலும் இந்திய பவுலர்கள் எதிர் அணிகளை ஆல்அவுட் செய்து சாதனை படைத்துள்ளனர். வேகப்பந்தில் முகமதுஷமி முன்னிலையில் உள்ளார். அவர் 17 விக்கெட்டை கைப்பற்றி இருக்கிறார். உமேஷ் யாதவ்(14 விக்கெட்), மொகித்சர்மா(11 விக்கெட்) ஆகியோரும் சிறப்பான நிலையில் உள்ளனர். சுழற்பந்தில் அஸ்வின் முதுகெலும்பாக உள்ளார்.

அவர் 12 விக்கெட் வீழ்த்தி இருக்கிறார். சிட்னி ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு ஏற்ற வகையில் இருக்கலாம். எனவே அதை அவர் சரியாக பயன்படுத்தி கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல் ஜடேஜாவும் அவருக்கு உறுதுணையாக இருப்பார். பேட்டிங், பவுலிங், பீல்டிங் ஆகியவற்றில் ஒருங்கிணைந்து இந்திய வீரர்கள் செயல்பட்டால் தான் ஆஸ்திரேலியாவை வீழ்த்த இயலும்.

உலகக் கோப்பையில் 7 முறை ஆஸ்திரேலியாவிடம் தோற்றுள்ளது. 3 முறை மட்டுமே வெற்றி பெற்று இருந்தது. கடைசியாக கடந்த உலகக் கோப்பையில் இந்திய அணி கால் இறுதியில் வீழ்த்தி இருந்தது. ரசிகர்களின் ஏகோதிப்பித்த ஆதரவால் இந்த முறையும் வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கையில் இந்திய வீரர்கள் உள்ளனர். உலகக் கோப்பையை கைப்பற்ற வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக கருதப்படும் ஆஸ்திரேலியா வலுவான நிலையில் உள்ளது. பேட்டிங், பவுலிங், பீல்டிங்கில் சமபலத்துடன் உள்ளது.

அந்த அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் மேக்ஸ்வெல் அபாயகரமானவர். ஒரு சதம், 2 அரை சதத்துடன் அவர் 301 ரன்கள் எடுத்துள்ளார். மேலும் வார்னர்(288 ரன்), ஸ்டீவன் சுமித்(241 ரன்), ஆரோன் பிஞ்ச்(199 ர ன்), வாட்சன்(178 ரன்) கேப்டன் கிளார்க் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும் உள்ளனர். பந்துவீச்சில் ஸ்டார்க் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு மிக பெரிய அச்சுறுத்தலாக இருப்பார். அவர் 18 விக்கெட் கைப்பற்றி உள்ளார். ஜான்சன்(10 விக்கெட்), ஹாசல்வுட், கும்மின்ஸ், பல்க்னெர் போன்ற சிறந்த பவுலர்களும் அந்த அணியில் உள்ளனர்.

இரு அணிகளும் கடைசியாக சி்ட்னி மைதானத்தில் ஜனவரி 26ம் தேதி மோதவிருந்த ஆட்டம் மழையால் ரத்து ஆனது. இந்த மைதானத்தில் இந்திய அணி 4 ஆட்டத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 12 போட்டியில் தோற்றுள்ளது. இறுதிப்போட்டியில் நுழைய இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் கடுமையாக போராடும் என்பதால் இந்த ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக  இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டியில் நியுசிலாந்தை வருகிற 29ம் தேதி சந்திக்கிறது. இன்றைய ஆட்டம் இந்திய நேரப்படி காலை  9 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ், தூர்தர்சனில் இந்த போட்டி நேரடியாக  ஒளிபரப்பு செய்யப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து