முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2வது டெஸ்ட்: இலங்கையை 278 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றி

திங்கட்கிழமை, 24 ஆகஸ்ட் 2015      விளையாட்டு
Image Unavailable

கொழும்பு - இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியை 278 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது. இலங்கையில் சுற்றுப் பயணம் செய்துள்ள இந்திய அணி, காலேயில் நடந்த, முதல் டெஸ்டை 63 ரன்கள் வித்தியாசத்தில் இழந்தது. இரண்டாவது டெஸ்ட், கொழும்பு சரவண முத்து மைதானத்தில் கடந்த வியாழக்கிழமை தொடங்கியது. இந்தியா முதல் இன்னிங்சில் 393 ரன்களும், இலங்கை முதல் இன்னிங்சில் 306 ரன்களும் எடுத்தன.  இந்தியா தனது இரண்டாவது இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 325 ரன்கள் எடுத்து, 413 ரன்கள் முன்னிலை பெற்றபோது கேப்டன கோஹ்லி டிக்ளேர் செய்வதாக அறிவித்தார்.

ஞாயிற்றுகிழமை மாலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 72 ரன்கள் எடுத்திருந்தது. 8 விக்கெட்டுகளை கைவசம் வைத்து 341 ரன்களை கடைசி நாளில் எடுத்து வெற்றி பெறுவது கஷ்டம் என்பதால், இலங்கை காலை முதல் தடுப்பு ஆட்டத்தை மேற்கொண்டது. டிரா செய்யலாம் என்பது இலங்கையின் எண்ணமாக இருந்தது. ஆயினும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்து கொண்டிருந்தன. 30வது ஓவரின்போதே இலங்கை அணி 100 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது. குஷால் சில்வா, சங்ககாரா, மேத்யூஸ், தினேஷ் சண்டிமால் ஆகிய முக்கிய விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டதால், வெற்றியை நோக்கி இந்திய அணி முன்னேறியது. இலங்கை 9 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில் திடீரென மழை பலமாக பெய்ய தொடங்கியது.

மழை நாள் முழுவதும் நீடித்தால், ஆட்டம் டிரா ஆகிவிடும் என்று இந்திய ரசிகர்கள் கவலையடைந்த நிலையில், அரை மணி நேரத்தில் மழை ஓய்ந்தது. இந்த இடைவேளையில் மதிய உணவை முடித்து திரும்பினர் வீரர்கள். ஆனால், அடுத்த சில நிமிடங்களிலேயே இலங்கை கடைசி விக்கெட்டாக சமீராவை இழந்தது. 4 ஓவர்களிலேயே இலங்கை அணி, 134 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால், இந்தியா 278 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இந்திய அணியின் கே.எல்.ராகுல் மேன் ஆப் தி மேட்ச் பட்டம் வென்றார். முதல் டெஸ்ட் போட்டியில் பெரும்பாலான செஷன்களில் ஆதிக்கம் செலுத்திய இந்தியா, கடைசி நேரத்தில் கோட்டை விட்டு தோற்றது. அந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டுவந்து, இந்தியா வெற்றிக் கனியை தட்டிப்பறித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இலங்கை வீரர் சங்ககாரா ஓய்வு பெற்றார். அவரை இலங்கை வீரர்கள் மட்டுமின்றி, இந்திய அணி வீரர்களும் கட்டிப்பிடித்து வாழ்த்தினர்.

சங்ககாரா இந்த டெஸ்டின் முதல் இன்னிங்சில் 32 ரன்களும், 2வது இன்னிங்சில் 18 ரன்களுமாக, இரு இன்னிங்சுகளிலும் சேர்த்து 50 ரன்கள் சேர்த்தார். 2 இன்னிங்சுகளிலும், அஸ்வின் பந்தில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இறுதி டெஸ்ட்இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு நடுவேயான 3வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி கொழும்பு சிங்களீஸ் மைதானத்தில் வரும் 28ம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. இதில் வெற்றி பெறும் அணி கோப்பையை வெல்லும். இந்திய டெஸ்ட் அணி கேப்டனாக கோஹ்லி பணியேற்ற பிறகு அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும். வங்கதேசத்துடனான டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இலங்கை முதல் டெஸ்டை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்