முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தகுதி-நுழைவுத்தேர்வை அறிமுகப்படுத்த கூடாது: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

வியாழக்கிழமை, 8 அக்டோபர் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை: பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவ பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்புகளுக்கு தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை அறிமுகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். இது மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான மாநில அரசின் உரிமைகளை பாதிக்கும் எனவும் அந்த கடிதத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமர்.நரேந்திரமோடிக்கு நேற்று கடிதமொன்றை அனுப்பியுள்ளார் அதில் அவர் கூறி்யிருப்பதாவது: , பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்புகளுக்கு தேசிய அளவில் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு அறிமுகப்படுத்துவதை தமிழக அரசு தொடர்ந்து எதிர்த்து வருவதை பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்,. பிரதமருக்கு அது தொடர்பாக கடந்த 2011-ம் ஆண்டு ஜூலை 30-ம் தேதி மற்றும் 2012-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7-ம் தேதி தாம் எழுதியுள்ள கடிதங்களில், தமிழக அரசின் எதிர்ப்பினை தெரிவித்துள்ளதோடு, அதனை உச்சநீதிமன்றத்தின் பார்வைக்கு எடுத்துச் சென்றிருக்கிறேன், .

கடந்த 2013-ம் ஆண்டு ஜூலை 18-ம் தேதி உச்சநீதிமன்றம் அளித்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பில், பொதுமருத்துவம் மற்றும் பல் மருத்துவப் பட்டப் படிப்பு, பட்டமேற்படிப்புகளுக்கு தேசிய அளவிலான தகுதி மற்றும் நுழைவுத்தேர்வை அறிமுகப்படுத்துவது குறித்து இந்திய பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவ அமைப்புகள் வெளியிட்ட அறிவிக்கையை ரத்து செய்து உத்தரவிட்டது - இந்தத் தீர்ப்பு, பொதுமருத்துவம் மற்றும் பல் மருத்துவ பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்புகளில் உரிய இடங்களைப் பெறும் ஆர்வம் கொண்டிருந்த மாணவர்களுக்கு வேதனை அளித்து வந்த உத்தரவாதமற்ற தேர்ச்சி முறை தொடர்பான நீண்டகாலப் பிரச்னைக்கும், தமிழக அரசின் நலனுக்கும் பாதகமாக விளங்கிய அம்சங்களை முடிவுக்குக் கொண்டு வந்தது.

உச்சநீதிமன்றம் வழங்கிய அந்த பெரும்பான்மைத் தீர்ப்பு, அதுவரை தமிழ்நாடு எழுப்பி வந்த எதிர்ப்பின் நியாயத்தை வெளிப்படுத்தியது - உச்சநீதிமன்றத்தின் அந்தத் தீர்ப்பு பரவலான வரவேற்பையும் பெற்றது, உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை, மத்திய அரசு ஏற்றுக்கொள்ளாததோடு, சீராய்வு மனு செய்தது குறித்து கடந்த 2013-ம் ஆண்டு ஜூலை மாதம் 28-ம் தேதி பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் அதனை திரும்பப் பெறுமாறு தாம் வலியுறுத்தியதை முதல்வர் ஜெயலலிதா நினைவுபடுத்தியுள்ளார்.

மேலும், கடந்த ஜூன் மாதம் 3-ம் தேதி மத்திய அரசிடம், தான் அளித்த நினைவூட்டு மடலில், இது குறித்து கடந்த ஐக்கிய முற்போக்குக்கூட்டணி அரசு எடுத்த நிலையை மறுபரிசீலனை செய்து, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள சீராய்வு மனுவை வாபஸ் பெறவேண்டும் என்று தாம் வலியுறுத்தியதை முதலமைச்சர் ஜெயலலிதா சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், தமக்கு ஆச்சரியம் ஊட்டும் வகையில், மத்திய மருத்துவக் குழு, மத்திய அரசிடம், தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை அமல்படுத்துவது குறித்து பரிசீலிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வருவதை முதலமைச்சர் ஜெயலலிதா சுட்டிக்காட்டியுள்ளார். இந்தப் போக்கு, தமிழக அரசு கடைப்பிடித்து வரும் நியாயமான, வெளிப்படையான, நன்றாகச் செயல்பட்டு வருகிற தமிழக அரசின் பயனை அனுபவித்து வரும் ஆயிரக்கணக்கான தமிழக மாணவர்களிடையே பெரும் குழப்பத்தையும், விரக்தியையும் ஏற்படுத்தியுள்ளதாக முதலமைச்சர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

2005-ம் ஆண்டில் இருந்து பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்துள்ளதாகவும், தீவிர பரிசீலனைக்குப் பின்னரே தொழிற்கல்வி பட்டப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், தமது முந்தைய கடிதங்களில் ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளதை முதலமைச்சர் ஜெயலலிதா சுட்டிக்காட்டியுள்ளார்.  நகர்ப்புற மாணவர்களுக்காகவே வடிவமைக்கப்பட்டுள்ள பொதுநுழைவுத் தேர்வில் நகர்ப்புற மாணவர்களின் போட்டியை சமாளிக்க இயலாத கிராமப்புற மாணவர்கள் மற்றும் சமூக பொருளாதார ரீதியில் பின்தங்கிய ஏழை மாணவர்களுக்கு ஆதரவாக உறுதியான நிலைப்பாட்டை தமது அரசு மேற்கொண்டுள்ளது - பயிற்சி நிலையங்களில் சேர்ந்து பயில்வதற்கு ஏற்ற வசதியும், நகர்ப்புற மாணவர்களுக்கு கிடைக்கும் கல்வி சாதன வசதியும், கிராமப்புற மாணவர்களுக்கு கிடைப்பதில்லை - இந்நிலையில், பொது நுழைவுத் தேர்வினை ரத்து செய்யும் முடிவால், தகுதி வாய்ந்த கிராமப்புறங்களை சேர்ந்த சமூகம் மற்றும் பொருளாதார ரீதியில் பின்தங்கிய எண்ணற்ற மாணவர்கள் பயனடைவார்கள் என முதலமைச்சர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

பட்ட மேற்படிப்புகளில் சேர, கிராமப் பகுதிகளில் - குறிப்பாக, பழங்குடியின மக்கள் வசிக்கும் மலைப்பகுதிகளில் பணிபுரிந்தவர்களுக்கு தமிழக அரசு முன்னுரிமை வழங்குகிறது - மேலும், அரசு மருத்துவ கல்லூரிகளில் பட்ட மேற்படிப்பை முடித்தவர்கள், மாநில அரசில் குறிப்பிட்ட காலம் பணியாற்ற வேண்டும் என உறுதிமொழி பத்திரங்களை பெறுவதன் மூலம் அரசு மருத்துவமனைகளில் தேவைப்படும் மருத்துவ நிபுணர்களின் தேவையை சமாளிக்க உதவிகரமாக உள்ளது - தமிழகத்தில் இந்த கொள்கை முன்முயற்சிகளையும், சமூக-பொருளாதார குறிக்கோள்களையும், தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு அறிமுகம் பயனற்றதாக்குகிறது - தேசிய தேர்வு ஒழுங்குமுறைக்கு ஏற்ப செயல்பட வேண்டுமானால், இத்தகைய ஷரத்துகள் அதில் இடம்பெறவில்லை- தமிழ்நாட்டில் சமூக-பொருளாதார வாழ்க்கை நெறி மற்றும் தமிழகத்தின் நிர்வாக தேவைகளுக்கு அப்பாற்பட்டதாக தேசிய தேர்வு இருக்கும் என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா சுட்டிக்காட்டியுள்ளார்.

பலத்த இடைவிடாத எதிர்ப்புகளையும் மீறி, தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு முறையை அறிமுகம் செய்ய முயன்றபோது, மாநில அரசு அனைத்துவித சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டது - தமிழக அரசின் கோரிக்கையை பரிசீலித்த உச்சநீதிமன்றம், மாநில அரசின் உரிமைகளுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது - இதனை எதிர்த்து இந்திய அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவை எதிர்த்து, தமிழக அரசும் மனு தாக்கல் செய்தது - உச்சநீதிமன்றத்தின் முடிவுக்கு முற்றிலுமாக இந்திய அரசு கட்டுப்பட்டு நடப்பதோடு, சீராய்வு மனுவை திரும்பப் பெற வேண்டும் என மாநில அரசு வலியுறுத்தி வருகிறது - தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு முறையை மீண்டும் அறிமுகம் செய்ய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய இந்திய அரசு புதிய முயற்சிகள் மேற்கொண்டாலோ அல்லது இந்த தேர்வு முறையை வேறு பெயரில் அல்லது முறையில் அறிமுகம் செய்ய முயன்றாலோ அது மாநிலத்தின் உரிமைகளையும், தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை கொள்கைகளையும் மீறும் செயலாகும் என்பதால், அதனை தமிழக அரசு கடுமையாக எதிர்ப்பதாகவும் முதலமைச்சர் ஜெயலலிதா தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்