முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆன்டிகுவா முதல் டெஸ்ட்: மே.இ.தீவுகள் அணி பாலோ ஆன் - இந்திய அணி வெற்றி உறுதி

ஞாயிற்றுக்கிழமை, 24 ஜூலை 2016      விளையாட்டு
Image Unavailable

ஆன்டிகுவா : ஆன்டிகுவா முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய வீரர்கள் முகமது சமி, உமேஷ் யாதவ் சிறப்பான பந்து வீச்சில் மே.இ.தீவுகள் அணி பாலோ ஆன் ஆனது.

இந்தியா – மே.இ.தீவுகள் கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஆன்டிகுவாவில் நடந்து வருகிறது. முதலில் பேட் செய்த இந்திய அணி 161.5 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 566 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய மே.இ.தீவுகள் அணியில் கிரேக் பிராத்வெய்ட் மட்டும் நின்று விளையாடினார். அவரை தொடர்ந்து களமிறங்கிய வீரர்களை முகமது சமி விரைவாக வெளியேற்றினார். முகமது சமியுடன், உமேஷ் யாதவும் வேகத்தை காட்டினார், இதனால் மே.இ.தீவுகள் அணி நிலை திண்டாட்டமாகிவிட்டது. இருவர் வேகத்தில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களை மைதானத்தை விட்டு தொடர்ச்சியாக வெளியேறினர்.

இதனால் விக்கெட்டுக்கள் விழுந்த வண்ணம் இருந்தது. 67-வது ஓவரில் மே.இ.தீவுகள் அணி 7 விக்கெட்களை இழந்து 144 ரன்களை எடுத்திருந்தது. 67-3 வது ஓவரில் அதுவரையில் அணிக்கு நின்று விளையாடி ரன்சேர்த்த கிரேக் பிராத்வெய்ட்டை உமேஷ் யாதவ் வெளியேற்றினார். நீண்ட நேரம் தாக்கு பிடித்து விளையாடிய பிராத்வைட் 74 ரன்கள் எடுத்திருந்த போது உமேஷ் யாதவிடம் வீழ்ந்தார்.  அவருக்கு உறுதுணையாக விளையாடிய டவுரிச் மட்டும் 57  ரன்களுடன் கடைசியில் ஆட்டம் இழக்காமல் களத்தில் நின்றார்.

இறுதியில் மே.இ.தீவுகள் அணி 243 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து பாலோ ஆன் ஆனது. முகமது சமி, உமேஷ் யாதவ் தலா 4 விக்கெட்டுக்களை சாய்த்தனர். மிஸ்ரா 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

மே.இ.தீவுகள் அணி விக்கெட் விபரம்:- 1-30 (சந்திரிகா, 14.2 ஓவர்), 2-68 (பிஷூ, 32.1 ஓவர்), 3-90 (பிராவோ, 42.3 ஓவர்), 4-92 (சாமுவேல்ஸ், 48.2 ஓவர்), 5-92 (பிளாக்வுட், 48.6 ஓவர்), 6-139 (ரோஸ்டன் சேஸ், 65.4 ஓவர்), 7-144 (கே.சி பிராத்வெய்ட், 67.3 ஓவர்), 8-213 (ஹோல்டர், 85.2 ஓவர்), 9-213 (சி.ஆர். பிராத்வெய்ட், 85.3 ஓவர்), 10-243 (கேப்ரியல், 90.2 ஓவர்)

இதனை தொடர்ந்து மீண்டும் பேட்டிங் செய்யும்படி இந்திய அணி மே.இ.தீவுகள் அணியை கேட்டுக் கொண்டது. 323 ரன்கள் பின் தங்கிய நிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை மே.இ.தீவுகள் அணி தொடங்கியது. 3-ம் நாள் ஆட்ட முடிவில் அந்த அணி 13 ஓவர்களில் 21 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்திருந்தது. முதல் இன்னிங்சில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிராத்வைட் 2 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். சந்திரிகா(9), டேரன் பிராவோ(10) ரன்களில் களத்தில் இருந்தனர்.

மே.இ.தீவுகள் அணி இன்னும் 302 ரன்கள் இந்தியாவை விட பின் தங்கியுள்ளது. இன்னும் இரண்டு நாட்கள் உள்ளது என்பதால், இந்திய அணி வெற்றி பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்