முக்கிய செய்திகள்

உலகில் 6 குழந்தைகளில் 5 பேருக்கு சரியான ஊட்டச்சத்து கிடைப்பதில்லை !

செவ்வாய்க்கிழமை, 1 நவம்பர் 2016      வாழ்வியல் பூமி
baby food(N)

உலகில் 2 வயதுக்கு உட்பட்ட 6 குழந்தைகளில் 5 பேருக்கு சரியான ஊட்டச்சத்து கிடைப்பதில்லை’’ என்று ஐ.நா.வின் குழந்தைகள் நிதியம் (யுனிசெப்) தெரிவித்துள்ளது. குழந்தை பிறந்தவுடன், முதல் 2 ஆண்டுகளுக்கு அதன் உடல் வளர்ச்சி மற்றும் மூளை வளர்ச்சிக்கு ஊட்டச்சத்து மிகவும் முக்கியம். ஆனால், உலகளவில் சராசரியாக 6 குழந்தைகளில் 5 பேருக்கு போதிய ஊட்டச்சத்து கிடைப்பதில்லை. கடந்த 10 ஆண்டுகளாக குழந்தைகளுக்கு சரியான ஊட்டச்சத்து கிடைக்கவில்லை. இதனால் உலகளவில் 156 மில்லியன் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எல்லா நாடுகளிலும் பணக்கார குழந்தைகளோ அல்லது ஏழை குழந்தைகளோ யாராக இருந்தாலும் குழந்தை பிறந்த பிறகு தாய்ப்பால் வழங்குவது சிறந்த தொடக்கமாக அமைகிறது. ஆனால், குழந்தைகள் சிலரே தாய்ப்பாலால் பலனடைகின்றனர். எனவே குழந்தை பிறந்த 2 ஆண்டுகளுக்கு தாய்ப்பால் வழங்க வேண்டும். வாழ்நாளில் சிசு மற்றும் குழந்தை பருவத்தில்தான் அதிக ஊட்டச்சத்து தேவைப்படுகிறது. ஆனால், உடல்வளர்ச்சி மற்றும் மூளை வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்து கோடிக்கணக்கான குழந்தைகளுக்கு கிடைப்பதில்லை. இதனால் உடல் மற்றும் மூளை வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. மனவளர்ச்சியும் பாதிக்கிறது என்று யுனிசெப்பின் மூத்த ஊட்டச்சத்து ஆலோசகர் பிரான்ஸ் பெகின் கூறியுள்ளார்.

குழந்தை பிறந்த 6 மாதங்களுக்குப் பிறகுதான் தாய்ப்பாலுடன் திட உணவும் வழங்க வேண்டும். ஆனால், பெரும்பாலான நாடுகளில் 6 மாதங்களுக்கு முன்பாகவோ அல்லது பல மாதங்கள் கழிந்த பிறகோ குழந்தைகளுக்கு திட உணவு வழங்குகின்றனர். இதனால் குழந்தைகளின் உடல் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. அதிக நாட்கள் தாய்ப்பால் அருந்தும் குழந்தைகள் புத்திசாலிகளாக உள்ளனர். அத்துடன் தாய்ப்பால் அருந்தும் குழந்தைகள் பிற்காலத்தில் உடல் பருமன் மற்றும் ஆபத்தான நோய்களால் பாதிக்கப்படுவது மிகவும் குறைவாக உள்ளது. அதேபோல் தாய்ப்பால் வழங்கும் தாய்மார்களுக்கு பிற்காலத்தில் மார்பகப் புற்றுவோய், கருப்பையில் புற்றுநோய் போன்ற பிரச்சினைகள் குறைவாக உள்ளது என்று யுனிசெப் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: