புதிய ரூ50, 20 நோட்டுகள் விரைவில் வெளியிடப்படும்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 4 டிசம்பர் 2016      வர்த்தகம்
Reserve-Bank 2016 12 04

மும்பை, புதிய ரூ50, 20 நோட்டுகள் விரைவில் வெளியிடப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதே நேரத்தில் பழைய ரூ50, 20 நோட்டுகளும் புழக்கத்தில் இருக்கும் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

மக்கள் தவிப்பு :

கடந்த மாதம் நவம்பர் 8-ந் தேதி புழக்கத்தில் இருந்த  ரூ500, 1,000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது.  பிரதமர் மோடி இதனை அறிவித்து  மக்களுக்கு அதிர்ச்சி  வைத்தியம்  கொடுத்தார் . இதையடுத்து பொதுமக்கள் தங்களிடம் இருந்த பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில்  மாற்றினார்கள் .மேலும் தங்கள் பணத்தை வங்கிகளில் டெபாசிட் செய்தனர். பிரதமர் மோடி அறிவித்து கிட்டதட்ட ஒரு மாதம் ஆகியும் நிலைமை சீரடையவில்லை . மக்கள் இப்போதும் வங்கிகளுக்கு படையெடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.  பல ஏ.டி.எம். கள் இன்னும் மூடியே கிடக்கின்றன.. ஆரம்பத்தில் மக்களுக்கு  ரூ 2000 நோட்டுகள் மட்டுமே வழங்கப்பட்டன. அவற்றை மாற்ற முடியாமல்  மக்கள் தவித்து வந்தனர். இந்த நிலையில் இப்போது தான்  புதிய ரூ.500 நோட்டு வரத்தொடங்கியுள்ளது. இதனால் மக்கள் ஓரளவு நிம்மதி அடைந்துள்ளனர்.  இருப்பினும் வங்கிகளில் கூட்டம் குறைந்தபாடில்லை .


2 பேர் பரிதாபச் சாவு :

இந்நிலையில் தஞ்சாவூர் , திருவாரூர் ஆகிய இடங்களில்  வங்கிகள் முன்பு  பணம் எடுக்க காத்திருந்த  2 பேர் பரிதாபமாக  உயிரிழந்ததாக  தகவல்கள் தெரிவிக்கின்றன. மேற்கு வங்கத்தில் அரசு ஊழியர் ஒருவர் பலியாகிவிட்டார். ஏற்கனவே இது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்தது நினைவிருக்கலாம். ஏழை மக்களை பிரதமர் மோடி பாடாய் படுத்துகிறார் என்று மம்தா பானர்ஜி உட்பட பல தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர் . ஐனாதிபதியிடமும் புகார்  அளித்துள்ளனர். மேலும் நாடாளுமன்றம் முன்பு 200 எம்.பி.க்கள் தர்ணா போராட்டமும் நடத்தினார்கள். பிரதமர் மோடி 90  சதவீத மக்களை ஏழைகளாக்கி விட்டார் என்று மாயாவதியும் குற்றம் சாட்டியுள்ளார். இந்த நிலையில்  ரூ.50 ,ரூ,100 நோட்டுகள் பற்றியும் வதந்திகள் பரவின. அந்த வதந்திக்கு ரிசர்வ் வங்கி தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

புதிய ரூ50, ரூ20 நோட்டுகள் :

அதிக பாதுகாப்பு அம்சங்களுடன் புதியதாக ரூ50, ரூ20 நோட்டுகள் வெளியிடப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.  புதிதாக வெளியிடப்பட உள்ள 20 ரூபாய் நோட்டில் L உடன் புதிய வரிசை எண் அச்சிடப்படுகிறது.அதே நேரத்தில் தற்போதைய ரூ50, ரூ20 நோட்டுகளும் புழக்கத்தில் இருக்கும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: