நெல்லை மாவட்டத்தில் 52 ரேஷன் கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

ஞாயிற்றுக்கிழமை, 1 ஜனவரி 2017      திருநெல்வேலி

 

 

நெல்லை

 

 

நெல்லை மாவட்டத்தில் 52 ரேஷன் கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினர். அப்போது முறைகேடுகளை கண்டுபிடித்து ரூ.19 ஆயிரத்து 691 அபராதம் விதிக்கப்பட்டது.

 

நெல்லை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ராஜேந்திரன் உத்தரவுப்படி நெல்லை மாவட்டத்தில் 52 ரேஷன் கடைகளில் திடீர் ஆய்வு நடத்தப்பட்டது. நெல்லை மாவட்ட பொது வினியோக திட்ட துணைப்பதிவாளர் ரியாஜ் அகமது தலைமையில் 26 கூட்டுறவுத்துறை அலுவலர்கள் கொண்ட குழுவினர் ஆய்வு நடத்தினார்கள்.அப்போது 1,000 ரேஷன் அட்டைகள் சரிபார்க்கப்பட்டன.

 

இதில் 90 கிலோ அரிசி, 90 கிலோ சீனி, 51லு லிட்டர் மண்எண்ணெய், 38 கிலோ கோதுமை, 14 கிலோ துவரம் பருப்பு, 10 கிலோ உளுந்தம்பருப்பு, 21 லிட்டர் பாமாயில், 279 தேயிலை பாக்கெட்டுகள், 232 உப்பு பாக்கெட்டுகள் ஆகிய அத்தியாவசிய பொருட்கள் இருப்பு குறைவு ஏற்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

 

இவற்றை போலிப்பதிவு மூலம் அவற்றை விற்பனை செய்ததும், நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக வழங்கியும், இழப்பு ஏற்படுத்தியதும் தெரியவந்தது. மேலும் சில கடைகளில் கூடுதல் இருப்பு இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

 

இந்த முறைகேடுகளின் மதிப்பின்படி, ரூ.19,691 அபராத தொகை விதிக்கப்பட்டது. இதற்கு காரணமான பணியாளர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் குடிமைப்பொருள் வினியோகத்தில் தவறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை, நெல்லை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ராஜேந்திரன் தெரிவித்து உள்ளார்

 

இதை ஷேர் செய்திடுங்கள்: