முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரேசன்கார்டு விபரங்கள் சரிபார்ப்பு பணி - கலெக்டர் நேரில் ஆய்வு

வியாழக்கிழமை, 12 ஜனவரி 2017      ராமநாதபுரம்
Image Unavailable

 ராமநாதபுரம் - ராமநாதபுரம் மாவட்டத்தில் குடும்ப அட்டையிலுள்ள நபர்களின் விபரங்களை சரிபார்க்கும் பணிகளின் ஒரு பகுதியாக கல்லூரி மாணவ, மாணவியர்களைக் கொண்டு பொது விநியோகத் திட்ட இணைய பக்கத்தில் தகவல் பதிவேற்றம் செய்யப்பட்டு வருவதை கலெக்டர் முனைவர் நடராஜன் நேரில் சென்று பார்வையிட்டார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 01.11.2016 முதல் மாவட்டத்திலுள்ள குடும்ப அட்டைகளில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் விபரங்களை கள ஆய்வு செய்து உறுதி செய்திடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணிகளுக்காக அந்தந்த பகுதிகளில் உள்ள கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு பணியாளர்கள், நகராட்சி, பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் இதர துறையைச் சார்ந்த பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டு ஒவ்வொரு வீடாக நேரில் சென்று குடும்ப அட்டையிலுள்ள உறுப்பினர்கள் குறித்த விபரங்களை சரிபார்க்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் தற்போது, குடும்ப அட்டையிலுள்ள நபர்களின் விபரங்களை சரிபார்க்கும் பணிகளின் ஒரு பகுதியாக கல்லூரி மாணவ, மாணவியர்களைக் கொண்டு பொது விநியோகத் திட்ட இணைய பக்கத்தில் தகவல் பதிவேற்றம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த தகவல் பதிவேற்றம் செய்யும் பணிகளுக்காக ராமநாதபுரம், அண்ணா பல்கலைக்கழக அரசு பொறியியல் கல்லூரி, செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரி, சதக் பொறியியல் கல்லூரி, தாசிம் பீவி பெண்கள் கலைக் கல்லூரி, சதக் பாலிடெக்னிக் கல்லூரி ஆகிய கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதன்படி கலெக்டர் முனைவர்.ச.நடராஜன் ராமநாதபுரம், அண்ணா பல்கலைக்கழக அரசு பொறியியல் கல்லூரி, செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரி, சதக் பொறியியல் கல்லூரி, தாசிம் பீவி பெண்கள் கலைக் கல்லூரி ஆகிண கல்லூரிகளுக்கு நேரடியாக சென்று, குடும்ப அட்டையிலுள்ள நபர்களின் விபரங்கள் சரிபார்ப்பு பணிகள் குறித்த விபரங்களை கல்லூரி மாணவ, மாணவியர்களைக் கொண்டு பொது விநியோகத் திட்ட இணைய பக்கத்தில் தகவல் பதிவேற்றம் செய்யும் பணிகளை ஆய்வு செய்தார்.

அதனைத் தொடர்ந்து, தேவிபட்டினம், புல்லாங்குடி ஆகிய பகுதிகளில் உள்ள நியாயவிலைக் கடைகளின் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு, தமிழ்நாடு அரசின் விலையில்லா பொங்கல் பரிசுகள் வழங்கும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வுகளின் போது, ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் ராம்பிரதீபன், மாவட்ட வழங்கல் அலுவலர் மு.மதியழகன், வட்ட வழங்கல் அலுவலர்கள் சாந்தி, தமீம்ராஜா உட்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்