முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவண்ணாமலையில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் வீட்டில் 40 சவரன் தங்க நகை, பணம் திருட்டு

திங்கட்கிழமை, 27 பெப்ரவரி 2017      திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் வீட்டில் 40 சவரன் தங்க நகை, பணத்தை மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றுள்ளனர். இதுபற்றிய விவரம் வருமாறு, திருவண்ணாமலை வேங்கிக்கால் நேதாஜி நகரைச சேர்ந்தவர் மிதன் கார்த்திக் (50) திருவண்ணாமலை அருகே உள்ள ஐங்குணம் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ரோஸ்மின் மார்கரேட் (38) திருவண்ணாமலையிலுள்ள அரசு நிதியுதவி பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். மகள் பிஇ முடித்துவிட்டு சென்னையில் தங்கி அரசு தேர்வுக்காக படித்து வருகிறார். மகன் கோவையில் பி.டெக் படித்து வருகிறார். மனைவி மற்றும் வேங்கிக்கால் வீட்டில் தங்கியுள்ளார். இந்நிலையில் விடுமுறை தினம் என்பதால் ஞாயிறன்று மதியம் வீட்டை பூட்டிக்கொண்டு கணவன், மனைவி இருவரும் கடலூருக்கு சென்றனர். இரவு 11 மணியளவில் வீட்டிற்கு திரும்பினர். அப்போது வீட்டின் முன்பக்க இரும்பு கேட்டின் பூட்டு உடைத்து கடப்பாறையால் உடைக்கப்பட்டு திறக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தது. அதில் 40 சவரன் நகை, ரூ. 40 ஆயிரம் திருடு போனது கண்டு அதிர்ச்சியடைந்தனர். தம்பதியினர் வீட்டில் இல்லாததை அறிந்த மர்மஆசாமிகள் இந்த துணிகர சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து திருவண்ணாமலை கிராமிய காவல்நிலையத்தில் மிதன் கார்த்திக் நேற்று விடியற்காலை புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தினர். நேற்று காலையில் கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். மேலும் திருடு குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடிவருகின்றனர். இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை நேதாஜி நகர் 7வது தெருவைச் சேர்ந்தவர் எம்.எஸ்.நைனாகண்ணு, இவர் முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவராகவும் அதிமுக தெற்கு மாவட்ட கழக பொருளாளராகவும் உள்ளார். ஞாயிறன்று வீட்டை பூட்டிக்கொண்டு வெளியே சென்றார். நள்ளிரவில் இவரது வீட்டின் கேட்டை உடைத்த முகமூடி ஆசாமிகள் 3 பேர் மெயின கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அப்போது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். இதையறிந்த மர்ம ஆசாமிகள் திருட்டு முயற்சியை கைவிட்டு வெளியே ஓடிவந்தனர். அப்போது வீட்டின் வெளிப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா கம்ப்யூட்டர் இணைப்புடன் இருந்ததைப் பார்த்தனர். அதில் தங்களின் உருவம் பதிவாகியிருக்கலாம் என கருதி அவர்கள் கம்ப்யூட்டரிலிருந்த ஹார்ட்டிஸ்கை கழற்றிக்கொண்டு கேமராவையும் திருடிச் சென்றுவிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த திருவண்ணாமலை கிராமிய காவல்துறையினர் சம்பவ இடம் வந்து விசாரித்தனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வந்து வீடு மற்றும் வெளியே நிறுத்தியிருந்த காரில் பதிவாகியிருந்த ரேகைகளை சேகரித்தனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்