தருமபுரி மாவட்டத்தில் முன்னாள் மாணவருக்கு ரூ. 26 லட்சம் மதிப்பீட்டில் வேளாண் கருவிகள்:கலெக்டர் கே.விவேகானந்தன் வழங்கினார்

செவ்வாய்க்கிழமை, 14 மார்ச் 2017      தர்மபுரி
13

 

தருமபுரி மாவட்டத்தில் தமிழக அரசின் சார்பில் தேசிய குழந்தைத் தொழிலாளர் நல வாரிய திட்டத்தின் கீழ் முன்னாள் மாணவருக்கு ரூ. 26 இலட்சம் மதிப்பீட்டில் வேளாண் கருவிகள் வாடகை மையத்தினை கலெக்டர் கே.விவேகானந்தன், திறந்து வைத்து தெரிவித்ததாவது :-2005ம் ஆண்டு தேசிய குழந்தைத் தொழிலாளர் நல வாரிய திட்டத்தின் மூலம் பென்னாகரம் வட்டம், நெருப்பூரைச் சார்ந்த சி.முத்துராஜ் தபெ. சின்னமுத்து கல் குவாரியிலிருந்து 11-வது வயதில் மீட்கப்பட்டார். இதனை தொடர்ந்து இத்திட்ட சிறப்புப் பயிற்சி மையத்தில் இரண்டு வருடம் 7, 8ம் வகுப்பு முடித்து பின்னர் பொதுப்பள்ளியில் சேர்க்கப்பட்டு 10ம் வகுப்பு முடித்தார்.தமிழக அரசின் சிறப்பு நடவடிக்கையின் மூலம் இதுவரை 500க்கும் மேற்பட்ட தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட முன்னாள் மாணவர்கள் தொழில் முனைவோருக்கான திறன் மேம்பாடு பயிற்சி முடித்துள்ளனர். இதில் சி.முத்துராஜ் (தற்போது வயது 21) ஒருவர். இத்திட்டத்தின் கீழ் முன்னாள் குழந்தைத் தொழிலாளர்கள் பலர் தற்போது மருத்துவம், பொறியியல் போன்ற உயர் கல்வி படித்து வருகின்றார்கள். இத்திட்டத்தின்கீழ் உள்ள முன்னாள் மாணவர்களை தொழில் அதிபர்களாக உருவாக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில், தமிழக அரசால் வேளாண் பொறியியல் துறையின் சார்பில் ரூ. 26 இலட்சம் மதிப்பிலான வேளாண் கருவிகள் சி.முத்துராஜிக்கு வழங்கப்பட்டுள்ளது. இவருக்கு ரூ.10 இலட்சம் மானியத்துடன் கூடிய வங்கி கடன் இந்தியன் வங்கி மூலம் நேரடியாக வழங்கப்பட்டுள்ளது எனவும், மேலும் இத்திட்டத்தின் கீழ் முன்னாள் மாணவர்கள் முறையாக விண்ணப்பித்து அரசின் சார்பில் வழங்கப்படுகிற நலத்திட்ட உதவிகளை பெற்று பயனடையலாம் எனவும் கலெக்டர் கே.விவேகானந்தன், தெரிவித்தார்.முன்னதாக மீட்கப்பட்ட முன்னாள் குழந்தைத் தொழிலாளர் மாணவர்களின் பெற்றோர்கள் 12 நபர்களுக்கு தொழிலாளர் நல வாரியத்தின் சார்பில் அடையாள அட்டைகளை கலெக்டர் கே.விவேகானந்தன், வழங்கினார். இந்நிகழ்ச்சியின்போது தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட இயக்குநர் சரவணன், வேளாண் செயற்பொறியளர் குணசேகரன், தொழிலாளர் நல அலுவலர் கோட்டீஸ்வரி, சமூக பாதுகாப்புத் திட்டம் நிர்மலதா, உதவி பொறியாளர் அறிவழகன் மற்றும் திட்ட மேலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: