முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்து பாராளுமன்ற தாக்குதல் : போலீசாரால் அடையாளம் காணப்பட்டான்

வெள்ளிக்கிழமை, 24 மார்ச் 2017      உலகம்
Image Unavailable

லண்டன் - இங்கிலாந்து பாராளுமன்ற தாக்குதல்தாரி காலித் மசூத் என அடையாளம் காணப்பட்டு உள்ளது, ஏற்கனவே பயங்கரவாத தொடர்பு உடையவன் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

திடீர் தாக்குதல்
இங்கிலாந்து நாட்டின் பாராளுமன்ற கட்டிடம், லண்டன் நகரில் வெஸ்ட்மின்ஸ்டர் பாலம் அருகே உள்ளது. அந்த பாலத்தில் கடந்த 3 நாட்களுக்கு முன் ஒரு பயங்கரவாதி காரை அதிவேகமாக ஓட்டிச்சென்று மக்கள்மீது சரமாரியாக மோதித் தள்ளினான். சினிமாவில் வரும் சம்பவம் போல நடந்த இந்த சம்பவத்தால் நிலைகுலைந்த மக்கள் பீதியில் பாராளுமன்றத்தை நோக்கி ஓடினர். அதைத் தொடர்ந்து கார், தடுப்புச்சுவரில் மோதி நின்றது. அதைத் தொடர்ந்து அந்த பயங்கரவாதி, பாராளுமன்ற நுழைவாயிலை நோக்கி கையில் கத்தியுடன் ஓடி வந்தான். அவனை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் அதிகாரி ஒருவர் தடுத்து நிறுத்த முயற்சித்தார். அவரை, அவன் கத்தியால் குத்தி விட்டு மேலும் முன்னேறினான்.

7 பேர் கவலைக்கிடம்
பாராளுமன்ற வளாகத்தில் அவன் அத்துமீறி நுழைந்தபோது, பாதுகாப்பு பணியில் இருந்த ஸ்காட்லாந்து யார்டு போலீஸ் அதிகாரிகள் அவனை சுட்டுக்கொன்றனர். தாக்குதலில் பலியானவர்கள் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறவர்களில் 7 பேரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த தாக்குதல் தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

பயங்கரவாத தொடர்பு
இங்கிலாந்து பாராளுமன்ற தாக்குதல்தாரி காலித் மசூத் என அடையாளம் காணப்பட்டு உள்ளது, ஏற்கனவே பயங்கரவாத தொடர்பு உடையவன் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.  தாக்குதலின்போது போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட காலித் மசூத் கென்ட் பகுதியில் பிறந்தவன். ஏற்கனவே பயங்கரவாத தொடர்பு விவகாரம் தொடர்பாக பிரிட்டன் புலனாய்வு பிரிவினால் விசாரிக்கப்பட்டவன் எனவும் தெரியவந்து உள்ளது. இதற்கிடையே இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பு ஏற்று உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்