பிளஸ்-2 படித்தவர்களுக்கு குவிந்து வரும் மருத்துவ படிப்புகள்

செவ்வாய்க்கிழமை, 18 ஏப்ரல் 2017      மாணவர் பூமி
what radiography

Source: provided

பிளஸ் -2 படித்தவர்கள் டாக்டருக்கு படிப்பது என்றால் அலோபதி மருத்துவமான எம்.பி.பி.எஸ் மட்டுமே என நினைக்கிறார்கள். ஆனால் மருத்துவ படிப்பு என்பது இன்று பல துறைகளாக  பிரிந்து தனித்தனிப் பாடங்களாக கற்பிக்கப்படுகின்றன. ஆடியாலஜி, ஆப்ட்டோமெட்ரி போன்ற மருத்துவ படிப்புகள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்புகள் அதிகம் உள்ள துறைகளாக இருக்கின்றன. அவற்றில் சித்தா, ஆயுர்வேதம் போன்ற படிப்புகள் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் கிடைக்கின்ற துறையாகும்.

சித்த மருத்துவம், ஆயுர்வேதம், ஹோமியோபதி மருத்துவப் படிப்புகள் : நவீன மருத்துவத்திற்கு இணையாக சமீப காலங்களில் இந்திய பாரம்பரிய மருத்துவ முறைகளுக்கும் தேவை அதிகரித்து உள் ளது. சமீபத்திய உதாரணம் டெங்கு சிகிச்சை. கடந்த நவம்பர் மாதத்தில் டெங்கு காய்ச்சலால் அதிக அளவு மக்கள் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து பப்பாளி இலைச்சாறு, நில வேம்புக் கஷாயம் போன்ற பாரம் பரிய மருந்துகளைப் பயன்படுத்திய பிறகே நிலைமை கட்டுக்குள் வந்தது.

தமிழகத்தில் பாளையங்கோட்டை, சென்னை ஆகிய இடங்களில் உள்ள சித்த மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை சித்த மருத்துவப் பட்டப்படிப்பு உள்ளது. பி.ஏ.எம்.எஸ். என்ற 5 ஆண்டு ஆயுர்வேத மருத்துவ படிப்பு சித்த மருத்துவக் கல்லூரியிலேயே உள்ளது. இது தவிர ஆயுர்வேத மருத்துவத்திற்கென்றே தனியார் ஆயுர்வேத பல்கலைக்கழகங்களும் உள்ளன. ஜெய்ப்பூரில் உள்ள நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஆயுர்வேதா கல்வி நிலையத்தில் டிப்ளமோ இன் ஆயுர்வேதிக் பார்மஸி என்ற 2 ஆண்டு படிப்பு, டிப்ளமோ இன் ஆயுர்வேதா நர்ஸிங் என்ற 18 மாதப் படிப்பும்  உள்ளன. ராஜஸ்தான் ஆயுர்வேத பல்கலைக்கழகத்தில் டிப்ளமோ இன்ஹெர்பல் மெடிசின் என்ற ஓராண்டு டிப்ளமோ படிப்பு உள்ளது. நவீன மருத்துவத்திற்கு அடுத்து, பிரபலமாக இருப்பது ஹோமியோபதி. ஐந்தரை ஆண்டு படிப்பு இது. எளிய மருத்துவ சிகிச்சை என்பதால், இந்த மருத்துவ முறை தற்போது பிரபலமாகி வருகிறது. எனவே, இந்தப் படிப் பில் சேருவதிலும் மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். மதுரையை அடுத்த திருமங்கலத்தில் அரசு ஹோமியோபதி கல்லூரி உள்ளது. இது தவிர, தனியார் ஹோமியோபதி கல்லூரிகளும் உள்ளன.

ஆடியாலஜி : பி.ஏ.எஸ்.எல்.பி. என்பது ஆடியாலஜி மற்றும் ஸ்பீச் அண்ட் லாங்க்வேஜ் பேத்தாலஜியில் 3 ஆண்டுகள் பட்டப்படிப்பு. பேச்சு மற்றும் செவித்திறன் கோளாறுகளைக் கண்டறிவது தொடர்பான மருத்துவப் படிப்பு. எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம், ஸ்ரீராமச்சந்திரா பல்கலைக்கழகம், விநாயகா மிஷன் பல்கலைக்கழகங்களில் இந்தப் படிப்பு உள்ளது. சண்டீகரில் உள்ள போஸ்ட் கிராஜுவேட் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மெடிக்கல் எஜுக்கேஷன் அண்ட் ரிசர்ச் கல்வி நிலையத்தில் பிஎஸ்சி ஆடியாலஜி படிப்பு உள்ளது. காது கேட்கும் கருவிகள் தயாரிக்கும் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகளில் இந்தப் படிப்புகளைப் படித்தவர்களுக்கு வேலை கிடைக்கும்.

ஆப்ட்டோமெட்ரி : கண்களின் அமைப்பு, செயல்பாடுகளைப் பற்றிய படிப்பு இது. கண் மருத்துவமனைகளில் கண் டாக்டர் களுக்கு உதவியாளர்களாக இவர்களால் செயல்பட முடியும். ரிப்ராக்டிவ் எரர் என்று சொல்லப்படும் கிட்டப் பார்வை, தூரப் பார்வை உடையவர்கள் என்ன மாதிரியான கண்ணாடிகளை அணிய வேண்டும் என்பது உட்பட கண் தொடர்பான கோளாறுகளுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளிப்பதற்கு முன் அனைத்துப் பரிசோதனைகளையும் செய்து ரிசல்ட் தருபவர்கள் இவர்கள். அரசு கண் மருத்துவமனைகள் தவிர, அகர்வால் கண் மருத்துவமனையில் பி.எஸ்சி. 4 ஆண்டு படிப்பும் டிப்ளமோ 2 ஆண்டு படிப்பும் உள்ளன. தலா 40 இடங்கள் உள்ள இந்தப் படிப்பில் சேர பிளஸ் டூ தேர்வில் 60 சதவீத  மதிப்பெண்கள்  பெற்றிருக்க வேண்டும். அறிவியலை சிறப்புப் பாடமாக எடுத்துப் படித்திருக்க வேண்டும். சங்கர நேத்ராலயா மருத்துவமனை யில் ஆபரேஷன் தியேட்டர் அனஸ்தீசியா டெக்னாலஜி, ரிப்ராக்ஷன், ஆப்தால்மிக் நர்சிங் அசிஸ்டெண்ட்  ஆகியவற்றில் 2 ஆண்டு டிப்ளமோ படிப்புகளும் மெடிக்கல் லேப் டெக்னாலஜி என்ற 3 ஆண்டு இளநிலை பட்டப்படிப்பும் உள்ளன. இந்தப் படிப்புகளுக்கு தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் சான்றிதழ்களை வழங்கும்.

ரேடியோகிராபி : மருத்துவத்தின் உட்பிரிவான இந்தப் படிப்பு படித்தவர்களை ரேடியாலஜிஸ்ட் என்று கூறுவார்கள். எக்ஸ்ரே, சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ. போன்ற பரிசோதனைகள் செய்வது இவர்கள்தான். உடல் உள்உறுப்புகள் எப்படி உள்ளன, என்ன மாதிரியான கோளாறுகள் உள்ளன, அதன் செயல்பாடுகள் எப்படி உள்ளன என்பது போன்றவற்றை துல்லியமாக அறிந்து, ரிப்போர்ட் செய்வது தொடர்பான படிப்பு இது. அதனால், டாக்டர்கள் படிக்கும் உடற்கூறியல் பாடம் போல இவர்களுக்கும் உடல் உறுப்புகள் குறித்து முழுவதும் கற்றுத் தரப்படுகிறன.  நவீன மருத்துவத்தின் தலைநகரமாக இந்தியா இருப்பதால், சர்வதேசத் தரம் வாய்ந்த பரிசோதனைக் கூடங்கள் இங்கும் வந்து விட்டன. எனவே, இந்தப் படிப்புகளைப் படித்தவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு உள்ளது.

ஸ்பீச் தெரபி : பேசுவதில் ஏற்படும் பிரச்சினைகளை சரி செய்வது குறித்து இந்தப் படிப்பில் கற்றுத் தரப்படுகிறது. புதுதில்லியில் உள்ள எய்ம்ஸ் உட்பட பல தன்னாட்சி பெற்ற மருத்துவமனைகளில் ஸ்பீச் தெரபி பாடத்தில் இளநிலைப் பட்டப்படிப்பு உள்ளது.

தேவையான படிப்பை தேர்ந்தெடுத்து ஏழை மக்களுக்கு இலவச பணி செய்ய மாணவ–மாணவிகள் முன்வர வேண்டும்.

Chicken Lollipop Recipe in Tamil | சிக்கன் லாலிபாப் | Chicken Recipes in Tamil

Falooda Recipe in Tamil | பலூடா | Sweet Dessert Recipe

Murungai Keerai Soup inTamil | முருங்கை கீரை சூப் | Drum Stick Leaves Soup in Tamil | Vegetable Soup

Dhaniya Paneer Recipe in Tamil | தனியா பன்னீர் | Paneer Recipe in Tamil | Paneer Gravy

Chicken Chukka in Tamil | சிக்கன் சுக்கா | Chicken Chukka Varuval in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்: