முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். 32-வது லீக் ஆட்டம்: டெல்லியை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி

சனிக்கிழமை, 29 ஏப்ரல் 2017      விளையாட்டு
Image Unavailable

கொல்கத்தா : ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் காம்பீர்–உத்தப்பா ஜோடியின் அரைசதத்தின் உதவியுடன் கொல்கத்தா அணி எளிதில் வெற்றியை ருசித்தது. 9–வது ஆட்டத்தில் ஆடிய கொல்கத்தாவுக்கு இது 7–வது வெற்றியாகும்.

8 அணிகள்

8 அணிகள் பங்கேற்றுள்ள 10–வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே–ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும்.

32-வது லீக்

இந்த நிலையில் கொல்கத்தா ஈடன்கார்டனில் நேற்று முன்தினம் மாலை நடந்த 32–வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, டெல்லி டெர்டெவில்சை எதிர்கொண்டது. கொல்கத்தா அணியில் இரு மாற்றமாக டேரன் பிராவோ, பியுஷ் சாவ்லா நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக நாதன் கவுல்டர்–நிலே, ஷெல்டன் ஜாக்சன் சேர்க்கப்பட்டனர். டெல்லி அணியில் ஆதித்ய தாரேவுக்கு பதிலாக அங்கித் பாவ்னே இடம் பெற்றார்.

சிறப்பான தொடக்கம்

‘டாஸ்’ ஜெயித்த கொல்கத்தா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி பேட்டிங்கை தொடங்கிய டெல்லி அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் சஞ்சு சாம்சனும், கருண் நாயரும் அதிரடியான தொடக்கத்தை ஏற்படுத்தி தந்தனர். முதல் 4 ஓவர்களில் 41 ரன்களை திரட்டிய இந்த ஜோடியின் வேகத்துக்கு, சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரின் முட்டுக்கட்டை போட்டார். அவரது பந்தில் கருண் நாயர் (15 ரன்) எல்.பி.டபிள்யூ. ஆனார்.

அபார பந்துவீச்சு

அதன் பிறகு சஞ்சு சாம்சனுடன், ஸ்ரேயாஸ் அய்யர் கைகோர்த்து இருவரும் சீரான வேகத்தில் ஸ்கோரை உயர்த்தினர். சஞ்சு சாம்சன் 60 ரன்கள் (38 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசினார். 15 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 131 ரன்கள் எடுத்திருந்ததை பார்த்த போது, அந்த அணி எப்படியும் 180 ரன்களை தாண்டும் போல் தோன்றியது. ஆனால் இறுதிகட்டத்தில் அருமையாக பந்து வீசிய கொல்கத்தா பவுலர்கள், கடைசி 5 ஓவர்களில் 4 விக்கெட்டுளை சாய்த்து வெறும் 29 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து அசத்தினர்.

160 ரன்கள்

20 ஓவர் முடிவில் டெல்லி அணி 6 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்தது. ஸ்ரேயாஸ் அய்யர் தனது பங்குக்கு 47 ரன்கள் (34 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்தார். கொல்கத்தா தரப்பில் நாதன் கவுல்டர்–நிலே 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

உத்தபா அதிரடி

அடுத்து 161 ரன்கள் இலக்கை நோக்கி கொல்கத்தா அணி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர் சுனில் நரின் 4 ரன்னில் கிளீன் போல்டு ஆனார். இதன் பின்னர் கேப்டன் கவுதம் கம்பீரும், ராபின் உத்தப்பாவும் கூட்டணி அமைத்து அணியை நிமிர வைத்தனர். உத்தப்பா 9 ரன்களில் இருந்த போது கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பிபிழைத்தார். அதாவது அவர் தூக்கியடித்த பந்தை கேட்ச் செய்ய சஞ்சு சாம்சனும், அமித் மிஸ்ராவும் ஓடி வந்தனர். ஆனால் அவர் பிடிப்பார் என்று இவரும், இவர் பிடிப்பார் என்று அவரும் நினைத்து கேட்ச் செய்யாமல் நின்று விட்டனர். இரண்டு பேருக்கும் நடுவில் பந்து விழுந்தது.

டெல்லிக்கு பின்னடைவு

இந்த பொன்னான வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்ட உத்தப்பா, அதன் பிறகு சரவெடி ஆட்டத்தால் ரசிகர்களை குஷிப்படுத்தினார். கிறிஸ் மோரிஸ் ஓவரில் 2 சிக்சர்களை பறக்க விட்ட உத்தப்பா, கம்மின்சின் பந்து வீச்சிலும் ஒரு சிக்சரை விரட்டி அமர்க்களப்படுத்தினார். முன்னணி வேகப்பந்து வீச்சாளரான டெல்லி கேப்டன் ஜாகீர்கான் தசைப்பிடிப்பால் 1.1 ஓவர் மட்டுமே வீசினார். இது கொல்கத்தாவுக்கு இன்னும் வசதியாக போய் விட்டது. 24 பந்துகளில் அரைசதத்தை எட்டிய உத்தப்பா 59 ரன்களில் (33 பந்து, 5 பவுண்டரி, 4 சிக்சர்) ரன்–அவுட் ஆனார். இந்த சீசனில் அவரது 4–வது அரைசதம் இதுவாகும். அடுத்து வந்த மனிஷ் பாண்டே 5 ரன்னில் வெளியேறினார்.

கொல்கத்தா வெற்றி

மறுமுனையில் நிலைத்து நின்று அரைசதத்தை பூர்த்தி செய்த காம்பீர் வெற்றிகரமாக இலக்கை எட்ட வைத்தார். கொல்கத்தா அணி 16.2 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 161 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. காம்பீர் 71 ரன்களுடனும் (52 பந்து, 11 பவுண்டரி), ஷெல்டன் ஜாக்சன் 12 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 9–வது ஆட்டத்தில் ஆடிய கொல்கத்தாவுக்கு இது 7–வது வெற்றியாகும். இதன் மூலம் அந்த அணி பிளே–ஆப் சுற்று வாய்ப்பை வெகுவாக நெருங்கியுள்ளது. கொல்கத்தா அணி இங்கு 2012–ம் ஆண்டுக்கு பிறகு ‘சேசிங்’ செய்த ஆட்டங்களில் (13 ஆட்டம்) தோற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லி அணிக்கு இது 5–வது தோல்வியாகும்.

வெற்றிக் குறித்து காம்பீர்:

‘ஒரு கட்டத்தில் டெல்லி அணி 180 ரன்கள் முதல் 190 ரன்கள் வரை குவிக்கும் என்று நினைத்தோம். ஆனால் எங்களது பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி ஆட்டத்தை எங்களுக்கு சாதமாக கொண்டு வந்து விட்டனர். இந்த தொடரில் இதுவரையிலான எங்களது அணியின் செயல்பாடு திருப்தி அளிக்கிறது. ஆனால் இது போன்ற போட்டித் தொடரில் நாம் மெத்தனமாக இருக்க முடியாது’ என்றார். 9 ஆட்டங்களில் விளையாடியுள்ள காம்பீர் 4 அரைசதம் உள்பட 376 ரன்கள் குவித்து முதலிடத்தில் இருக்கிறார். மீண்டும் அவர் ஆரஞ்சு நிற தொப்பியை தனதாக்கி இருக்கிறார்.

தோல்வி குறித்து ஜாகீர்கான்:
‘160 ரன்களை கொண்டு வெற்றி பெற்றிருக்கலாம். இந்த ஆடுகளத்தில் இது போதுமான ஸ்கோர் தான். ஆனால் எனது தசைப்பிடிப்பு பின்னடைவை ஏற்படுத்தி விட்டது. இதே போல் உத்தப்பா கொடுத்த கேட்ச் வாய்ப்பை பிடித்திருந்தால் ஆட்டத்தின் போக்கு மாறியிருக்கும். எதிர்பார்த்ததை விட 15 ரன்கள் குறைவாக எடுத்து விட்டோம். ஒருங்கிணைந்து விளையாடி வெற்றிப்பாதைக்கு திரும்புவது அவசியம்’ என்றார்.

சாதனைகளை படைத்த கம்பீர்

கொல்கத்தா கேப்டன் கவுதம் கம்பீர் டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் 71 ரன்கள் சேகரித்ததுடன் பல சாதனைகளையும் படைத்தார்.  கொல்கத்தா கேப்டன் கவுதம் கம்பீர் நேற்று முன்தினம் டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் 71 ரன்கள் சேகரித்ததுடன் பல சாதனைகளையும் படைத்தார். ஐ.பி.எல். போட்டியில் 4 ஆயிரம் ரன்களை (141 ஆட்டத்தில் 4,010 ரன்) கடந்த 3-வது வீரர் என்ற பெருமையை பெற்றார். குஜராத் கேப்டன் சுரேஷ் ரெய்னா (4,407 ரன்), பெங்களூரு கேப்டன் விராட் கோலி (4,274 ரன்) முதல் இரு இடங்களில் உள்ளனர்.

எல்லாவகையான 20 ஓவர் கிரிக்கெட்டையும் சேர்த்து 6 ஆயிரம் ரன்கள் மைல்கல்லை எட்டிய 13-வது வீரர், இந்திய அளவில் 4-வது வீரர் என்ற சிறப்புக்கும் கம்பீர் சொந்தக்காரர் ஆனார். 20 ஓவர் கிரிக்கெட்டில் கம்பீர் 229 ஆட்டங்களில் விளையாடி 6,023 ரன்கள் குவித்துள்ளார். ரெய்னா, கோலி, ரோகித் சர்மா ஏற்கனவே 6 ஆயிரம் ரன்களை கடந்துள்ளனர்.

ஐ.பி.எல்.-ல் கேப்டனாக அதிக ரன்கள் எடுத்தவர் (3,311 ரன்) என்ற சாதனையையும் நிகழ்த்தியுள்ளார். இந்த வரிசையில் டோனி (3,270 ரன்) 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். இந்த ஆட்டத்தில் கம்பீரும், உத்தப்பாவும் இணைந்து 2-வது விக்கெட்டுக்கு 108 ரன்கள் திரட்டினர். இதன் மூலம் இலக்கை துரத்திப்பிடிக்கையில் (சேசிங்) அதிக செஞ்சுரி பார்ட்னர்ஷிப் (4-வது முறை) கொடுத்த ஜோடி என்ற மகிமையும் இவர்களுக்கு கிடைத்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்