முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நினைவாற்றலை அதிகப்படுத்துதல்

செவ்வாய்க்கிழமை, 16 மே 2017      மாணவர் பூமி
Image Unavailable

Source: provided

நினைவாற்றல் ஐம்புலன்களில் இருந்து வரும் உணர்வுகள் மூளையை அடைகின்றன.  மூளை அவற்றை வகைப்படுத்தி உணர்ந்து கொள்கிறது.  இந்த உணர்வுகள் மூளையிலேயே தங்கி இருந்தால் அவை நினைவுகளாக மாறிவிடுகின்றன.  தேவை ஏற்படும்போது இந்த நினைவுகளை மீட்டெடுக்கமுடியும்.  தக்க பயிற்சிகளின் மூலம் நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள முடியும். சரியில்லாத நினைவாற்றல் என்று ஒன்று இல்லை.  நினைவாற்றல் என்பது ஒரு திறமை. நமது நினைவாற்றலுக்கு மூளை இன்றியமையாதது. ஏந்த ஒரு மருந்தோ மூலிகையோ மூளைத்திறனை அதிகப்படுத்திவிடாது.  தவறான மருந்துகள் நினைவாற்றலை பாதிக்கத்தான் செய்கின்றன. 

நினைவாற்றலை குறுகிய கால நினைவாற்றல், நீண்டகால நினைவாற்றல் என இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.  நமது மூளை அன்றாடம் ஆயிரக்கணக்கான தகவல்களைப் பெறுகிறது.  அத்தனை தகவல்களையும் மூளையிலேயே சேமித்து வைக்கவேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை.  அவசியமான காலத்திற்கு மட்டுமே அந்த தகவல்கள் மூளையில் சேமித்துவைக்கப்படுகின்றன.  பணி முடிந்ததும் அந்த தகவல்கள் மறக்கப்பட்டு விடுகின்றன.  இதுவே குறுகியகால நினைவாற்றல்.

நாம் செய்யும் தொழிலுக்குத் தேவையானவை, நம்முடைய மனதை மிகவும் கவர்ந்தவை அல்லது பாதித்தவை, மீண்டும் மீண்டும் சொல்லிப்பார்த்தவை ஆகிய தகவல்கள் நம்முடைய மூளையில் நீண்டகால நினைவுகளாக தங்கிவிடுகின்றன.  நீண்டகால நினைவுகளில் இருந்து தகவல்களை மீட்டெப்பதற்கு மூளை சிலநேரங்களில் சிரமப்படுவதை நாம் உணரமுடியும்.

ஞாபகம் ஒரு வியாதி, மறதி ஒரு வரம் என்று கூறுவார்கள்.  ஆனால் மாணவர்கள் படித்த பாடங்களை நினைவில் கொள்ள ஞாபக சக்தியை அதிகப்படுத்த வேண்டும். மனித மூளை 75 சதவீதம் நீரினால் நிரப்பப்பட்டுள்ளது. நாம் பார்க்கும், கேட்கும், உணரும், சுவைக்கும் மற்றும் நுகரும் அனைத்துமே நமது ஞாபகங்கள் ஆகும்.  இது நமது மனதில் குறைந்த நேரமே இருக்கும். உடனே மறைந்துவிடும். இதை நினைவில் கொள்ள ஆர்வத்துடன் கவனமாக செயல்படவேண்டும்.  திரும்பத்திரும்ப நினைத்துப்பார்த்து ஞாபகத்தில் கொள்ள வேண்டும். 

மாணவர்கள் அதிக வெப்பமான சூழ்நிலை மற்றும் வெப்பத்தின் தாக்கம் அதிகம் உள்ள இடங்களை தவிர்க்கவேண்டும்.  இதனால் நமது உடல்சோர்வு ஏற்பட்டு மூளையின் செயல் குறைந்துவிடும்.  அதிகநேரம் விளையாட்டில் ஈடுபட்டிருக்கவும் கூடாது.  இதனால் நமது மூளையின் திறன் அல்லது கற்கும் திறன் குறைந்து உடல் சோர்வு ஏற்பட்டுவிடுகிறது.  சிறிது நேரம் உடல்பயிற்சி மூலம் நினைவாற்றலை அதிகப்படுத்தவும் முடியும்.  மெது ஓட்டம் மற்றும் நீச்சல் பயிற்சி செய்வதன் மூலம் நினைவாற்றல் அதிகப்படும்.  இவ்வகையான உடல்பயிற்சியை அதிக நேரம் எடுத்துக்கொள்ளாமல் தினமும் சிறிது நேரம் செய்வதை வழக்கமாக்கிக் கொள்ளவேண்டும். 

நல்ல சூழ்நிலைகளில் வாழ்ந்து படிக்கும் மாணவர்களுக்கு நினைவாற்றல் அதிகப்படவும் வாய்ப்புள்ளது.  நினைவாற்றலை அதிகப்படுத்த நல்ல ஆழ்ந்த தூக்கம் தேவை.  இரவு நேர தூக்கத்தில் குறைந்தது ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் தூங்க வேண்டும்.  நல்ல தூக்கம் நமது உடலுக்கும் மனதுக்கும் நல்ல ஆரோக்கியத்தைத் தரும்.  மேலும் நினைவாற்றலும் 30 முதல் 40 சதவிகிதம் அதிகமாகிறது.

ஒரு செயலை செய்வதற்கு விருப்பமும் ஆர்வமும் இருக்க வேண்டும்.  எழுத்துக்களை பார்த்து மனதில் பதியவைப்பதைவிட படங்களை பார்த்து மனதில் பதிய வைப்பது மிகவும் எளிது.  மேலும் ஒரே நேரத்தில் பல வேலைகளை கவனமாக செய்யும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் நினைவாற்றல் அதிகப்படும்.

நினைவாற்றல் நன்றாக இருப்பதற்கு

1. தன்னம்பிக்கை,

2. ஆர்வம்,

3. செயல் ஊக்கம்,

4. விழிப்புணர்வு,

5. புரிந்துகொள்ளல்

6. உடல் நலம்  ஆகியவை காரணமாக இருக்கின்றன.

1. தன்னம்பிக்கை : என்னால் பாடங்களை நன்றாக படித்து நினைவில் வைத்துக்கொள்ளமுடியும் என்ற தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.  எனது மூளைத்திறன் நன்றாக இருக்கிறது. எனக்கு நினைவாற்றல் நன்றாக இருக்கிறது என்று நம்பிக்கை கொள்ள வேண்டும்.

2. ஆர்வம் : எந்த ஒரு விசயத்தையும் ஆர்வத்துடன் கவனித்தாலோ அல்லது செயல்பட்டாலோ நமது நினைவில் நன்றாக பதியும்.  மேலும் ஆர்வம் இல்லாவிட்டாலும் ஆர்வத்தை ஏற்படுத்திக்கொண்டு செயல்பட்டு நினைவில் பதியவைத்தால் நமது மனதில் நன்றாக பதியும்.

3. செயல் ஊக்கம் : இந்த பாடங்களை அல்லது விசயங்களை ஏன் கற்க வேண்டும், எவ்வகையில் இவை நமக்கு பயன் தரும் என்று நம்மோடு அந்த விசயங்களை இணைத்துக்கொண்டு செய்தால் நம் மனதில் நன்றாக பதியும்.

4. விழிப்புணர்வு :  மனம் விழிப்பு நிலையில் இருக்கும்பொழுது கவனமும், ஒருமைப்பாடும் மிகச்சிறந்து இருக்கும்

5. புரிந்துகொள்ளல் : புரிந்துகொண்டு செய்யும் செயல்கள் நம் மனதில் நன்றாக பதியும். மாணவர்கள் பாடங்களை புரிந்துகொண்டு படித்தால் நினைவில் நன்றாக நிற்கும்.

6. உடல் ஆரோக்கியம் : உடல் ஆரோக்கியமாக இருக்கும் போது நினைவாற்றல் நன்றாக இருக்கும்.  ஆரோக்கியமான உடலில் மூளைக்கு நிறைய இரத்த ஓட்டம், காற்றோட்டம் சென்று மூளை சுறுசுறுப்புடன் இயங்கும். தக்க உணவு, சரியான உறக்கம், முறையான பயிற்சிகள் மூலம் உடலை நன்கு பேணிப் பாதுகாத்தால் நினைவாற்றல் நன்றாக இருக்கும்.

நினைவாற்றல் அதிகரிக்க சில உணவு முறைகள் : தினமும் உணவில் சீரகம் மற்றும் மிளகு கண்டிப்பாக இடம் பெற வேண்டும்.  இவை குழந்தைகளின் மூளையில் சோர்வு ஏற்படாமல் பார்த்துக் கொள்கின்றன. பாதாம் பருப்பில் பாஸ்பரஸ், தாது உப்பு, குளுட்டாமிக் அமிலம் ஆகியவை உள்ளது. ஆகையால் நினைவாற்றலை அதிகப்படுத்திக்கொள்ளவும் நரம்புகளைப் பல்பபடுத்திக்கொள்ளவும் உதவுகிறது.  நினைவாற்றலை அதிகரிக்க வாரம் ஒருமுறை வல்லாரைக் கீரையை உணவில் சேர்த்து வருவது நல்லது. இது நினைவாற்றலை அதிகரிக்கும்.  பப்பாளிப்பழம், நெல்லிக்காய், வேர்க்கடலை ஆகியவற்றை  சாப்பிடுவதால் நினைவாற்றல் பலப்படும். அக்ரூட் பருப்புகளுடன் உலர்ந்த திராட்சைப் பழத்தை தினமும் சாப்பிடுவதால் மூளை வலுப்பெற்று நினைவாற்றல் அதிகரிக்கும்.  பசலைக்கீரையை வாரம் ஒரு நாள் உணவில் சேர்த்து வர நினைவாற்றல் அதிகரிக்கும்.

தொகுப்பு: கே.சுரேஷ், சேலம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!