திருப்பூர் மாவட்டம், நஞ்சராயன் குளத்தில் வண்டல் மண் தூர்வாரும் பணிகளை வருவாய் அலுவலர் ச.பிரசன்னா ராமசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

புதன்கிழமை, 7 ஜூன் 2017      திருப்பூர்
30a

திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி சாலையில் அமைந்துள்ள நஞ்சராயன் குளத்தில் வண்டல் மண் தூர்வாரும் பணிகளை மாவட்ட வருவாய் அலுவலர் ச.பிரசன்னா ராமசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பயன்படுத்திக் கொள்ள அனுமதி

நடவடிக்கை திருப்பூர் மாவட்டத்தில், உள்ள பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள நீர்நிலைப்புறம்போக்கு ஏரி, குளம் மற்றும் நீர்தேக்கங்களிலிருந்து விவசாயம், வீட்டு பொது உபயோகம் மற்றும் மண்பாண்டம் செய்தல் ஆகிய உபயோகங்களுக்காக வண்டல், சவுடு மண் மற்றும் கிராவல் ஆகியவற்றை எடுத்து பயன்படுத்திக்கொள்ள அரசாணை.50, தொழில் (எம்.எம்.சி1) துறை நாள் 27.04.2017-ன்படி தமிழக அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி மாவட்டத்தில் அமைந்துள்ள 144 நீர்நிலைகளில் வண்டல் மண் மற்றும் சவுடு மண் ஆகியவற்றை விவசாய பயன்பாட்டிற்காக திருப்பூர் மாவட்ட விவசாயிகள் எவ்வித கட்டணமுமின்றி இலவசமாக எடுத்து சென்று விவசாய நிலங்களில் பயன்படுத்தி உற்பத்தி திறன் மற்றும் மண்ணின் ஆரோக்கியத்தை மேம்படுத்திடவும் மழை நீரை முழுமையாக சேமிக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நேரில் பார்வையிட்டு ஆய்வு

இதனைத் தொடர்ந்து, காங்கேயம் கீழ் பவானி வடிநில திட்ட உபகோட்டம் ஐஐஐ -ன் கட்டுப்பாட்டில் உள்ள நஞ்சராயன் குளத்தில் விவசாய பயன்பாட்டிற்காக வண்டல் மண் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குளத்தின் மொத்த அளவு 160.54.5 ஹெக்டர் ஆகும். குளத்திலிருந்து மண் எடுத்துக் கொள்ளவதற்கு அனுமதிக்கப்பட்ட அளவு 80,000 கன மீட்டராகும். இதுவரை 2000 கன மீட்டர் எடுக்கப்பட்டு 50-ற்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர். இக்குளத்தில் வண்டல் மண் எடுக்கப்பட்டு வரும் பணிகளை மாவட்ட வருவாய் அலுவலர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக, ஊத்துக்குளி சாலை, மண்ணரை அருகில் அமைந்துள்ள மூளிக்குளம் தூர்வாரப்பட்ட பணிகளையும் மாவட்ட வருவாய் அலுவலர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, வட்டாட்சியர்கள் சுப்பிரமணியன் (திருப்பூர் வடக்கு), அருணா (ஊத்துக்குளி), கீழ் பவானி வடிநிலக் கோட்ட உதவி செயற் பொறியாளர் சபரி நாதன், விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து