நூதனமுறையில் ஏடிஎம் நம்பரை கேட்டு ரூ.1.26 லட்சம் மோசடி : மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 2 பேர் கைது

திங்கட்கிழமை, 19 ஜூன் 2017      தூத்துக்குடி

தூத்துக்குடி அருகே ஏடிஎம் நம்பரை கேட்டு நூதன முறையில் ரூ.1.26 லட்சம் பணத்தை மோசடி செய்த மேற்குவங்கத்தைச் சேர்ந்த 2பேரை போலீசார் கைது செய்தனர்.

16 இலக்க எண்

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் தாலுகா, அடைக்கலாபுரம், ஜெபஸ்தியார் தெருவைச் சேர்ந்தவர் பேரின்ப நாடார் மகன் பால்ராஜ் (54). கடந்த 25 ஆண்டுகளாக பனைத்தொழில் செய்து வருகிறார். ஆறுமுகநேரி கனரா வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்து பல ஆண்டுகளாக வரவு செலவு செய்து வந்ததுள்ளார். தனது வங்கி கணக்கிற்கு ஏடிஎம் கார்டு வைத்து பயன்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 31.01.2017-ம் தேதி மதியம் அவரது செல்போன் எண்ணில் தொடர்பு கொண்ட மர்ம நபர், தான் பேங்க் மேனேஜர் பேசுவதாகவும், உங்களுடைய ஏடிஎம் லாக் ஆகிவிட்டதால், கார்டில் முன்பக்கமுள்ள 16 இலக்க எண்ணை தெரிவிக்கும்படி கேட்டுள்ளார்.

அதிர்ச்சி

இதையடுத்து பால்ராஜ் தனது ஏடிஎம் கார்டு நம்பரை தெரிவித்துள்ளார். அதன்பின் மீண்டும் தொடர்பு கொண்டு கைப்பேசியில் வந்த குறுந்தகவலை (OTP Password)) கேட்டவுடன், அதையும் கொடுத்துள்ளார். இதையடுத்து அவர் தனது கைப்பேசிக்கு வந்த குறுந்தகவலை எடுத்துப் பார்த்தபோது, தனது சேமிப்பு கணக்கில் இருந்த ரூ. 1,36,605.47/-ம் பணத்தில், தற்போது இருப்பு ரூ 9,792.47/- பணம் மட்டும் இருப்பதை தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், ஆறுமுகநேரி கனரா வங்கி மேனேஜரை சென்று பார்த்து விபரம் கேட்டதாகவும், அதற்கு மேனேஜர் தங்கள் வங்கியிலிருந்து யாரும் தங்களை தொடர்பு கொள்ளவில்லை என்றும் கூறியுள்ளார்.

எஸ்.பி.யிடம் புகார்

மேலும், பால்ராஜ் கணக்கிலிருந்து ரூ. 1,27,919/- பணத்தை மனுதாரருக்கு போன் செய்த நபர் ஆன்லைன் மூலம் Paytm-க்கு மாற்றம் செய்துவிட்டதாக தெரிவித்து, பால்ராஜின் வங்கி கணக்கிற்குரிய ஸ்டேட்மென்ட் நகலை கொடுத்துள்ளார். இதையடுத்து இந்த மோசடி தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பால்ராஜ் புகார் மனு அளித்தார். இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ் உத்தரவின் பேரில், தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கந்தசாமி கண்காணிப்பின் கீழ் மற்றும் மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ஜெயா பிரின்ஸஸ் மேற்பார்வையில் மாவட்ட குற்றப் பிரிவு காவல் உதவி ஆய்வாளர் விஜய அனிதா வழக்கு பதிவு செய்துள்ளார்.

2 பேர் கைது

மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவுபடியும், துணைக் காவல் கண்காணிப்பாளர் சுப்பிரமணியன் மாவட்ட குற்ற ஆவணக்கூடம் (பொ) மாவட்ட குற்றப் பிரிவு அறிவுரையின் படியும், காவல் ஆய்வாளர் சாகுல் ஹமீது, தாளமுத்து நகர் உதவி ஆய்வாளர் சாம் சுந்தர் மற்றும் காவலர்கள் சகிதம் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடிவந்தனர். இது தொடர்பான குற்றவாளிகள் மேற்கு வங்கத்தில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மேற்கு வங்கம் மாநிலம் சென்று கூக்ளி மாவட்டம், மோக்ரா காவல் நிலையம் சரகத்தில் இருந்த கமாலுதீன் மகன் ஜாவீத் அக்தர் (19), மேற்கு வங்கம், கூக்ளி மாவட்டத்தைச் சேர்ந்த லால் முகம்மது மகன் காதீர் உசைன் (37) ஆகிய இருவரையும் மேற்கு வங்கம் சென்று அவர்களது இருப்பிடம் கண்டறிந்து போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து