முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆதரவற்றோர் பயன்பெறும் ‘அன்பு கரங்கள்” உதவி அமைப்பு ராமநாதபுரத்தில் கலெக்டர் நடராஜன் தொடங்கி வைத்தார்

வியாழக்கிழமை, 21 செப்டம்பர் 2017      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- ராமநாதபுரத்தில் ஆதரவற்றோர் பயன்பெறும் வகையில் அன்புகரங்கள் என்னும் உதவி அமைப்பினை கலெக்டர் முனைவர் நடராஜன் தொடங்கி வைத்தார்.
  ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஊராட்சி ஒன்றியம், பட்டணம்காத்தான் ஊராட்சியில் உள்ள அம்மா பூங்கா வளாகத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பாக ‘அன்பு கரங்கள்” தன்னார்வ உதவி அமைப்பினை கலெக்டர் முனைவர் நடராஜன் துவக்கி வைத்தார். மண்டபம் ஊராட்சி ஒன்றியம், பட்டணம்காத்தான் ஊராட்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கட்டுப்பாட்டில் அம்மா பூங்கா செயல்பட்டு வருகிறது. இப்பூங்காவில் தினந்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில் இளைஞர், முதியவர்கள் என வயது பேதமின்றி உடல்நலம் பேணிக் காத்திட நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். மேலும், மாலை வேளையில் பொதுமக்கள் தங்களது குடும்பத்தினருடன் வருகை தந்து மகிழ்ச்சியுடன் பொழுதுபோக்கும் இடமாகவும் இருந்து வருகின்றது.
 மேலும் தற்போது இப்பூங்காவின் நுழைவு வாயிலில் மாவட்ட கலெக்டர்  முனைவர்.ச.நடராஜன் அறிவுருத்தலின்படி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் ‘அன்பு கரங்கள்”  என்ற தன்னார்வ உதவி அமைப்பு துவங்கப்பட்டுள்ளது. வசதி வாய்புள்ளவர்கள் தாங்கள் உபயோகித்து தற்போது பயன்படுத்தாமல், பயன்படுத்தும் நிலையில் இருக்கும் பொருட்களை வசதி வாய்ப்பற்றவர்கள், தேவைப்படுவோர் பெற்று பயன்படுத்தும் நோக்கில் இந்த அன்பு கரங்கள் உதவி அமைப்பு துவங்கப்பட்டுள்ளது.

 குறிப்பாக உடைகள், புத்தகங்கள், பொம்மைகள், விளையாட்டு உபகரனங்கள், வீட்டு உபயோக பொருட்கள் உட்பட அனைத்து விதமான பயன்பாட்டு பொருட்களையும் வழங்கலாம்.  அன்பு கரங்கள் அமைப்பிற்கு பொதுமக்கள் மூலம் வழங்கப்படும் பொருட்கள் குறித்து விபரப் பதிவேடு பராமரித்திடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்தகைய சிறப்பு வாய்ந்த அன்பு கரங்கள் தன்னார்வ உதவி அமைப்பினை மாவட்ட கலெக்டர் முனைவர்.ச.நடராஜன் துவக்கி வைத்து பார்வையிட்டதோடு, பயனாளிகளுக்கு பயன்படும் உபகரனங்களை வழங்கினார். மேலும், இந்த திட்டத்தின் மூலம் ஆதரவற்றோர், வசதி வாய்ப்பற்றோர் பல்வேறு உபயோக பொருட்களை பெற்று பயனடைவார்கள். எனவே, பொதுமக்கள் அதிகளவில் தாமாக முன்வந்து தாங்கள் உபயோகித்து தற்போது பயன்படுத்தாமல், பயன்படுத்தும் நிலையில் இருக்கும் பொருட்களை பிறருக்கு உதவும் வகையில் அன்பு கரங்கள் அமைப்பிற்கு வழங்கிடலாம். மேலும், விருப்பமுள்ள தன்னார்வலர்கள் புதிய பொருட்களையும் வழங்கி உதவிடலாம் என கலெக்;டர் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வின் போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எஸ்.எஸ்.தனபதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) உமாமகேஸ்வரி, ஊராட்சிகளின் உதவி இயக்குநர் ஆ.செல்லத்துரை உள்பட பலர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து