சிறப்பு முகாம்களில் மாற்றுத்திறனாளி அடையாள அட்டை பெற்றுக்கொள்ள ஏற்பாடு கலெக்டர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தகவல்

புதன்கிழமை, 4 அக்டோபர் 2017      நீலகிரி
4ooty-1

இனிமேல் மாத கடைசி வெள்ளிக்கிழமை நடைபெறும் சிறப்பு முகாமில் மாற்றுத்திறனாளி அடையாள அட்டை பெற்றுக்கொள்ளளாம் என நீலகிரி மாவட்ட கலெக்டர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார். அடையாள அட்டை நீலகிரி மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஊட்டியிலுள்ள மலைப்பகுதி மேம்பாட்டுத் திட்ட கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. இம்முகாமில் மாவட்ட கலெக்டர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கி முகாமினை தொடங்கி வைத்து பேசியதாவது- நமது மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் இந்த சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடைபெறுகிறது. மேலும் ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளிக்கிழமைகளில் இச்சிறப்பு முகாம்கள் நடைபெறும். இம்முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெறாதவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும். அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் தங்களின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், குடும்ப அட்டை, ஆதார் அட்டை நகலுடன் வந்து பெற்றுக்கொள்ளலாம். எனவே அனைத்து மாற்றுத்திறனாளிகளும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார். 110 கோரிக்கை மனுக்கள் அதனைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 110 மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அலுவலர்கள் பரிசீலனை செய்து தகுதி இருப்பின் உரிய நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார். அதன்பின்னர் பிரிக்ஸ் பள்ளியில் நடைபெற்ற கிராம நிர்வாக அலுவலர்களுக்கான தேர்வினை மாவட்ட கலெக்டர் ஜெ.இன்னசென்ட் திவ்யா பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் தூய்மையே சேவை இயக்கத்தின் கீழ் பள்ளி மாணவ, மாணவியர்களிடையே நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளையும், அரசு அலுவலர்கள், தூய்மை காவலர்கள் ஆகியோரை பாராட்டி சான்றிதழ்களையும் கலெக்டர் வழங்கினார். இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் தெ.பாஸ்கரபாண்டியன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எஸ்.முருகேசன், கோட்டாட்சியர் ஆ.சிவகாமி, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் விக்டர் மரியஜோசப், , மாவட்ட சமூக நல அலுவலர் தேவகுமாரி, உதவி திட்ட அலுவலர் காசிநாதன் அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து