முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பள்ளிகளில் தடையின்றி வழங்கப்படுகிறது: நடைமுறைகள் தெரியாமல் அரசியல் செய்கிறார் ஸ்டாலின் - அமைச்சர் சரோஜா குற்றச்சாட்டு

செவ்வாய்க்கிழமை, 21 நவம்பர் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : முட்டை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தும் நடைமுறைகளைப் பற்றி புரிந்து கொள்ளாமல், அரசியல் செய்யும் நடவடிக்கையில் ஈடுபடுகிறார் என்று எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலினை அமைச்சர் சரோஜா பதிலடி கொடுத்துள்ளார்.

வாரம் 5 முட்டைகள்

பள்ளிகளில் சத்துணவில் முட்டை வழங்குவது தொடர்பாக சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் சரோஜா வெளியிட்ட அறிக்கை வருமாறு:-

எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்தின் கீழ், அங்கன்வாடி மையங்களில் பதிவு செய்துள்ள 1 வயது முதல் 2 வயதுடைய குழந்தைகளுக்கு வாரம் ஒரு முட்டையும், அங்கன்வாடி மையங்களுக்கு வருகை தரும் 2 வயது முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு வாரம் மூன்று முட்டைகளும் மற்றும் பள்ளிச்செல்லும் 6 வயது முதல் 15 வயது வரையிலான (1 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை) மாணவ / மாணவியர்களுக்கு வாரம் 5 முட்டைகளும் வழங்கப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின் மூலம், 69.31 லட்சம் குழந்தைகள் (16 லட்சம் அங்கன்வாடி குழந்தைகள் + 53.31 லட்சம் பள்ளி  செல்லும் மாணாக்கர்கள்) பயன்பெற்று வருகின்றனர்.

அதிகமான விலை நிர்ணயம்

2013-ம் ஆண்டிற்கு முன்னர், முட்டை கொள்முதல் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் மூலம் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு முட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு வந்தன.  இந்த நடைமுறையில் பின்வரும் குறைபாடுகள் காணப்பட்டன. மாவட்டந்தோறும் மாறுபட்ட விலைகளில் முட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டது. கொள்முதல் செய்யப்பட்ட முட்டையின் தரம் நிர்ணயம் செய்யப்படவில்லை. முட்டை விநியோகம் செய்யும் ஒப்பந்ததாரர்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் வேறுபட்ட விலையில் முட்டைகள் கொள்முதல் விலையினை நிர்ணயம் செய்தனர். விலைக்கு ஏற்றவாறு நிர்ணயிக்காமல் அதிகமான விலை நிர்ணயம் செய்யும் நிலை ஏற்பட்டது.

விளம்பரக் கட்டணம் கூடுதல்

ஒப்பந்தம் குறித்தான விளம்பரத்தை மாதம் தோறும் செய்தித்தாளில் வெளியிடுவதால் அதற்கான விளம்பரக் கட்டணம் கூடுதலாக ஏற்பட்டது. மாதம்தோறும் ஒப்பந்தப்புள்ளி கோரும் பொழுது, ஒப்பந்ததாரரிடம் முடிவான முட்டை விலை நிர்ணயம் செய்வதில் காலதாமதம் ஏற்பட்டது. மேற்காணும் குறைபாடுகளை கருத்தில் கொண்டு, அம்மாவின் (மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின்) உத்தரவின்படி, அரசாணை (நிலை) எண். 264, சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை நாள் 17.10.2012ல் மாநில அளவில் ஒரே ஒப்பந்தபுள்ளி கோரும் முறை நடைமுறை படுத்தப்பட்டது. இந்த அரசாணையின்படி, கீழ்க்கண்ட நடைமுறைகள் தற்போதுவரை பின்பற்றப்பட்டு முட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றது.

ஒரே விலையை மட்டுமே ...

தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப்புள்ளிகள் சட்டம் 1998 பிரிவு 31-ன்படியும்  மற்றும் விதிகள் 2000-ன் படியும் இயக்குநர் மற்றும் குழு இயக்குநர், ஒருங்கிணைந்த  குழந்தை வளர்ச்சிப்பணிகள் திட்டம் அவர்கள் முட்டைகள் கொள்முதல் செய்ய  நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசாணையில் ஆணையிடப்பட்டுள்ளது. ஓராண்டிற்கு முட்டைகள் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்யலாம் எனவும் அக்மார்க் தரத்திலான முட்டைகளையே கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் மேற்கண்ட அரசாணையில் ஆணையிடப்பட்டுள்ளது. முட்டை விநியோகஸ்தர்கள் ஒரு வருடத்திற்கான நிலையான ஒரே விலையை மட்டுமே குறிப்பிட வேண்டும். இவ்விலை, சந்தையில் மாதாமாதம் ஏற்படும் விலை மாறுதல்களை கருத்தில் கொண்டு, வருடாவருடம் ஏற்படும் விலை ஏற்றத்தினையும் எதிர் கொள்ளக்கூடியதாக இருத்தல் வேண்டும் என அரசாணையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒருமுறை மட்டும் மொத்தமாக....

அங்கன்வாடி குழந்தைகளுக்கு முட்டை வழங்குவதற்காக, ஒரு வாரத்திற்கு தேவையான முட்டைகள் அனைத்தும் அந்தந்த அங்கன்வாடி மையங்களுக்கு வாரம் ஒருமுறை மட்டும் மொத்தமாக ஒப்பந்ததாரர்களால் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு வாரம் 5 நாட்களுக்கு முட்டை வழங்குவதற்காக வாரத்திற்கு இரண்டு முறை சத்துணவு மையங்களுக்கு முட்டைகளை விநியோகம் ஒப்பந்ததாரர்களால் செய்யப்பட்டு வருகிறது. மேலும் சத்துணவிற்காக கொள்முதல் செய்யப்படும் முட்டைகளை வெளிச்சந்தையில் விற்பனை செய்வதை தடுப்பதற்காக முட்டைகளின் மேல் எட்டு வண்ணங்களில் முத்திரை பதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறாக முட்டைகளை கொள்முதல் செய்வதற்கான நடைமுறைகள், கொள்முதல் செய்யப்படும் முட்டைகளின் தரம் மற்றும் விலை நிர்ணயம் குறித்து சரியான வழிமுறைகளையும், நெறிமுறைகளையும் வகுத்து இத்திட்டத்தினை அம்மாவின் அரசு தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

முட்டைகள் தொடர்ந்து வழங்க...

20.11.2017 மற்றும் 21.11.2017 நாளிட்ட செய்திதாள்களில் “வரலாறு காணாத விலை உயர்வால் தமிழகத்தில் சத்துணவு முட்டை விநியோகத்தில் திடீர் சிக்கல்” என்ற செய்தியும், ‘பள்ளிகளில் சத்துணவில் முட்டை நிறுத்தம்?’ என்ற எதிர்கட்சித் தலைவரின் அறிக்கையும் வந்துள்ளது. ஆனால், இச்செய்திக்கும், அறிக்கைக்கும் மாறாக அனைத்து அங்கன்வாடி மற்றும் பள்ளி சத்துணவு மையங்களில் எவ்வித தடையுமின்றி முட்டைகள் தொடர்ந்து அரசால் எந்தவித தொய்வின்றி வழங்கப்பட்டு வருகிறது. வெளிச்சந்தையில் உள்ள முட்டைவிலை உயர்வினால் இத்திட்டத்திற்கு எந்தவித பாதிப்புமின்றி சிறப்பாக செயல்படுத்திட, குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவர்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டுள்ள அம்மாவின் அரசு, தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

அரசியல் செய்யும் நடவடிக்கை...

எனவே எதிர்கட்சித் தலைவர் அறிக்கையில் வெளியிட்டுள்ள செய்திகள் ஆதாரமற்ற, உண்மைக்கு புறம்பான தகவல் ஆகும். எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டத்தின் கீழ் அங்கன்வாடி குழந்தைகளுக்கும் மற்றும் பள்ளி மாணாக்கர்களுக்கும் தங்கு தடையின்றி சத்துணவுடன் முட்டையும் வழங்கப்படும் திட்டம் திறம்பட செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே ஓராண்டுக்கு என ஆகஸ்ட் 2017 முதல் ஜூலை 2018 வரை ஒப்பந்தப்புள்ளிகளில் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ள விலையில் ஒப்பந்ததாரர்கள் எந்த தொய்வுமின்றி முட்டைகளை விநியோகம் செய்து வரும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவரின் அறிக்கை இத்திட்டத்தை செயல்படுத்தும் நடைமுறைகளைப் பற்றி புரிந்து கொள்ளாமல், அரசியல் செய்யும் நடவடிக்கையாகவே எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. இவ்வாறு அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து