பாரதியாரின் முற்போக்கு சிந்தனைகளை இளைய சமுதாயத்தினர் பின்பற்ற வேண்டும். கலெக்டர் என்.வெங்கடேஷ் வேண்டுகோள்

திங்கட்கிழமை, 11 டிசம்பர் 2017      தூத்துக்குடி
tutycorin collector

தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரத்தில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், மகாகவி பாரதியார் அவர்களின் பிறந்த நாள் விழா, மகாகவி பாரதியார் மணிமண்டபத்தில், கலெக்டர் என்.வெங்கடேஷ்  தலைமையில்  நடைபெற்றது.  இவ்விழாவில் கலெக்டர் என்.வெங்கடேஷ் , மகாகவி பாரதியார் மணிமண்டபத்தில் உள்ள அவரது முழு உருவ வெண்கலச்சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.பின்னர் கலெக்டர் என்.வெங்கடேஷ்  தெரிவித்ததாவது:

மாலையணிவித்து மரியாதை

பார் புகழும் மகாகவி பாரதியார் அவர்களின் 136வது பிறந்த நாள் விழா தமிழ்நாடு அரசின் சார்பில் அவர் பிறந்து வாழ்ந்த ஊரான எட்டையபுரத்தில் அவரது மணிமண்டபத்தில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தமிழக அரசு சார்பில் சுதந்திரப்போராட்ட வீரர்களையும், மொழி அறிஞர்களையும் கௌரவிக்கும் விதமாக அவர்களின்  நினைவாக மணிமண்டபங்கள் எழுப்பப்பட்டு  அவர்களது பிறந்த நாள் விழா, அரசு விழாவாக வருடந்தோறும, கொண்டாடப்பட்டு வருகிறது.  நமது தூத்துக்குடி மாவட்டம் நாட்டுக்காக உழைத்த சுதந்திரப்போராட்ட வீரர்களை அதிகமாக உருவாக்கி தந்த மாவட்டம்.  நமது மாவட்டத்திலிருந்து பெரும்பாலானோர் சுதந்திரப்போரட்டத்தில் ஈடுபட்டு தங்களது உயிரை துறந்துள்ளனர்.  அவர்களில் பலர் தேசத்தலைவராகவும் உயர்ந்துள்ளனர். அந்த வகையில் தமது கவிதையால் விடுதலை உணர்வை நாட்டுமக்களின் மனதில் பதித்த, மகாகவி பாரதியார்  இன்று 1882-ல் எட்டையபுரத்தில் பிறந்தார்.  தமது கனல் தெறிக்கும்  விடுதலைப்போர் கவிதைகள் வாயிலாக பாமரர்களுக்கும் சுதந்திர உணர்வை உருவாக்கி சுதந்திரப் போராட்ட களத்தில், கலந்து கொள்ளசெய்து நாட்டையே திரும்பி பார்க்க வைத்தவர், நமது மகாகவி பாரதியார். இவர் ஒரு கவிஞர் மட்டும் இல்லாமல் ஒரு சிறந்த எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் தன்னுடைய எளிய நடையிலான பாட்டுகளின் மூலமாக மக்களின் சிந்தனைகளை தட்டி எழுப்பியவர். விடுதலை போராட்ட காலத்தில் இவருடைய தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகள் மக்களை ஒருங்கிணைத்த காரணத்தினால் தேசிய கவியாக போற்றப்பட்டார். ‘மீசை கவிஞன்’ ‘முண்டாசு கவிஞன்’ என்றும் தமிழ் இலக்கிய உலகம் போற்றும் மகாகவி பாரதியார்  ‘ கண்ணன்பாட்டு’ ‘குயில்பாட்டு’ ‘பாஞ்சாலி சபதம்’   ‘புதிய ஆத்திச்சூடி’  போன்ற புகழ்பெற்ற காலத்தால் அழியாத காவியங்களை படைத்தார்.விடுதலை போராட்ட களத்தில் பல்வேறு இன்னல்களையும், துயரங்களையும் சந்தித்தபோதும், ஆங்கிலேயர்களால் பலமுறை சிறைப்பட்ட போதிலும் தமது இறுதிமூச்சு வரை கவிதை என்னும் வேட்கையை அவர் துறக்கவேயில்லை. மகாகவி பாரதியார் அவர்களுக்கு நூற்றாண்டு விழா 11.12.1981 அன்று அன்றைய தமிழ்நாடு முதல்வர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களால் எட்டையபுரத்தில் கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது. அன்னாருடைய நினைவை போற்றுகின்ற வகையில் தமிழக அரசு அவருக்காக மணிமண்டபத்தை கட்டி, ஒவ்வொரு ஆண்டும் அரசு சார்பில் விழா எடுத்து சிறப்பிக்கிறது. இந்த நாளில, தமிழகத்திற்கு பெருமை சேர்த்த மகாகவி பாரதியார் விட்டுச்சென்ற கொள்கைகளை நாம் அனைவரும் பின்பற்ற வேண்டும். என கலெக்டர் என்.வெங்கடேஷ்  தெரிவித்தார்கள்.  இவ்விழாவில் மகாகவி பாரதியார் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நடைபெற்ற பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற 6 மாணவ, மாணவிகளுக்கு செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் பரிசுகளும், வருவாய்த்துறையின் சார்பில் சமூக பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் 11 மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகைக்கான ஆணையினை கலெக்டர் என்.வெங்கடேஷ்  வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் கோவில்பட்டி கோட்டாட்சியர் பி.அனிதா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தி.நவாஸ்கான், மாவட்ட கல்வி அலுவலர் (கோவில்பட்டி) டி.ராஜேஸ்வரி, பாரதி நூற்றாண்டு மகளிர் தொழில்நுட்ப கல்லூரி முதல்வர் கே.பேபிலதா, வட்டாட்சியர் சு.சூரியகலா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து